3-2-1: சீனாவில் சைகை மொழி, உயிர்த்திருத்தல், சைக்கிள் ஓட்டியதற்கு விருந்து.

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(6 மார்ச் 2021 - 2021/03)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

சைக்கிள் ஓட்டியதற்கு விருந்து

நானும் சில அயலுறவுத் துறை நண்பர்களும் வாராவாரம் சைக்கிளில் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குப் போய்வருகிறோம் என்று சொன்னேனில்லையா, அதில் ஒரு மைல் கல்: ஆறு மாதங்கள் வாராவாரம் சைக்கிள் பயணம் செய்திருக்கிறோம்! (‘ஓ’ போடு!). இந்தியாவின் அயலுறவு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி, அயலுறவுச் செயலர் திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கனிவோடு எங்கள் குழுவை அவரது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துப் பாராட்டினார். எங்கள் குழுவுக்காக நண்பர் உமா மகேஸ்வரி வடிவமைத்து எதிர்பாரா அன்பளிப்பாகக் கொடுத்த டீ-சர்ட் ஒன்றையும் அயலுறவுச் செயலருக்குப் பரிசளித்தோம். அதில் “Cyclomats: Ride the World” என்று எழுதியுள்ளது.



(ii)

தாய்மொழி காணொளி

“வணக்கம் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு 30 ஆளுமைகள் பல துறைகளிலிருந்து “தாய்மொழி கற்பதன் அவசியம் என்ன?” என்பது பற்றிய அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்களும் சில நிமிடங்கள் பேச முடியுமா?” என்று கேட்டார் நண்பர் பார்த்தசாரதி. நான் வாஷிங்டனில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியபோது அவருடனும் வாஷிங்டன் தமிழ்ச் சங்க நண்பர்களுடனும் பழக்கம். அவர்களுடைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறேன். “தாய்மொழி பற்றிப் பேசத் தயங்குவேனா, அவசியம் பேசுகிறேன்” என்று சொன்னேன். தாய்மொழி கற்றல் பயனளவிலும் உணர்வு ரீதியாகவும் ஏன் முக்கியம் என்று பேசினேன். பயணிக் குறிப்புகளில் முன்பு “ஆழ்மனமும் தாய்மொழியும்” என்கிற தலைப்பில் (21 பிப்ரவரி 2021) ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அதையும் இந்த பேச்சில் விளக்கினேன். காணொளியைப் பார்க்க: சுட்டி




(iii)

மொழியாக்கச் சோம்பல்

‘சீனா: விலகும் திரை’ என்னும் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு சுவாரஸ்யமான பத்தியை இந்த ‘பயணிக் குறிப்புகள்’ கடிதத்தில் தரலாம் என்று தோன்றியது. ஆனால், என்னதான் “இப்படித்தான் நூலில் இருக்கிறது” என்று குறிப்பெழுதிவிட்டுப் போய்விடலாம் என்றாலும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. கீழே ‘பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்’ பகுதியில் உள்ள படத்தைப் பாருங்கள். எத்தனை பிழைகள்!

  • டாக்ஸி ஓட்டுநரைச் சுட்டும் ‘he’ என்னும் சொல்லை ‘அவர்’ என்று சொல்லாமல் ‘அவன்’ என்னும் மரியாதைக் குறைந்த நிலைக்குத் தள்ளுவது

  • ஒரு கை, இரண்டு கைகள் என்னும் ஒருமை-பன்மை தெளிவு படுத்தாதது

  • அப்பளம் பொரிப்பதற்கும் கல்வெட்டில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கும் வேறுபாடு தெரியாதது

  • Kentucky என்ற இடப்பெயரின் உச்சரிப்பை கூகிளில் கூடத் தேடமுடியாதது...


கடைசியில் வேறு வழியின்றி தமிழிலிருந்தே தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்படி ஆனது.

இவை வெறும் மொழி பற்றிய சிக்கல்கள் இல்லை என்பதைத் தான் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டும்.

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

சீனாவில் சைகை மொழி பற்றி பல்லவி அய்யர்

“ஆனால் (சைகை மொழி) அவ்வளவு நம்பத் தகுந்த மொழி அல்ல. ஒரு முறை ஒரு டாக்ஸி ஓட்டுநரிடம் விமானநிலையத்துக்குப் போகவேண்டும் என்றேன். விமானநிலையம் என்ற வார்த்தை புரியாமல் அவர் தலையைச் சொறிய, நான் அபிநயம் செய்யத் துவங்கினேன். இரண்டு கைகளையும் விரித்து விமானம் மேலே ஏறிப் பறப்பதுபோல் செய்துகாட்டினேன். புரிந்துகொண்டதுபோல் “வண்டியில் ஏறுங்கள்” என்று சைகை செய்தார். பத்து நிமிடம் கழித்து கென்டக்கி பொரித்த கோழி (Kentucky Fried Chicken - KFC) கடையில் போய் நிறுத்துகிறார்! வெற்றிப் புன்னகையுடன் படபடவென்று இறக்கையை அடிப்பது போலச் சைகையும் செய்கிறார்!”

குறிப்பு:

இந்தியப் பார்வையுடன் சீனா பற்றி வந்திருக்கும் படிக்கத் தகுந்த நூல்களில் ஒன்று, Smoke and Mirrors: An Experience of China by Pallavi Aiyar. பக்கம் 288. விலை 354. ஆங்கில மூலம் வாங்க: சுட்டி


தமிழாக்க நூல் வாங்க:

சீனா: விலகும் திரை. ஆசிரியர்: பல்லவி அய்யர். கிழக்குப் பதிப்பகம். பக்கம் 360. விலை 270. சுட்டி



(ii)

உயிர்த்திருப்பது பற்றி கார்ல் சேகன்

“அழிவது விதி. உயிர்த்திருப்பது தான் விதிவிலக்கு.”

— அமெரிக்க வானவியல் அறிஞர் கார்ல் சேகன்.


உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

காது கேளாருக்கான சைகை மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பியதுண்டா?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)