3-2-1: மனதின் விளையாட்டு, தலையாட்டாத சீடன், பட்டறிவுப் பதக்கம்.

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(13 டிசம்பர் 2020)

வணக்கம், சக பயணியே!

நலந்தானே? இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)


சமீபத்தில் தில்லியில் உள்ள ஒரு பாண்டிச்சேரி உணவகத்தில் இந்த வண்ண வண்ண மொசைக் ஓடுகள் பதித்த சுவரைப் பார்த்தேன். மிகச் சிறுவயதில் என் நண்பர்களுடனும் உடன்பிறந்தவர்களுடனும் ஆடிய விளையாட்டு நினைவு வந்தது. இது போன்ற கற்கள் பதித்த தரையில் நின்றுகொண்டு, குறிப்பிட்ட ஓட்டை விவரிப்போம். “செவப்பா இருக்கும். அதுல நீலக் கலர்ல வட்டவட்டமா பூ போட்டிர்க்கும்” போல. யார் ஓடிப்போய் முதலில் அந்த ஓட்டில் கைவைத்துச் சுட்டுகிறார்களோ, அவர்களுக்கு ஒரு புள்ளி. இப்போதெல்லாம் மனம் இந்த விளையாட்டை அதுவே விளையாடிக்கொள்கிறது. எந்தப் பொருளைப் பார்த்தாலும் எங்கே இந்த நினைவின் வேர் என்று தேடிப்போய் அங்கே சுட்டுகிறது. மகிழ்வில் களிக்கிறது.



(ii)


“நீ போயிட்டா, உன் அப்பா, உன் அம்மா, உன் தம்பி, தங்கச்சிங்க என்ன ஆவாங்க?”ன்னு கேட்டேன்.

“கம்யூனிஸ்ட் கட்சி அவங்கள பட்டினிலெ சாக விட்றாது”ன்னு சொன்னான்.

“வடகிழக்குப் போய் என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டேன்.

“தெரியாது. சாவற வரைக்கும் இங்கயே கிடக்கிறத விட அது மேல். என்னப் பாரு. முப்பது வயசாகப் போகுது. இன்னும் பொண்டாட்டி கூட அமையல. இங்கருந்து வெளியப் போயிடணும். மரம் நகர்ந்தா சாவும், மனுஷன் நகர்ந்தா வாழுவான்.”

- ‘மாற்றம்’ நூலிலிருந்து. ஆசிரியர்: மோ-யான்.

சீனத்திலிருந்து நேரடி மொழியாக்கம்: பயணி தரன்.



(iii)


களஞ்சியம் யாவும் நிறைந்துவிட்டாலோ

மனைவி மக்களுக்கு அமைதி நிலவும்.

கிளைத்து வளைந்த கொம்புகள் கொண்ட

கறுப்புக் கிடாவைப் பலியாய்க் கொடுத்தோம்

நாமே வெல்வோம்; நாமே தொடர்வோம்

தொடர்வோம் நமது முன்னோரைத் தானே

- ‘ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்’ கவிதையிலிருந்து.

சீனாவின் ‘சங்க இலக்கியம்,’ கவித்தொகை.

சீனத்திலிருந்து நேரடி மொழியாக்கம்: பயணி தரன்.


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i) பெருந்தேவியின் 'பயணம்: பாடம்' குறுங்கதையிலிருந்து

சீடன் பதில்சொல்ல வாயைத் திறந்தான். குரு அவனைச் சைகையால் நிப்பாட்டிவிட்டுத் தொடர்ந்தார்.

“எந்தக் கேள்வி தன்னிடம் பதிலுக்காகக் கேட்கப்படுகிறது, எது இல்லையென்று தெரிந்துகொள்வது பயணத்துக்கான தயாரிப்பில் அவசியம். அது தெரியும்வரை பயணி பதிலளிக்கப் பழகிக்கொள்ளாமலிருப்பது அவன் தலையைப் பாதுகாக்கும்.”

சீடன் தலையாட்டவில்லை.

- ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ - 51 குறுங்கதைகள். ஆசிரியர்: பெருந்தேவி



(ii) ஆர். பாலகிருஷ்ணனின் பட்டறிவுப் பதக்கம்

தோல்வி பயம்
உள்ளவர்கள்
விளையாட மாட்டார்கள்.
விளையாடாதவர்கள்
வெற்றி பெற மாட்டார்கள்

பந்தயத்தில் தோற்பவர்களை விட
பயத்தில் தோற்பவர்களே
அதிகம்.

வெற்றியோ, தோல்வியோ
விளையாடிப் பாருங்கள்.
வென்றால் பதக்கம்.
தோற்றால் பட்டறிவு.

- சிறகுக்குள் வானம். ஆசிரியர்: ஆர். பாலகிருஷ்ணன்.


உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

சமீபத்தில் ஏதாவது ஒரு விஷயம் கண்ணில் பட்டதும் உங்கள் நினைவுகளைப் பல வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்ச்சிக்கு இழுத்துச் சென்றதா? என்ன விஷயம்? என்ன நிகழ்வு?

உங்களுக்குப் பிடித்திருந்தால், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:

https://www.payani.com/Newsletter

மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

பயணி தரன்