3-2-1: சைக்கிள்காரனின் சரித்திரப் பயணங்கள், ஆழ்மனமும் தாய்மொழியும், காதலிக்காத சிறுசுகளுக்கு.

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(20 பிப்ரவரி 2021 - 2021/01)

வணக்கம், சக பயணியே!

நலந்தானே? இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

சைக்கிள்காரனின் சரித்திரப் பயணங்கள்

பிப்ரவரி 14 காதலர் தினம். அன்று எங்களது சைக்கிள் பயணக்குழுவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம். ஆமாம், சென்ற ஆண்டு ஆகஸ்டில் விளையாட்டாகத் துவங்கின விஷயம். ஞாயிற்றுக் கிழமையானால் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவோம். நாங்கள் வசிக்கும் அயலுறவுத்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்பிலேயே இரண்டு மூன்று நண்பர்கள். அதில் ஒருத்தன் சென்னையிலிருந்து எனது கல்லூரி கால நண்பன். எல்லோரும் கிளம்பி தில்லியின் பல வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஏதேனும் ஒன்று இரண்டுக்குப் போவோம். அந்த இடம், அதைச் சுற்றிய மனிதர்கள், நூற்றாண்டுக் கணக்கான கதைகள் என்று அலசுவோம். வரும் வழியில் ருசியாக என்ன கிடைத்தாலும் (சைக்கிள் மிதித்த மிதப்பில் வஞ்சம் வைக்காமல்) வயிறார சாப்பிட்டுவிட்டு வருவோம். இப்படி வரலாறும் வயிறும் இணைந்த பயணங்கள் 25 முறை நடந்துவிட்டன. இன்னும் தொடரும்.

இப்போதைக்கு, ஓரிரு வாரங்களின் சைக்கிள் பயணக்கதையை இங்கே (ஆங்கிலத்தில்) படிக்கலாம்: சுட்டி

ஆமாம், தமிழில் எழுதவேண்டும் என்று நிஜமாகவே ஆசை இருக்கிறது. சக்கரம் சுழலட்டும். ‘சைக்கிள்காரனின் சரித்திரப் பயணங்கள்’ என்ற தலைப்பில் ஏதேனும் கட்டுரை தென்பட்டால், என் முகம் இருக்கிறதா என்று பாருங்கள்.




(ii)

ஆழ்மனமும் தாய்மொழியும்

ஐரோப்பாவில் மொழியியல் படிக்கும் என் மகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் இந்த சுவாரஸ்யமான தகவலைச் சொன்னாள்: பிறந்து ஒரு வருடம் மட்டுமே தாய்மொழி கேட்டு, பிறகு வேறு மொழிச் சூழலில் வளரும் மனிதர்களை வைத்து ஒரு பரிசோதனை செய்தார்கள். எடுத்துக்காட்டாக, சீனாவில் பிறந்து, பிறகு ஒரு வயது ஆகும் பருவத்தில் தத்து எடுக்கப்பட்டு பிரான்ஸ் நாட்டுக்கு வந்து பிரென்ச் மொழி பேசியே வளர்ந்த சில மனிதர்களை அழைத்து, அவர்களின் மூளை அலைகளைப் பதிவு செய்தபடியே, சில மொழிகளின் ஒலிப்பதிவுகளை ஒலிக்கவிட்டார்கள். சீனமொழி ஒலிகளைக் கேட்கும்போது அவர்களிடம் ஏதாவது புரிகிறதா என்றால், “இல்லை” என்றார்கள். ஆனால், அவர்களின் மூளைகளோ, எதுவோ புரிந்ததற்கான அறிகுறிகளைக் காட்டின. அதாவது, மனிதர் மறந்த தாய்மொழியை மூளை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறது.

‘மறந்து போன தாய்மொழியை ஆழ்மனம் நினைவு வைத்திருப்பதைப் பதிவுசெய்தல்’ (Mapping the unconscious maintenance of a lost first language) என்னும் 2014இல் வெளிவந்த அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே படிக்கலாம்: சுட்டி




(iii)

காதலிக்காத சிறுசுகளுக்கு

காதலர் தினத்தை ஒட்டி முன்பு எழுதிய பதிவு. காதலுக்கு மட்டுமில்லை, அதைப் பற்றிய பதிவுக்கும் வயதில்லை.


காதலர் தினத்தை முன்னிட்டு, காதலிக்காத சிறுசுகளுக்கு:

1. காதலிக்காத பெருசுங்களை இந்த விஷயத்துல மதிக்காதீங்க.

2. சின்ன வயசுலயே எதிர் பாலினத்து நண்பர்களோட பழகக் கத்துக்குங்க. அறிமுகம், நட்பு, நெருங்கிய நட்பு, ஆசை, காதல்னு பல தளங்கள் இருக்கு. எல்லா அறிமுகமும் நட்பாகவோ, எல்லா நட்பும் காதலாகவோ ஆகணும்னு அவசியம் இல்லை.

3. முன்ன பின்ன பழகாத ஆளுக்கு நேரா ‘காதல்வலை’ போடாதீங்க. அது அசிங்கம், தப்பு.

4. ரெண்டு பேருக்கும் பிடிச்சா தான் காதல். அதுவரைக்கும் அது ஆசை மட்டும்தான். இதை குழப்பிக்காதீங்க.

5. “ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா,

ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா” என்பதெல்லாம் கப்ஸா.

6. ஆசைய சொல்லுங்க. அமையலன்னா, அடுத்த வேலையைப் பாருங்க.

7. காதல் ஆவியாகிடாமல் இருக்க கல்யாண மூடியை உடனே போட்டு மூடணும்னு பாக்காதீங்க. நிஜமா ரெண்டு பேருக்கும் ஆசை இருந்து காதலா மாறினா, வாழ்க்கையை நிலைப்படுத்துக்கிற வரைக்கும் காத்திருக்கலாம். அந்தச் சூழல்ல, காதலிக்காத பெரிசுங்களை மதிக்காம இருக்கறது ஓரளவு சுலபமா இருக்கும்.

8. காதல் அடிமைச் சாசனம் இல்லை. காதலனோ காதலியோ கல்யாணத்துக்கு முன்னாடியோ பின்னாடியோ மனம் மாறினால் அது தப்பு இல்லை. வலிக்கும். ஆனா, தப்பு இல்லை.

9. காதல் கல்யாணத்தில் முடியணும்னு அவசியம் இல்லை.

10. காதலிக்கிற ஜோடிகளுக்கு உதவுங்க. உங்க காதலுக்கு, மத்தவங்க கிட்ட உதவி கேளுங்க. தப்பில்லை.

11. காதலிச்சவங்களோட வாழறது ஒரு வரம். இதை அனுபவிக்காத முண்டங்களுக்கு இது பத்தி தெரியாது. நான் வாழ்க்கையைக் காதலிக்கிறேன், இசையைக் காதலிக்கிறேன், அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணிவெச்ச என் துணையைக் காதலிக்கிறேன்னு எதனா ஒளறுவாங்க. கண்டுக்காம விட்டுட்டு நகருங்க.

12. மனித ஜென்மத்தின் பிரமாதமான உணர்வுகளில் ஒன்னு காதல். அதை அனுபவிக்காமல் செத்துடாதீங்க. வாழ்த்துகள்.

😍😍😍 காதலர் தினத்தை முன்னிட்டு, காதலிக்கும் சிறுசுகளுக்கும் பெரிசுகளுக்கும்:

வாழ்த்துகள். காதல் இனிது.


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

கடந்தகாலங்களை அழிக்காமல் அவற்றை எதிர்கொள்வது எப்படி?

பேராசிரியர் சுனில் குமார் (1956-2021) எழுதிய ‘தில்லியின் கடந்தகாலங்களில் இருக்கும் நிகழ்காலம்’ எனும் நூலைப் படித்தது புது அனுபவம். வரலாற்றைச் சொல்வதல்ல—வரலாற்றைப் பற்றிப் பேசுவது. “இந்தக் கட்டுரைகள் அடிப்படையில், ‘நமது கடந்தகாலங்களை அழிக்காமல் அவற்றை எதிர்கொள்வது எப்படி?’ என்னும் பெரும்சிக்கலைப் பேசுகின்றன” என்கிறது முன்னுரை. குதுப்மினாரைப் பற்றிய கட்டுரையைப் படித்ததும் உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு இன்னொரு முறை குதுப் பகுதிக்குப் போய்விட்டு வரலாமா என்று தோன்றவைத்தது.


The Present in Delhi's Pasts, by Sunil Kumar, Three Essays Collectives (2010), 138 பக்கங்கள். விலை ரூ. 230/-



(ii)

அரசும் கார்ப்பரேட்டுகளும்

"இன்றைக்கு, கார்ப்பரேட்டுகள் எந்த அளவுக்கு அதிகாரத்தை எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கும், எப்படி நயவஞ்சகமாக கார்ப்பரேட் பங்குதாரர்களின் அக்கறைகள் அரசாங்கத்தின் அக்கறைகளாக மாற்றப்படுகின்றன என்பதற்கும் மிகச் சிறந்த வரலாற்று எடுத்துக்காட்டாக நிலவுகிறது (காலனியாதிக்கத்தின்) கிழக்கிந்திய கம்பெனி."

- வில்லியம் டார்லிம்பில். ‘அராஜகம்’ என்னும் நூலில்.

The Anarchy by William Darlymple. Bloomsbury Publications (2019), 576 பக்கங்கள். விலை ரூ. 512/-

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

நீங்கள் உங்கள் காலத்தில் பார்க்கும் ஒரு ‘லோக்கல்’ வரலாறு பதியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், அது என்ன?

இது உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்: https://www.payani.com/Newsletter

உங்கள் நண்பர் உங்களுக்கு இதை அனுப்பியிருந்தால், தொடர்ந்து படிக்க இங்கே பதிவு செய்யுங்கள்: https://www.payani.com/contact

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் - வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை