புதுப் பயணத்தின் துவக்கம்

வணக்கம் நண்பரே!

நலந்தானே?

கடந்த 2 வாரங்களில் நமது நட்புக்குழுவில் இணைந்து–பல நாடுகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் வாசக நண்பர்கள் கொண்ட குழு இது–எனக்குத் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட அத்தனை பேருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுதியிருக்கிறேன். இப்படி நேரடியாக உங்களுடன் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த மாத ‘பாதையெல்லாம் மல்லியப்பூ’ கடிதத்தில்,

  1. என் பயணத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நம்ப முடியாத உண்மைக் கதையைச் சொல்கிறேன். சீன மொழியின் தொடர்பு இருப்பதால், இந்தச் சம்பவம் தாய்வான், சிங்கப்பூர், மலேசியா என்று பல பன்னாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகிவிட்டது. விரைவில் தமிழிலும் ஒரு Creative Non-fictionஆக, உண்மைச் சிறுகதை வடிவில், அச்சில் வரப் போகிறது.

  2. ரெண்டு கழுதை வயசாச்சி, புத்தி மட்டும் இன்னும் வளரலை’ என்பதெல்லாம் இனி செல்லாது. நீங்கள் பெரியவரோ சிறியவரோ, ‘டீன் ஏஜ் பசங்க’ பற்றிய புரிதல் அவசியம். இந்த நெடுகிய சூறாவளிப் பருவம் பற்றி சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன? பயனுள்ள பத்து விஷயங்களைப் பார்ப்போம். (‘ஒரு கப்பல், நூறு துறைமுகங்கள்’ நூலிலிருந்து உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் முன்னோட்டம்.)

  3. கூடவே, “எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்” நூலைப் படித்துவிட்டு உங்களில் சிலர் எழுதிய பின்னூட்டங்களைப் பார்ப்போம். நூலின் அடுத்த பதிப்பில் சில வாசகர்களின் பின்னூட்டங்களையும் சேர்க்கப் போகிறேன். எனவே, நூல் பற்றிய உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

உங்களது நண்பர்கள் யாருக்காவது இந்த மின்னஞ்சல் கடிதம் சுவாரஸ்யப்படும் / பயன்படும் என்றால், தாராளமாக அவர்களுக்கு forward செய்து அனுப்பிவையுங்கள். அவர்களின் பாதையிலும் மல்லியப்பூ மணக்கட்டுமே!

வாங்க, சேர்ந்தே நடப்போம்!

அன்புடன்

பயணி தரன்

“நட்பே!” என்னும் சொல் போதும்

தமிழில் “முஸ்தபா, முஸ்தபா” அல்லது “பசுமை நிறைந்த நினைவுகளே!” பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அதேபோல ஒரு பாட்டை நாங்கள் 20 வருடத்துக்கு முன்னால் சீனாவில் கேட்டோம். இதைப் பாடிய Wakin Chau

இந்தப் பகுதியில் ரொம்ப பிரபலம். (39 ஆல்பங்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள்...). இந்த மாதம் தாய்வானில் தற்செயலாக அவரைப் பார்த்தும் பேசியும் முதலில் அவரை அடையாளம் தெரிந்துகொள்ளாமல் (யார் எதிர்பார்த்திருக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்!) கொஞ்சத்தில் தவறவிட்டிருப்போம். கடைசி நிமிடத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச முடிந்தது. இப்போது நாங்கள் நிஜமாகவே நண்பர்கள்.

இந்த சுவாரஸ்யமான உண்மை நிகழ்ச்சி, ஏற்கனவே தாய்வான், சிங்கப்பூர், மலேசியா என்று பல ஊடகங்களில் பன்னாட்டுச் செய்தியாகிவிட்டது. விரைவில் தமிழிலும் ஒரு Creative Non-fictionஆக, உண்மைச் சிறுகதை வடிவில், அச்சில் வரப் போகிறது. அதற்கு முன்னால், நம் நட்புக்குழுவினருக்கு இரண்டு பகிர்வுகள்:

1. ஒரு ஸ்பெஷல் தொகுப்பு: “பங்யோ!” - 20 வருடத்து உண்மைச் சிறுகதை. உண்மைக் கதையின் பகுதிகள், பாடல் மொழிபெயர்ப்பு, சுட்டிகள்.

2. “ஏய், நாம கூட இப்படித்தானே எப்பவும் ஒன்னுமன்னா சுத்திக்கிட்டு இருந்தோம்?” என்று உங்கள் நட்புகளை வாட்ஸாப்பில் கேட்க, அழகான வடிவமைப்பில் அந்தப் பாடலின் வாழ்த்து அட்டை.

நெடுகிய சூறாவளி

வாழ்க்கையில் ‘டீன் ஏஜ்’ காலகட்டம் ரொம்ப அநியாயம். ஒரு நிமிஷம், “ரெண்டு கழுதை வயசாச்சு, இது கூடத் தெரியாதா?” என்று கேட்கும் வீட்டுப் பெரியவர்கள், அடுத்த நிமிஷமே, “மொளச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ளே பெரிய இதுன்னு நெனப்பா மனசுல?” என்றும் கேட்பார்கள். எப்போதுமே மிகவும் அவதிக்குள்ளாகும் ஒரு வளர்ச்சியின் கட்டமாக adolescence என்கிற வளரிளம் பருவத்தைச் சொல்லுவார்கள் (1904லேயே ஒரு அறிஞர் இதை ‘சூறாவளியும் அழுத்தமும்’ என்று விவரித்தார்). ஆனால், மிகமிகமிக வேகமாக மாறிவரும் தற்கால உலகில், ‘நிதானமான’ பருவத்தில் இருப்பவர்களே நிலைதடுமாறும் சூழல். இந்த அதிவேகமாய் மாறும் உலகில், எப்போதுமே தங்களுக்குள் சூறாவளியும் அழுத்தமும் கொண்ட ‘அடலசன்ஸ்’ பருவத்தினரின் கதி என்ன? இந்தப் புது உலகின் வளரிளம் பருவத்தினரிடம் பழக, புதிய புரிதல்கள் எதுவும் நமக்கு வேண்டாமா?

இப்போது இந்தத் துறையில் பல ஆராய்ச்சிகளும் புதிய நிதர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மனோதத்துவ நிபுணர்களும் அறிவியல் அறிஞர்களும் முன்வைக்கும் கருத்துக்கள் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணமாய், தலையாய பிரச்சனையான மொபைல் போன் விஷயத்தில், "ரொம்ப தூங்கற பசங்களை ‘தலைகாணிப் பழக்கத்துக்கு அடிமை'ன்னு சொல்லுவீங்களா? அவங்க போனுக்கு அடிமை இல்லை. உங்க காலத்தில் நீங்க டீக்கடையில் அரட்டை அடிச்ச மாதிரி தான் இப்போ அவங்க போனில் அரட்டை அடிக்கறாங்க. ஆனா, அதுக்கு ஒரு வகையில நீங்களும் காரணம்” என்று ஆரம்பிக்கிறார்கள் இன்றைய அறிஞர்கள். நான் இந்தத் துறை பற்றிப் படித்த நூல்களிலிருந்து மனோதத்துவ நிபுணர்களும் அறிவியல் அறிஞர்களும் முன்வைக்கும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்ற பத்து விஷயங்களை இங்கே பார்ப்போம். (‘ஒரு கப்பல், நூறு துறைமுகங்கள்’ நூலிலிருந்து உங்களுக்காக ஒரு முன்னோட்டம்.)

சாக்லேட் நடையில் மொழி நூல்

நச்சென்று சில வார்த்தைகளில் தனது பின்னூட்டத்தைத் தந்திருக்கிறார் நண்பர் விஸ்வநாதன் தம்பியண்ணா: “சாக்லேட் நடையில் மொழி நூல். நன்றி.”

நண்பர் கல்பனா ஹரியின் “நெடுகிலும் இழையோடும் நகைச்சுவை, சலிப்பு தட்டாமல் படிக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, 19-ம் சேப்டரைப் படித்துவிட்டுச் சிரிப்பு தாள முடியவில்லை” என்கிற பின்னூட்டத்தைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை அந்த ‘காப்பி மறப்பது நன்றன்று என்பதை மறந்துவிட்டக் கயவர்க’ளை நினைவுபடுத்திக்கொண்டேன்.

என்ன ஒரு அருமையான அனுபவம்” என்ற நண்பர் தீபா ஸ்ரீதரன், “இப்படியும் ஒருவரால் ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்க முடியுமா? என்று வியந்து போனேன். கதைகளும், நகைச்சுவை உணர்வுகளும், சுவாரசியமான அனுபவங்களும்.... Thoroughly enjoyed it....” என்று தொடர்கிறார். அவருக்கு நானும் சிறு பின்னூட்டம் அளித்திருக்கிறேன்...

பிடித்தது, நினைத்தது, தோன்றியது...

உங்களது நண்பர்கள் யாருக்காவது இந்த மின்னஞ்சல் கடிதம் சுவாரஸ்யப்படும் / பயன்படும் என்றால், தாராளமாக அவர்களுக்கு forward செய்து அனுப்பிவையுங்கள். அவர்களின் பாதையிலும் மல்லியப்பூ மணக்கட்டுமே!

இந்த மின்னஞ்சல் கடிதம் பற்றிய உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.

dharan@payani.com