3-2-1: தொலைந்த பை, எங்கே மதிப்பு, எதை எழுத வேண்டும்.

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(19 டிசம்பர் 2020)

வணக்கம், சக பயணியே!

நலந்தானே? இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

மறக்கமுடியாத மாலையில் மறந்த பை

போன வருடம் டிசம்பர் 18ஆம் தேதி, நான் எனது பாஸ்போர்ட், பணம், விமான சீட்டு அனைத்தும் இருந்த கருப்பு நிற தோள் பையைத் தொலைத்துவிட்டு நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தேன். மறுநாள் காலை நான் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து டெல்லிக்குப் பயணம் செய்யவேண்டும். அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கியமான சந்திப்பு. பிறகு தில்லியிருந்து தாய்வானுக்குப் போக வேண்டும். இப்போது, சென்னை விமான நிலையத்தின் உள்ளே கூடப் போகமுடியாது என்னும் நிலை.

கீதா இளங்கோவன் வீட்டில் நண்பர்களுடன் இரவு விருந்துக்காகச் சந்தித்தபோது பை பற்றிய நினைவு கிஞ்சித்தும் இல்லை. கூடும் உற்சாகமும் பூச்சில்லாத நட்பும் ருசியான உணவும் அந்த மாலையைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. கேழ்வரகு சேமியாவில் தயிர்சாதம் செய்தால் பிரமாதமாக இருக்கும் என்பது போன்ற பெரிய விஷயங்களில் மனம் சென்றுவிட்டதால் பாஸ்போர்ட் போன்ற அற்ப விஷயங்களில் கவனம் சென்றிருக்க வழியில்லை. நான் தான் கடைசியாகக் கிளம்பியவன். கீதாவுக்கும் இளங்கோவனுக்கும் எடுத்துச் சென்ற சில அன்புப் பரிசுகளை வைத்திருந்த பையை மாலையில் அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போதே கொடுத்துவிட்டேன். எனவே, எனது பையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். ஆனால், பை இல்லை. (அப்புறம் என்னாச்சு?: மறக்கமுடியாத மாலையில் மறந்த பை)

(ii)


சமீபத்தில் தொழில்ரீதியாய் சந்திக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கு நான் பரிசளிக்கும் நூல் திருக்குறளின் ஆங்கில மொழியாக்கம். ப. சு. சுந்தரத்தின் மொழியாக்கமும், சமீபத்தில் வந்த கோபாலகிருஷ்ண காந்தியின் மொழியாக்கமும் செம்மையாக இருக்கின்றன. அளவில் பெருக்காது கருத்தில் சுருக்காது அழகில் குறையாது மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் வகை மனதைக் குளிர்விக்கிறது. சுந்தரத்தின் நூலிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு:

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று. (குறள்: 1244)

(நெஞ்சமே, கண்களையும் கொண்டு போ. அவரைப் பார்க்கவேண்டும் என்று என்னைத் தின்று விடுவன.)

O heart, if you are going to him, take these eyes too;

Else they will eat me up.


- Kural. Tiruvalluvar. Translator: P. S. Sundaram. Penguin Random House India.



(iii)


“மத்தியானம் மூணு மணிக்குத்தான் வீட்டுல நொழஞ்சேன். வறுமையும் ஒடைசலுமா இருந்த வீட்டையும் தள்ளாடற வயசாயிட்ட அம்மா அப்பாவையும் பாத்ததுமே என் மனசுல சொல்லமுடியாத துயரம் அடைச்சிக்கிச்சி. அப்பா அம்மாகிட்ட பட்டாளத்து நிலவரம், பதவி உயர்வுக்கு வழி இல்லாம இருக்கிறது, வண்டி ஓட்ற வாய்ப்பு கனவா போனது எல்லாம் சொன்னேன். அம்மா, "நிஜத்தில, நீ பலனோட திரும்பி வருவேன்னுதான் நெனச்சோம்"ன்னாங்க.


- மாற்றம். ஆசிரியர்: மோ-யான்.

சீனத்திலிருந்து நேரடி மொழியாக்கம்: பயணி தரன்.

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i) என்ன எழுதப் படுகிறது? என்ன எழுதப்பட வேண்டும்? என்பது பற்றி சுந்தர ராமசாமி:

இன்று வரையிலும் மேல்தட்டு வாழ்க்கையும், மத்தியதர வாழ்க்கையும் கணிசமாகப் பதிவாகி இருக்கின்றன. அதுவும் ஆசாரங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டுத்தான். வாழ்வின் ஸ்திதியை வெளிப்படையாக முன்வைக்க இங்கு தடைகள் அதிகம். மேல்தட்டு, மத்தியதர வாழ்க்கை ஒளிவுமறைவு இன்றிப் பதிவாக வேண்டும். கீழ்த்தட்டு மக்களின் துன்பங்களும் ஒடுக்குமுறைகளுக்கும் மிகக் கொடியவை. அவர்கள் தங்கள் அனுபவங்களை பதிவு செய்வது நாளையத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பகுதியாக இருக்கும்.

- விரிவும் ஆழமும் தேடி. காலச்சுவடு பதிப்பகம் (1998)


(ii) எவ்வளவு மதிப்பு என்பது கிடக்கட்டும்; எந்த இடத்தில் மதிப்பு? என்று கேட்கிறார் ஒளவையார்:

ராஜாவுக்கு நாட்டின் எல்லை வரை தான் மதிப்பு. படித்தவருக்கு போகும் இடமெல்லாம் மதிப்பு. அதனால், ராஜாவை விட படித்தவர் தான் சிறந்தவர்.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புஉடையன் - மன்னனுக்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை. கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

- மூதுரை. கழக வெளியீடு. (1950)

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

உங்கள் வாழ்வின் ஒரு நிகழ்ச்சியில், இலக்கியத்திலோ பழமொழியிலோ படித்த ஒரு வரி உங்களுக்காகவே எழுதப்பட்டதைப் போல பளிச்சென்று மனதில் வந்துபோவதை அனுபவித்திருக்கிறீர்களா? எப்போது? எந்த நிகழ்ச்சியின் போது?

இது உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்: https://www.payani.com/Newsletter

உங்கள் நண்பர் உங்களுக்கு இதை அனுப்பியிருந்தால், தொடர்ந்து படிக்க இங்கே பதிவு செய்யுங்கள்: https://www.payani.com/contact

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் - வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை