3-2-1: விடுபட்ட மனது, அள்ளித் தந்தது யாரு?

கோவிட் தொற்று

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(22 மே 2021 - இந்த ஆண்டின் 10வது கடிதம்)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

விடுபட்டது மனது

புத்தர் காலத்தை ஒட்டிய பெண் துறவிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘தெரீ காதா’ எனும் புத்தகமாகும். ‘தெரீ’ என்றால் பெரியவர்கள், மூத்த பெண் துறவிகள் என்று பொருள். கி.மு. 400 வாக்கில் காஞ்சிபுரத்தில் பிறந்து புத்தத் துறவியான தர்மபாலர் இக்கவிதைகளுக்கு உரை எழுதித் தொகுத்துள்ளார். ஆங்கிலம் வழியாக அதில் சில கவிதைகளை மொழியாக்கம் செய்தேன். ஒரு சாம்பிள் இங்கே.


வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

பத சாரா எனும் பெண் துறவியின் கதை புத்த மதம் பற்றிய புத்தகங்களில் பிரபலமானது. வசதியான குடும்பத்தில் பிறந்த பத சாரா, ஒரு வேலைக்காரனுடன் ஓடிப்போய், கர்ப்பமாகி, வீட்டுக்குத் திரும்பி வரும் பொழுதில் வழியிலேயே மழைப்புயலில் பிரசவமாகி, பிள்ளையும் கணவனும் இறக்க, சோகத்தில் பித்தாகி அலைந்தவர். புத்தரின் அருகாமையில் சோகம் விலக, துறவியாகிறார். ஆனால் மனம் அலைபாய்ந்தபடி இருக்கிறது. ஒரு நாள் வறண்ட நிலத்தில் ஊற்றிய நீர், முதலில் கொஞ்சமும், பிறகு மீதியுமாக நிலத்தில் ஈர்க்கப்படுவதைப் பார்க்கிறார். மனிதரின் ஆயுளின் நீளம் மாறினாலும் கடைசியில் எல்லாம் மண்ணில் போகும் என்று உணர்கிறார். ஒரு நாள், படுக்கும் முன்பு விளக்கின் திரியை இழுத்து அணைத்த கணத்தில், வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலையாவது எப்படி என்று புரிந்துபோகிறது. இதை அவர் கவிதையாக எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்:


“பாதம் கழுவிட ஊற்றிய நீரில் இன்னொரு பயன் கண்டேன்

முதலில் கொஞ்சம், பின்பு மீதியென எல்லாம் நிலத்தில் சேர்ந்தது.


பின்பு குதிரையை அடக்குதல் போலே சித்தத்தை நான் அடக்கினேன்.

ஒற்றைத் தீபம் கைக்கொண்டு விகாரத்துள்ளே நுழைந்திட்டேன்


பாயைப் பார்த்து நின்றேன், திண்டின் மேல் அமர்ந்தேன்

ஊசி ஒன்றைக் கைக்கொண்டு திரியைப் பின்னால் இழுத்தேன்

ஒளி அணைந்த தருணம், விடுபட்டது மனது.”


‘தேரீ காதா’ நூலிலிருந்து இன்னும் சில கவிதைகளைப் படிக்க:

சுட்டி






(ii)

அள்ளித் தந்தது யாரு?

“எங்கள் மகள் கீர்த்தனா பிறந்த காலத்தில் நாங்கள் சீனாவில் இருந்தோம். தமிழ்த்தாயின் சார்பாக ஏதும் கேட்க ஆளில்லாமல், வைதேகி பல பாடல்களின் வேகத்தை வெகுவாகக் குறைத்துத் தாலாட்டுப் பாட்டு என்று கலப்படம் செய்து பிழைத்தாள். உதாரணமாக, “வா, வாத்யாரே வூட்டாண்டே” பாடல். நாங்கள் சென்னைக்கு விடுமுறைக்கு வந்தபோது எல்லோரும் இருக்கும் சூழலில் எங்கள் செல்ல மகள் நேயர் விருப்பமாக தன் மழலையில் “ஜாம்பஜா(ர்) ஜக்கு” என்று கேட்க, தமிழ்கூறு நல்லுலகம் எங்களைப் புழுவாய்ப் பார்த்தது. “

உலக குடும்ப நாள் (மே 15)* சிறப்புப் பதிவாக நான் எழுதிய ‘எங்கள் குடும்பப் பாடல்கள்’ சிறு கட்டுரையிலிருந்து.

முழுதும் படிக்க:

சுட்டி







(iii)

கோவிட்-19 தொற்று வந்துவிட்டால்?

இந்த வீடியோ, கோவிட்-19 தொற்று வந்த நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக்கொள்ளும் நண்பர்கள், உறவினர்களுக்கும் பயன்படும். தொற்று வந்ததும் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும், நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் படிப்படியாக (ஆங்கிலத்தில்) விளக்குகிறது.

வீடியோவில் மருத்துவ ரீதியான தகவல்களைச் சொல்பவர் தில்லி புனித ஸ்டீபன் மருத்துவமனையின் மருத்துவர் மாத்தியூ வர்கீஸ்.

***

மூக்கிலேயே ஆக்சிஜன் டேங்க் இருக்கிறது என்னும் மட குருக்களையும் வாயருகே மின்விசிறி வைத்தால் கூடுதல் ஆக்சிஜன் உள்ளே போகும் என்னும் ஈனத்தனமான ஹீலர்களையும் நம்பாதீர்கள்.

இதுபோன்ற அறிவியல் ரீதியான தகவல்களைக் கேளுங்கள், பகிருங்கள். இதுதான் உதவும்.

அறிவியல் அதன் வேலையைச் செய்யட்டும்.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

லாபம் பற்றி யானிஸ் வருஃபாகிஸ்

பிரிட்டனில் புவியியல் (அது ஒரு தீவு), நாட்டு ராணுவத்தின் ஒத்துழைப்பு, ஒரு சில பெரும் பணக்காரர்கள் மட்டும் இருந்தது ஆகிய காரணங்கள் தொழிற்புரட்சிக்கு உதவின.

பெரிய முரண்பாடு: ஒரு பக்கம் செல்வம் குவிந்தது. மறுபக்கம் தொழிலாளர்களை இயந்திரங்களுடன் சங்கிலியில் கட்டிப்போட்டார்கள்.

முதல் முறையாக, பணம், பணத்துக்காகவே சேர்க்கப்பட்டது. பொருளாசை ‘லாபம்’ பற்றிய பணத்தாசையாக மாறியது. இது சமீபத்திய நிகழ்வுதான்.

யானிஸ் வருஃபாகிஸ்

நூல்: பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு




(ii)

துவங்குவது பற்றி ஆஷ்

“எங்கே இருக்கிறாயோ அங்கே இருந்து துவங்கு.

என்ன வைத்திருக்கிறாயோ அதை வைத்துத் துவங்கு.

என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.”

ஆர்தர் ஆஷ் (1943-1993)

அமெரிக்க டென்னிஸ் ஆட்டக்காரர்.

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

'கோவிட்-19 தொற்று வந்த நோயாளிகளுக்கு' என்று உங்களுக்கு (வாட்ஸாப், சமூக வலைத்தளங்கள், அக்கம் பக்கம் மூலமாக) வந்த அறிவுரைகளில் மிகவும் நகைப்புக்குரிய அறிவுரை எது?


உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: