சக பயணியே, நலந்தானே?

ஒரு இனிய அறிமுக வரியாக இருக்கவேண்டியது இப்போது ஆழமான அக்கறையுடன் தொனிக்கும் வரியாகிவிட்டது. ஏனென்றால், வையம் வைரஸ் மயம்.

இதற்கிடையில் எனது பயணம் தொடர, தாய்வானிலிருந்து தாயகத்துக்கு வந்துசேர்ந்தேன். உடனே, இந்தியா முழுதும் வீடடங்கி இருக்கும் உத்தரவு. உலகெங்கிலும் மனிதர்கள் ஒருவரையொருவர் அணுக முடியாத சூழல். பால் வாங்கப் போகும்போதும் தனிமனித இடைவெளி பார்க்கவேண்டிய பொறுப்பு. ஆனால், பாரெங்கும் உள்ள மனிதர்களுடன் நமக்குள்ள உறவு பலமாகத் தெரியவந்த காலமும் இதுதான்.

எச்சரிக்கை தேவை. ஆனால், அச்சம் தேவையில்லை. அன்பும் அறிவியலும் கொண்டு நாம் இந்தச் சூழலை நிச்சயம் கடப்போம். நிலைமை சரியான பிறகு, பலர் பழைய எல்லைகளையும் அடையாளங்களையும் மீண்டும் தூக்கிப் பிடிப்பார்கள். அவர்கள் எண்ணைக்கையில் முன்பைவிடச் சற்றுக் குறைவாக இருப்பார்கள். மனிதமே அடிப்படை என்பவர்கள் முன்பைவிடச் சற்று அதிகமாக இருப்பார்கள். அதுதான் மனிதத்தின் முன்னோக்கிய பயணம். தொடர்வோம்.

இந்த மாத ‘பாதையெல்லாம் மல்லியப் பூ’ செய்திமடலில்

  • 100+ தரமான இலவச நூல்கள் (தமிழிலும்)
  • கொரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்: ஹராரி (தமிழில்: அண்ணாதுரை)
  • ஊட்டாத தாயின் கனக்கின்ற பால்போல் - வாசகரால் வந்த வரி
  • முன்பின் தெரியா ஓவியரின் அன்பும் கனிவும் அக்கறையும்
  • அண்டத்தின் அணையா அறிவுச் சுடர்: ஸ்டீபன் ஹாவ்கிங்
  • முகநூல் பக்கத்தில் 300+

உங்களது நண்பர்கள் யாருக்காவது இந்தச் செய்தி மடல் சுவாரஸ்யப்படும் / பயன்படும் என்றால், அவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் பாதையிலும் மல்லியப் பூ மணக்கட்டுமே!

வாங்க, சேர்ந்தே நடப்போம்!

அன்புடன்

பயணி தரன்

மூடிய கதவும் விரியும் உலகும்:

100+ தரமான இலவச நூல்கள்

கொள்ளைக்காரக் கொரோனாவுக்காக கதவைத் திறக்க பயந்துகிடக்கும் சூழலில், மனதைத் திறக்க ஒரு புதையல். இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்க, இந்தியாவின் தேசிய நூல் நிறுவனம் அதன் பதிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாக PDF வடிவில் தந்துள்ளது. பெரும்பாலும் சிறுவர்களுக்கான இந்த நூல்களில் சில தமிழ் மற்றும் ஆங்கில நூல்களும் உள்ளன. #StayHomeIndiaWithBooks!

இலவசமாகப் புத்தகங்களைத் தரவிறக்க, இங்கே சொடுக்கவும்.

கொரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்

நண்பர் மா. அண்ணாதுரை மனதுக்கு நெருக்கமானவர். நான் இந்திய குடிமைப்பணியில் சேர்ந்த நிகழ்வில் கிடைத்த முக்கியமான நண்பர்களில் ஒருவர். பகுத்தறிவு, சமத்துவம், தமிழ் மொழி என்று ஆழமான ஆர்வம் உடையவர். இந்திய செய்திப் பணியில் அதிகாரியாக பணிபுரிகிறார். சமீபத்தில் வெளியான “கொரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்” எனும் யுவல் நோவா ஹராரி எழுதிய முக்கியமான கட்டுரையை அக்கறையுடன் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அயோக்கியர்கள் புனையும் கதைகளை அற்பர்கள் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற அறிவார்ந்த விஷயங்கள் தமிழுக்கு வந்துசேர்வது கொண்டாடப்பட வேண்டிய விஷயம். வாழ்த்துகளும் நன்றிகளும், தேவா.*

(*நானும் அவரும் ஒருவரையொருவர் தேவா என்று அழைத்துக்கொள்வோம். காரணத்துக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னே பயணித்து கம்பராமாயணத்துக்குப் போகவேண்டும். இப்போதைக்கு வேண்டாம். வைரஸையும் அதற்குப் பின்வரும் உலகத்தையும் பார்ப்போம்.)

கட்டுரை:

கொரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்:

ஹராரி (தமிழில்: அண்ணாதுரை)

இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.

மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும் மக்களும் எடுக்கப்போகும் முடிவுகள் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. அவை நமது சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது, நமது பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றையும் முடிவு செய்யும். நாம் விரைந்து, உறுதியாக முடிவெடுக்க வேண்டும். நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்று முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, தற்போதைய சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதோடு, இந்தச் சிக்கல் முடிவடைந்த பிறகு எப்படிப்பட்ட உலகை நாம் அடையப் போகிறோம் என்பதையும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆமாம். இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிடும்; மனித இனம் பிழைத்திருக்கும்; நம்மில் பலர் உயிரோடுதான் இருப்போம் - ஆனால் நமது உலகம் மாறிப் போயிருக்கும்.

முழு கட்டுரையையும் படிக்க...

வாசகரால் வந்த வரி

உன் காதல் வாசம்

என் தேகம் பூசும்

காலங்கள் பொய்யானதே

ஊட்டாத தாயின்

கனக்கின்ற பால் போல்

என் காதல் கிடக்கின்றதே

எனது பிப்ரவரி மாத செய்திமடலில் எனக்குப் பிடித்த வரிகளை எங்கள் சமையலறையில் எழுதிவைப்பது பற்றிச் சொல்லியிருந்தேன். (இங்கே)

வாசகர்களில் சிலர் அவர்களுக்குப் பிடித்த சிலவரிகளை எழுதியிருந்தார்கள். அதில் ஒரு முத்து இது. இந்த அழகிய வரியைச் சுட்டிக்காட்டியவர் வாசகர் ராஜி ஏழுமலை. படம்: காலா. கவிஞர்: உமா தேவி.

இந்த வரியை எங்கள் வீட்டுச் சமைலறையில் என் கைப்பட எழுதி புகைப்படம் எடுத்தேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

முன்பின் தெரியா ஓவியரின் அன்பும் கனிவும் அக்கறையும்

“அம்மா ஒரு எழுத்தோவியர். Calligraphist. உங்களுக்காகவே ஒரு சிறிய ஓவியத்தை வரைந்திருக்கிறார். அதை உங்களிடம் நேரடியாக கொடுக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார். அதைக் கொடுக்க உங்களை ஒரு சில நிமிடங்கள் சந்திக்க முடியுமா?” என்று ஒரு தாய்வான் நண்பர் எங்களை அணுகினார். “அதற்கென்ன, அவசியம் வாருங்கள்” என்று சொன்னேன்.

அவரை நேரில் சந்தித்தபோது, அவருடைய தாய் திருமிகு யே, பல வருடங்களாக சீன எழுத்துக்களை ஓவியமாக வரையும் கலையைக் கற்றவர் என்று அறிந்தேன். அவர் எனக்காக வரைந்த எழுத்தோவியத்தை அந்த நண்பர் தந்தார்.

முதலில் அந்தப் படைப்பில் இருக்கும் வரிகளை பற்றிச் சொல்லிவிடுகிறேன்...

அண்டத்தின் அணையா அறிவுச் சுடர்: ஸ்டீபன் ஹாவ்கிங்

அறிவியல் அறிஞர் ஹாவ்கிங் மார்ச் 2018இல் இறந்தபோது, எனது ஊடகத்துறை நண்பர்கள் என்னைத் தொடர்புகொண்டு ஒரு கட்டுரை எழுதித்தரச் சொன்னார்கள். தமிழில் அடர்த்தியான அறிவியல் விஷயங்களைப் பற்றித் தெளிவாக எழுதப்படும் கட்டுரைகள் இன்னும் அதிகரிக்கவேண்டும் என்னும் என்னுடைய ஆசைக்கும் இது வலுசேர்த்தது. எனவே, இருந்த வேலைகளை ஒதுக்கிவிட்டு ஒரு கட்டுரையை எழுதினேன். அது, ஏப்ரல் 2018 தீராநதி இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. 200 வருடங்கள் ஓடினாலும் அவர் அறிவியல் ஒளிகொண்டு விளக்கிய விஷயங்கள் மனிதகுலத்தை மேம்படுத்தும்.

“கடவுள் இல்லை. பேரண்டத்தை வடிவத்துடன் யாரும் படைக்கவில்லை, காக்கவில்லை. வடிவமாக அமைந்ததெல்லாம் தங்கியது, மற்றது அழிந்தது. அணுத்துகள், மண் புழு, மனித இனம், தண்ணீர், சூரியப் பிழம்பு, அண்ட சராசரங்களின் அசைவுகள் என்று அத்தனையையும் அவற்றின் வடிவமும் செயலும் எப்படி உருவாகி எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அறிவியலின் துணை கொண்டு நாம் விளக்கிவிட முடிகிறது. அன்பை, காதலை, அழகை பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகள் மூலம் அறிவியல் அணுகிவிட்டது. மூளை கம்பியூட்டர் போலத்தான். நின்று போன கம்பியூட்டருக்கு சொர்கம் நரகம் மறுபிறப்பு எல்லாம் கிடையாது” என்றார் ஸ்டீபன் ஹாவ்கிங்.

முகநூல் பக்கத்தில் முன்னூறுக்கும் மேல்...

நான் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று பல சமூக வலைத்தங்களைத் தொடர்ந்து பயன்படுத்துபவன். ஆனால், எனது நாடோடி வாழ்க்கையால், அந்தத் தளங்களில் என்னுடன் உரையாட பல வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். எனவே, பெரும்பாலான சமயங்களில் ஆங்கிலமே பயன்பாட்டு மொழியாக அங்கே இருக்கிறது. எனவே, எனது பெரும்பாலான தமிழ்ப் பதிவுகளைப் பதிய, பயணி தரன் முகநூல் பக்கம் ஒன்றைச் சில மாதங்களுக்கு முன்பு உருவாக்கினேன். சமீபத்தில், அதில் 300கும் மேற்பட்ட நண்பர்கள் அந்த முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளதாக முகநூல் அறிவித்தது.

நீங்கள் முகநூலில் இருந்தால், என்னை இங்கேயும் தொடர்புகொள்ளலாம்:

https://www.facebook.com/PayaniDharan

உங்கள் அனைவரின் உற்சாகத்துக்கும் உரையாடலுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!

பிடித்தது, நினைத்தது, தோன்றியது...

இந்த மின்னஞ்சல் கடிதம் பற்றிய உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.

dharan@payani.com

முந்தைய செய்திமடல்களைப் படிக்க:

202002

201912