3-2-1: நினைவுத் தூளி, சைக்கிளுக்குக் கைக்கிளை, புது நீ

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(27 பிப்ரவரி 2021 - 2021/02)

வணக்கம், சக பயணியே!

நலந்தானே? இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

வசந்த வரம்

சென்னையில் வளரும்போது புவியியல் பாடப்புத்தகத்தில் பார்த்த பருவநிலைப் படங்கள் செத்த எலி போல இருந்தன. மழைக்காலம் கோடைக்காலம் குழம்பியது. போகி நெருப்பில் குளிர்கால அறிமுகம் கிடைத்தது. வசந்தகாலம் புரியவில்லை. இலையுதிர்காலம் தெரிந்ததில்லை. தில்லிக்கு வந்தபிறகு நான்கு காலங்களும் புரிந்தன. இப்போது வசந்தகாலம். எல்லாப் பூங்காக்களும் மலர்வனம். நண்பரைப் போலப் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்திருத்தல் ஒரு வரம்.



(ii)

நினைவுத் தூளி

சமீபத்தில் 25 ஆண்டுகளாய் பார்க்காத சில நண்பர்களை மீண்டும் பார்த்தேன். நான் குடிமைப் பணிக்கு 1996இல் சேர்ந்தேன். அப்போது IFS, IAS, IPS, IA&AS என்று எல்லா பணியில் இருப்பவர்களுக்கும் சேர்த்து ஒரு அடிப்படைப் பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மசூரியில் எனும் மலைவாழிடத்தில் இருந்தது. அப்போது சந்தித்த நண்பர்கள், சக ஊழியர்கள். பிறகு நாங்கள் எல்லோரும் தனித்தனிப் பணிகளுக்கான பயிற்சிகளுக்காகப் பிரிந்துவிட்டோம். பிறகு, வேலை, வெளிநாட்டுப் பணி, பரந்த இந்திய வெளி என்று வாழ்வின் காற்று அடித்த திசையில் இலைகளாகப் பறந்துகொண்டிருக்கிறோம். தற்போது தில்லியில் இருக்கும் 1996 பேட்ச் நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நடந்தது. இதமான குளிரும் சூரிய ஒளியும் புல்வெளியும் தாங்கின நினைவுத் தூளி ஆடியது. கொஞ்சமும் மாறாதவர், கொஞ்சம் மாறியவர், முற்றிலும் மாறியவர் என்று நண்பர்களைக் கண்டு பேசி தகவல் பரிமாறிக்கொண்ட கணம் நிறைவாக இருந்தது. இதை விட, நாள் தோறும் வாட்ஸாப்பில் மொக்கை போட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களையும் நேரில் கண்டு நெற்றியும் புருவமும் கண்ணும் சூரியக் கதிர் பட்டு ஒளிரப் பேசிக்கொண்டிருப்பது உணர்வுத் திளைப்பாக இருந்தது. மனிதருக்குத் தேவை மனிதர் தான். எங்களின் பாதி முகங்களை மறைத்துக்கொண்டிருந்த முகமூடிகள் இதை வெளிப்படையாய்ச் சொல்லின.




(iii)

சைக்கிளுக்குக் கைக்கிளை

குறுக்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொண்டு கால்வாயில் விழுந்து முட்டியைத் தேய்த்துக்கொண்டு வாடகைக்கு ‘அவர்’ சைக்கிள் எடுத்துத் திளைத்து ஒரு கை இரு கை விட்டு ஒட்டக் கற்றுக்கொண்டு கடந்துபோகும் சைக்கிள்களை எல்லாம் கைக்கிளைக் காதலுடன் பார்த்த காலங்கள் நினைவில் ஆடுகின்றன. பிறகு மொபெட் காராகி சைக்கிள் வாரக்கடைசிக் கேளிக்கையானது. (ஜிம் சைக்கிள் சிரங்குச் சொறி. கணக்கில் சேராது.) தாய்வானில் பத்து நாட்களில் ஆயிரம் கிலோமீட்டர் மிதித்த மிதப்பில் தில்லித் தெருக்களிலும் சைக்கிளில் திரிந்தாயிற்று.

இப்போது மின்விசை சைக்கிள் பற்றி ஆவலுடன் படித்துக்கொண்டிருக்கிறேன். தாய்வானில் சில மாடல்கள் பார்த்தேன். மொபெட் வாங்கும்போது “பெட்ரோல் தீந்துட்டாலும் மெறிச்சிக்கிட்டே வந்துடலாம்” என்று அனுகூலம் சொல்வார்கள். அதுபோல, மின்விசை சைக்கிளையும் அது தானாடாவிட்டாலும் தசையால் ஆட்டலாம். கூடவே, இன்னும் பல அனுகூலங்கள். மிதிக்க மிதிக்க பேட்டரி ஏற்றிக்கொள்கிறது. மணிக்கு 90 கிலோமீட்டர் போகக்கூடிய மின்விசை சைக்கிள்கள் வந்துவிட்டன. இன்ஜின் கிடையாது. பெட்ரோல் கிடையாது. புகை கிடையாது. வெளிநாடுகளில் கிடைக்கும் தரத்துக்கு இந்தியாவில் இந்த சைக்கிள்கள் இன்னும் வரவில்லை. வரும். காத்திருப்போம்.



பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

புது நீ: கவிஞர் டயான் அக்கர்மன்

“உயிரினங்கள் வளரும்போது அடையாளம் தெரியாதபடி மாறுகின்றன. தும்பியைப் பார்த்து லார்வாவை, விரிந்த பூக்களைப் பார்த்து மொக்குகளை, யாரால் ஊகிக்க முடியும்?

தாவரமோ விலங்கினமோ, நாம் எல்லோரும் உருமாறுபவர்கள். மந்திர புதுப்பிப்பாளர்கள். வாழ்வு என்பது உண்மையில் ஒரு பன்மைப் பெயர்ச்சொல். நம் சுயங்களின் கூட்டுவண்டி ஊர்வலம்.”


(ii)

வெற்றியில் சாகும் வாழ்வு: ரேஸ் கார் போட்டியாளர் அலெக்ஸ் ரிபைரோ

“வெற்றியால் மகிழ்பவன் துயரமாய் இருக்கிறான். சாகும் வரைக்கும் மேலும் மேலும் வெற்றிகளைத் தேடி வாழ்ந்து கசப்பில் சாவதுதான் அவன் விதி. இந்த விஷயத்தில் வெற்றிக்குப் பிந்தைய வாழ்வு என்பது இல்லை.”


உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

கடைசியாக பூக்களின் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது எப்போது?

இது உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்: https://www.payani.com/Newsletter

உங்கள் நண்பர் உங்களுக்கு இதை அனுப்பியிருந்தால், தொடர்ந்து படிக்க இங்கே பதிவு செய்யுங்கள்: https://www.payani.com/contact

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் - வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை