3-2-1: உன்னை ஒப்புக்கொள்வது, நட்பு என்னும் வினைச்சொல், உங்கள் கருத்துகளின் மதிப்பு.

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(13 மார்ச் 2021 - 2021/04)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

உங்கள் கருத்துக்களின் மதிப்பு என்ன?

போன வாரம், ஃபேஸ்புக்கில் எனது நண்பர் ஒருவர் இந்தச் செய்திப் படத்தைப் பகிர்ந்திருந்தார். கூடவே, இதிலிருக்கும் பல படிப்பினைகளைப் பட்டியல் இடுங்கள் என்றும் கேட்டார். பல நண்பர்களும் கருத்துகளைப் பகிர்ந்தார்கள். முக்கியமாக, “தன்னைத் தானே மதித்தல்/நேசித்தல்,” “ஊரார் பேச்சுக்குப் பயப்படாமல் வாழ்தல்,” “அன்பும் வயதும்” போன்ற நல்ல கருத்துகள் பதிவாயின. இதற்கிடையில் ஒரு நண்பர் “இது அவரது வாழ்வு. இது பற்றிய நம் கருத்துக்களைப் பதிவிட நமக்கு உரிமை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் இந்தப் பெண்மணியின் செயலைப் பற்றி மறுத்து எழுதவில்லை என்றாலும் பாராட்டி கருத்து எழுதுவதைப் பற்றி கேள்வி கேட்டார். எனது பதிலாக நான் “இது போன்ற விஷயங்களை நாம் உரக்கப் பாராட்டும்போது, நாம் அமைதியாய் விமர்சனம் செய்வோமோ என்று பயப்படுபவர்களுக்கும் தெம்பாக இருக்கும். நம் கருத்துகள் தனி மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் மதிப்பில்லாதவை அல்ல. செய்யப்பட்ட செயலை மெச்சுவது, செய்ய நினைப்பவர்களை ஊக்குவிப்பது, செய்யத் தெரியாதவர்களுக்கு அந்தச் செயலைச் செய்ய முடியும் என்று தெரியப் படுத்துவது என்று இதில் பல அனுகூலங்கள் உள்ளன. நல்ல விஷயங்களை உரக்கப் பாராட்டுவோம்” என்று சொன்னேன். சரி தானே?


(ii)

நட்பு என்னும் வினைச்சொல்

நாம் நட்பு என்கிற சொல்லைப் பயன்படுத்துவதில் ஒரு விஷயம் மனதில் பட்டது. நாம் ‘பாராட்டுதல்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தி, நட்பு பாராட்டுதல் என்கிறோம். கேட்காமல் கெட்டது கடன், உண்ணாமல் கெட்டது உறவு என்பது போல, பாராட்டாமல் கெட்டது நட்பு என்று தோன்றுகிறது. நட்பு பாராட்டுதல் என்பது என்ன, நண்பர்களுடன் தொடர்பு கொண்டு என்ன பேசுகிறோம் என்பது இல்லாமல் நேரம் போவதே தெரியாமல் பழகுவது தானே? இந்த விஷயத்துக்காக, அந்த விஷயத்துக்காக என்று பலரையும் சந்திக்கிறோம். ஆனால், சும்மா வந்தேன் என்று சொல்லி எத்தனை காலமாச்சு? சும்மா தான் பேசணும்னு தோணுச்சு என்று சமீபத்தில் அழைத்த நண்பர்கள் உண்டா? நட்பு என்னும் பெயர்ச்சொல், நட்பு பாராட்டுதல் என்னும் செயல்பாடாக மாறவேண்டும். காதலைப் போல, நட்பு என்பதும் வினைச்சொல். செய்யப்பட வேண்டியது.


(iii)

ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்

“கூரிய நல்ல ஏர்க் கலப்பை
தென்காணியிலே தொடக்கம்
தானியம் பலவும் விதைக்கின்றார்
ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்”

இந்த வரிகளை நான் சீனப் பழங்கவிதை ஒன்றிலிருந்து மொழிபெயர்த்த போது, எனது நூலுக்கு “ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்: கவித்தொகை” என்று பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் காலச்சுவடு நண்பர்களுடன் பேசும்போது எனது நூலில் இருந்த இன்னொரு மொழிபெயர்ப்புக் கவிதை வரியைப் பயன்படுத்தினோம்:

“வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: கவித்தொகை”


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

சிறுபான்மையான ஆரோக்கியமான மனிதர்கள் பற்றி அதிஷா

“தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்கிற ஆரோக்கியமான மனிதர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ‘ஏன் பாஸ், டெய்லி வாக்கிங் போறீங்க... சுகரா, பீபியா’ என்று சகஜமாகக் கேட்கிற மனிதர்களை எப்போதும் கடக்கிறேன்.

ஏன் நாம் எப்போதும் ஆபத்து, வாசலுக்கு வந்து கதவைத் தட்டும்வரை காத்திருக்கிறோம்?”

சொல் அல்ல செயல்
ஆசிரியர்: அதிஷா. விகடன் பிரசுரம். பக்கம் 264. விலை 235/-

https://books.vikatan.com/index.php?bid=2446


(ii)

உன்னை ஒப்புக்கொள்வது பற்றி பாவ்லோ கோயெலோ

“மற்றவர்களுக்காக எதையாவது நீ ஒப்புக்கொள்ளும் போது, உனக்கே நீ மறுப்பு ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்.”

- பாவ்லோ கோயெலோ, பிரேசிலிய எழுத்தாளர்

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

உடற்பயிற்சி செய்யாத நாட்களில் உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக்கொள்ளும் சமாதான காரணம் எது?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)