3-2-1: நலுங்கும் அவலம், ஜோஜி, அழகை அவதானியுங்கள்

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(17 ஏப்ரல் 2021 - 2021/09)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

நலுங்கும் அவலம்

தில்லியில் கொரோனாவால் இறந்துபோனவருக்காக ஒரு பிணவறை முகப்பில் அழும் ஒரு குடும்பம். ராய்ட்டர்ஸ் செய்திக்குழுமத்தைச் சேர்ந்த டானிஷ் சித்திக்கி எனும் ஒளிப்படச் செய்தியாளர் எடுத்தது. இவர் செய்தித்துறையின் உச்சங்களைப் பதிவு செய்யும் புலிட்ஸர் பரிசு வாங்கியவர். இந்தியாவின் இரண்டாவது கொரோனா அலையை சித்திக்கி பதிவு செய்திருக்கும் வகை முக்கியமானது. ஊதுவத்தியின் புகைக்கோலமாய் நலுங்கிவிடும் அவலத்தை, தனிமனித மதிப்பு குறையாமல் நுணுக்கமாகப் படம் பிடிக்கிறார். ஒளிப்படச் செய்தியாளர்களுடன் பழகுபவன் என்கிற அளவில், அச்சுக்கு வரும் ஒவ்வொரு ஒளிப்படத்தின் பின்னும், குப்பையில் போகும் 99 ஒளிப்படங்கள் உண்டு என்பதை அறிவேன்.


டானிஷ் சித்திக்கியின் ஒளிப்படங்களைப் பார்க்க, சுட்டி





(ii)

வெவ்வேறு சுனை நீர்

திருக்குறள் புரிந்த மாதிரி இருக்கும். ஆனால், உள்ளே நுழைந்து ஆசுவாசமாக உட்கார்ந்ததும் வித்தையைத் துவங்கிவிடும். பல குறள்களில் எனக்குத் தொடர்ந்து நிகழும் அனுபவம் இது. சமீபத்தைய எடுத்துக்காட்டு இது.

453வது குறளும் அமைதியாக என்னை உள்ளே அழைத்தது. ‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தில் மூன்றாவது குறள்.

“மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்

இன்னான் எனப்படும் சொல்.”

இதிலே, “இவன் இப்படிப்பட்டவன் என்னும் சொல், அவனது நண்பர்களைப் பொறுத்து வருவது” என்னும் இரண்டாவது பகுதி எளிமையானது. நம் எல்லோருக்குமே, “உன் நண்பர்களைக் காட்டு, உன்னைப் பற்றிச் சொல்லுகிறேன்” போன்ற விஷயங்கள் தெரிந்ததுதான். ஆனால், அந்த முதல் பகுதியின் தெளிவு கண்ணில் பட்டதும் பகீரென்றது.

“உனது அறிவு உன்னைப் பொறுத்தது. ஆனால், நீ எப்படிப்பட்டவன் என்னும் உனது பிம்பம் உன் நண்பர்களைப் பொறுத்தது” என்கிறது இந்தக் குறள். அதாவது, நீ எப்படிப்பட்டவன் எனும் பிம்பத்துக்கும் நீ எப்படிப்பட்டவன் என்பதற்கும் இடையில் வேறுபாடு உண்டு. இரண்டும் வெவ்வேறு ஊற்று நீர்கள்.

இந்தத் தெளிவை ஒரு சிறுபஞ்ச மூலப் பாட்டிலும் (80) பார்க்கமுடிகிறது:

“....................................தக்க

இனத்தினான் ஆகும் பழியும் புகழும்

மனத்தினான் ஆகும் மதி”

உனது மதி உனது மனத்தின் படி. ஆனால், உனக்கு வரும் பழியும் புகழும் உன் மதியைப் பொறுத்ததல்ல, நீ சேரும் இனத்தைப் பொறுத்தது.

மனதை நீவி எடுத்த மாதிரி இருந்தது.






(iii)

ஜோஜி: கதவிடுக்குகளில் விஷப்பாம்பு

ஒரு நாடகத்தில் பங்கேற்கும்போது, ஒரு படத்தை வரையும்போது, ஒரு நூலை மொழிபெயர்க்கும்போது அந்தப் படைப்பு நம்மில் ஒரு அங்கமாகிவிடுகிறது.

1980களின் கடைசியில் (கர்ணா, வருஷத்தக் கூட எழுதவிடமாட்டேங்கிறியேப்பா!) மனநல மருத்துவர், ஓவியர், நாடக இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகம் தயாரானது. எங்கள் குழுவிலிருந்த சில நண்பர்கள் பங்கேற்றோம். அன்றிலிருந்து மேக்பத் எங்கள் வாழ்வில் ஓர் அங்கம்.

சமீபத்தில் ஜோஜி என்னும் மலையாளப்படம் பார்த்தோம். மேக்பத்தின் கதையைத் தழுவியது என்று டைட்டிலில் காட்டுகிறார்கள். ஒரு நவீனக்காலத்து க்ரைம் த்ரில்லராக வந்திருக்கிறது. ஃபஹத் ஃபாஸில் முன்னணி கதாபாத்திரம். அறைக்கதவுகளுக்குப் பின்னே வாள் சுற்றுபவர்களின் விஷப்பாம்புகள் கதவிடுக்குகளின் வழியே நெளிந்துவரும் சூழலின் பயத்தை நன்கு பதிய வைத்திருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, ஷேக்ஸ்பியர் இந்தப் படத்துக்கு ஒரு சுமை. தனது மனக்கோட்டைகளுக்காக தன் கணவனைக் கொலைசெய்யவைத்து, பிறகு குற்றத்திலும் பயத்திலும் உழலும் மேக்பத்தின் மனைவி பாத்திரத்தை, குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு (இவள் கொலை செய்பவனின் மனைவி அல்ல) அந்தக் கதாபாத்திரத்தின் ஆர்க் வராமல் அவஸ்தைப் பட்டிருக்கிறார்கள். பிரமாதமான மேற்கத்திய இசையும் கேரளத் தெருக்களில் ஒட்டாமல் உருளுகிறது.

ஆயினும் ஒரு நல்ல திரைப்பட அனுபவத்தின் கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள படம்.

படத்தின் ட்ரைலர்: சுட்டி


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

ஜாதி பற்றிய தெளிவு குறித்து அம்பேத்கர்

எளிமைப் படுத்துதல் என்பது தியானம் போன்றது. பலசிக்கலான விஷயங்களையும் உள்வாங்கி அதன் குழப்பங்களைக் குறைத்து அதன் சாரத்தை எல்லோருக்கும் சேரும்படி எளிமையாகத் தருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.

இந்தியாவில் ஜாதிகள் என்னும் அம்பேத்கரின் நூல் சின்னது. ஆனால், ஜாதி பற்றிய பல பெரிய பெரிய நூல்களில் கிடைக்காத தெளிவு இந்த நூலில் கிடைக்கிறது (“ஜாதி என்பது திருமண முறை” என்கிற தெளிவை அடிச்சிக்க முடியாது. “இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்கறாங்க?” என்பவர்களிடம் “உங்கள் துணை உங்களின் ஜாதியா?” என்று கேட்டால் பேச்சு அடங்கும்).

இதை நான் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவாக எழுதியிருந்தேன். ஆனால், www.payani.com பக்கங்களில் இதைப் பதிந்ததே இல்லை. ஓரளவு நீடித்து இருக்கட்டும் என்று இப்போது பதிவு செய்கிறேன். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவரது தெளிவான பதில்கள் இருக்கின்றன:

  • ஜாதி முறைங்கற கும்பல் முறையின் அடிப்படை அம்சம் என்ன?

  • பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறை எப்படி வளர்ந்தது?

  • பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையை யார் எதிர்ப்பது?

  • பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையை எப்படி எதிர்ப்பது?

  • கும்பல் முறையால் இது வரைக்கும் நஷ்டம் அடைந்த கும்பல்களுக்கு எப்படி உதவுவது?


கூர்மையான கேள்விகளுக்கு எளிமையான பதில்களைப் படிக்க: சுட்டி



(ii)

அழகை அவதானிப்பது குறித்து அவ்ரேலியஸ்

“வாழ்வின் அழகை அவதானியுங்கள். விண்மீன்களை கவனியுங்கள், அவற்றுடன் நீங்கள் ஓடுவதைப் பாருங்கள்”

—மார்க்கஸ் அவ்ரேலியஸ், தியானங்கள்

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

நீங்கள் படித்த நூல்களில் மிகச் சிக்கலான விஷயத்தை எளிமையாகச் சொன்ன நூல் என்றால் எதைச் சொல்லுவீர்கள்?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)