சக பயணியே, நலந்தானே?

கடந்த சில வாரங்களில் நடந்த விஷயங்களை ‘பாதையெல்லாம் மல்லியப் பூ’ செய்திமடல் வழியாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

உங்களது நண்பர்கள் யாருக்காவது இந்தச் செய்தி மடல் சுவாரஸ்யப்படும் / பயன்படும் என்றால், அவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் பாதையிலும் மல்லியப் பூ மணக்கட்டுமே!

வாங்க, சேர்ந்தே நடப்போம்!

அன்புடன்

பயணி தரன்

தெரிந்த வரிகளில் மிளிரும் தெரியாத அழகுகள்

உங்களுக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும். திடீரென்று ஏதாவது ஒரு பழைய பாடலின் வரி உங்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அன்றைக்கெல்லாம் நாம் வேலை, காகிதம், சந்திப்பு என்று அலைந்துகொண்டிருந்தாலும், அந்த ஒற்றை வரி மட்டும் அடம்பிடிக்கும் குழந்தையாய் நம் கவனத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு விட்டுவிடாமல் கூடவே வரும்.

நான் காலையில் எழுந்து காபி போடும் நேரங்களில், இப்படித்தான் மனதில் திடீரென்று ஏதாவது ஒரு வரி கேட்கத்துவங்கும். தெரிந்த பாட்டாகத் தான் இருக்கும். பலமுறை கேட்ட வரியாகத் தான் இருக்கும். ஆனால், அன்றைக்கு ஸ்பெஷலாகத் தெரியும்.

எங்கள் வீட்டுச் சமையலறையில் ஒரு சின்ன வெள்ளைப் பலகையை வைத்திருக்கிறோம். என் மனதில் ரிப்பீட்டில் ஒலிக்கும் வரியை, என் கைப்பட, அந்தப் பலகையில் எழுதி வைப்பேன்.

அந்த ஒரு வரியை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து அழகு சொட்டிக்கொண்டேயிருக்கும். அத்தனை அழகும் இத்தனை நாள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல் இருக்கும்.

(இந்தப் பழக்கத்தில் இன்னொரு கூடுதல் பலன்: காபி சரியாக வரவில்லை என்றாலும் ரொம்பவும் கவலையாக இருக்காது.)

அப்படி நான் எழுதிய பாடல் வரிகளின் சில ஒளிப்படங்கள் இங்கே உங்களுக்காக.

வைரஸ் என்றால் விஷம் என்று பொருள்

‘ஒரு கப்பல், நூறு துறைமுகங்கள்’ நூலுக்காக, எனக்கு ஆர்வம் ஏற்படும் துறைகளிலிருந்து பல நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓரிரு வாரங்கள், வளரிளம் பருவம் என்னும் இளைஞர்களைப் பற்றிய சில நூல்களை வாசித்தேன். நான் வாசிப்பதில் மற்றவர்களுக்கும் உடனடியாகப் பயன் தரும் என்னும் சில குறிப்புகளை மட்டும் சிறு கட்டுரைகளாக எழுதி அச்சுக்கு அனுப்புகிறேன். அவ்வகையில் இந்துவின் தமிழ் திசை நாளேட்டில் “இளைஞர்களை தற்கொலையில் இருந்து தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?” என்னும் கட்டுரை ஜனவரி மாதம் வெளியானது. அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம்:

இளைஞர்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் உள்ள உறவு சமீபத்தில் தீவிரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், போதை பற்றிய விஷயங்களை ‘நன்மையும் தீமையும்’ (Goodness Vs Evil) என்னும் தராசில் வைக்காமல் பயனும் பாதிப்பும் (Benefits Vs Damage) என்னும் அறிவுப்பூர்வமான தராசில் வைத்துப் பார்க்கச் சொல்லித்தந்தால் பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என்கிறார்கள் மனவியல் அறிஞர்கள். அதை எப்படித் துவங்கி எப்படிச் செய்யவேண்டும் என்பதை விளக்கி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அது விரைவில் அச்சில் வரவிருக்கிறது.

நூறு துறைமுகங்கள் நூலுக்காக, அடுத்ததாக நான் படித்துக்கொண்டிருக்கும் துறை, வைரஸ்கள். மேலே சொன்னதைப் போல, சீனாவின் வூஹான் நகரத்தில் அடையாளம் காணப்பட்ட கரோனா வைரஸ், உலகின் தலைப்புச் செய்தியாக மாறிவிட்டது. ஆனால் வைரஸ் என்பது மனித இனம் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. ஆகவே, மனிதனுக்கும் வைரஸுக்கும் உள்ள உறவு சிக்கலானது, ஆழமானது, தவிர்க்க முடியாதது. அவைகளைப் பற்றிப் புரிந்துகொண்டால், அவற்றுடனான நம் உறவு மேம்படலாம். இது குறித்த கட்டுரைகள் விரைவில் வெளியாகும். இப்போதைக்கு, வைரஸ்களைப் பற்றி நான் படித்த சில நூல்களிலிருந்து, என் கவனத்தைக் கவர்ந்த சில விஷயங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். ( வைரஸ் என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் விஷம் என்று பொருள்...📍 ஒரு லிட்டர் கடல் தண்ணீரில் 10 பில்லியன் வைரஸ்கள் உள்ளன 📍 மனித DNAவிலேயே 8% வரை வைரஸ்களின் கலப்படம் உள்ளது)...

ஊகான்? ஹுபேய்? சரியாகச் சொல்வது எப்படி?

சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் வூஹான் என்னும் தலைநகரத்தில் புதிய கொரோனா வைரஸ் 2019 அடையாளம் காணப்பட்டபிறகு, அந்த இடங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. சீன மொழி பயிலும் பார்வையிலிருந்து அந்தப் பெயர்களைத் தமிழில் எப்படிச் சரியாக எழுத வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருப்பது தெரிகிறது.

வூஹான் நகரத்தை,

தினத்தந்தி, உகான் என்கிறது.

பிபிஸி, வுஹான் என்கிறது.

தினச்சுடர், வுஹன் என்கிறது.

இந்து தமிழ் திசை, வூகான் என்கிறது.

தினகரன், ஊகான் என்கிறது.

ஒரு சில ஊடகங்களில் வூஹான் என்னும் ‘மாநிலம்’ என்றும் எழுதியிருக்கிறார்கள்.


ஹூபெய் மாநிலத்தின் பெயரும் தவறாக எழுதப்படுகிறது.

தினபூமி ஹூபே என்கிறது.

மாலைமலர் ஹுபேய் என்கிறது.

தினமலரில் ஹீபெய் என்றிருக்கிறது.

விகடன் குழுமத்தில் கொரோனா வைரஸ் பற்றிய பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அவற்றில் இப்பெயர்கள் ஹூபே, ஹூபெய், வூகான், வூஹான் என்று எல்லா முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது.

ஹூபெய் மாநிலத்தின் வூஹான் என்னும் தலைநகரம் என்பதுதான் சரியாக எழுதும் முறை.

பிடித்தது, நினைத்தது, தோன்றியது...

இந்த மின்னஞ்சல் கடிதம் பற்றிய உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.

dharan@payani.com

முந்தைய செய்திமடல்களைப் படிக்க

201912