3-2-1: மண்டேலா ஒன்னுமில்லாத படம், கீழடி, அமுதம்

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(10 ஏப்ரல் 2021 - 2021/08)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

மண்டேலா: மண்டைல ஒன்னுமில்லாத படம்

மண்டேலா போன்ற படங்களை நான் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் பார்ப்பதில்லை. அவசியம் இருக்காது—இரண்டு நிமிடங்களிலேயே வெளுத்துவிடும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுகொண்டதால், கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்காக முழுதும் பார்த்தேன்.

1990களின் ஆரம்பத்தில் என் நண்பன் படைப்பை கிருஷ்ணமூர்த்தியைச் சென்னை தீவுத்திடலில் உள்ள சிற்றரங்கத்தில் நவீன நாடகம் பார்க்க அழைத்துப் போனேன். அன்று கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகம்...

மண்டேலா திரைப்படத்தில் இந்தக் கதையைத் திருடி, ஒதுங்கியிருக்கும் மனிதர்களை நல்லவர்களாக்கி, அரசியல்வாதி திருந்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் பழைய பஞ்சாமிர்தத்தை வாயில் புகட்டுகிறார்கள். எல்லா வழவழாக்களும் வாழ்த்துப் பாடுகிறார்கள்...

இந்த ‘நல்ல கருத்து’ சொல்லும் படம் எடுப்பவர்களுக்குப் படம் எடுப்பது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கக்கூடாது என்பது என்ன மாதிரியான டிசைன்?

முழுப் பதிவையும் படிக்க, சுட்டி



(ii)

அமுதம்

நண்பர் சாய் அமுதா தேவியிடம் பல விஷயம் பேசினாலும் இதை அடிக்கடிச் சொல்லுவேன்: நீங்க சாப்பாடு பத்தி பேசறதைக் கேட்டாலே கேலரி எகிறிடும், அமுதா! பதத்துக்கு ஒரு சில.

“அட, வெங்காய வடையை வெறும் சட்னி தொட்டு சாப்பிடுவாங்களா? சாம்பார்ல முழுகவிடுங்க தரன்.”

“எள்ளு எடுத்து மிக்ஸியிலே அரைச்சிக்கிட்டு, அப்புறம் மண்ட வெல்லத்தைப் போட்டு அரைச்சி உருண்டை உருண்டையா பண்ணி வெச்சிக்கிங்க. போக வர சாப்பிடுங்க.”

“வாழப் பழத்தை சிறுசு சிறுசா நறுக்கி ஒரு தட்டுல பரப்பிட்டு, கேட்பரீஸ் சில்க் சாக்லெட்டை உருக்கி அதுமேல கோடுகோடாய் ட்ரிஸ்ஸில் பண்ணிடுங்க. அப்புறம் ஃபோர்க் வெச்சி எடுத்து சாப்பிடுங்க. கூடாது. ஸ்பூன்ல எப்படி எடுப்பீங்க? சில சமயங்கள்ல ஸ்பூன்ல அதிக சாக்லேட் வந்திடும். டேஸ்ட் ஏறுமாறா இருக்கும்.”

வாழ்வை ருசித்தலே அமுதம்.

மேலும் படிக்க: சுட்டி




(iii)

தம்மின் அறிவுடைமை

சமீபத்தில் ஒரு நண்பரின் மகள் (23) வீட்டுக்கு வந்திருந்தாள். நானும் என் மனைவியும் அவளை முதல்முறையாகப் பார்க்கிறோம். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். புத்தகங்கள், தத்துவம், வாழ்க்கை என்று பரவலான பேச்சு. இடையிடையே அவளது பெற்றோர் கூப்பிட, “பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்குக் கிளம்பமாட்டேன்” என்று உதறிக்கொண்டிருந்தாள். “காஃப்கா” என்றதும் “Trial?” என்றாள். எங்கள் வீட்டிலிருந்த தன்னார்வச் செயல்பாடு (Anarchism) பற்றிய புத்தகங்களை ஆவலுடன் அள்ளிக்கொண்டாள். ஆல்பர்ட் கேம்யூவின் the Myth of Sisyphus கட்டுரையைப் பற்றித் துளைத்தெடுத்தாள். யாரோ செடிக்கெல்லாம் நீரூற்றிச் சென்ற மாதிரி இருந்தது.


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

கீழடி பற்றி சௌம்யா அசோக்

கீழடி அகழ்வாராய்ச்சி இந்தியப் பழங்குடிகளைப் பற்றிய புரிதல்களை மாற்றப் போகிறது. ஆனால், அதை நோக்கிய பயணம் தடங்கலில்லாமல் இருக்காது.

கீழடி பற்றிய விவரமான ஆங்கிலக் கட்டுரை.

தோண்டல் - சௌம்யா அசோக். சுட்டி



(ii)

இல்லாததும் இருப்பதும் பற்றி மார்ட்டின் லூதர் கிங்

நிஜமான அமைதி என்பது முரணின் படபடப்பு இல்லாத சூழல் இல்லை; சமூக நீதி இருக்கும் சூழல்.

- மார்ட்டின் லூதர் கிங்

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

உங்களை விட அதிக நூல்களைப் படித்த இளைஞர்களிடம் உரையாடும்போது உங்கள் மனதில் நிழலாடும் எண்ணம் என்ன?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)