3-2-1: வானத்தை ஏமாற்றுதல், சீனப் பல்லவி, வள்ளுவரே!

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(20 மார்ச் 2021 - 2021/05)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

வானத்தை ஏமாற்றுதல்

“அப்பல்லாம் தனியாளுங்க கம்பளி கொண்டுபோய் விக்கக் கூடாது. சுங்கத் துறையோட எல்லைக்கு வெளிய இருந்து ஒரு டன் கம்பளிய தனியாளா சுங்க எல்லைக்கு உள்ளாற கொண்டாந்துட்டா பத்தாயிரம் யுவான் லாபம் பாத்துடலாம். அவங்க சுங்க எல்லைக் காவல் போட்டிருந்தாங்க. நா அச்சு அசல் ஒரே மாதிரியான ரெண்டு ட்ரக்கை பிடிச்சேன். முன்னாடி ஒரு வண்டில பருத்தித் துணி சரக்கு ஏத்தினேன். பின்னாடி ஒரு வண்டில கம்பளி சரக்கு ஏத்தினேன். வண்டிங்க மேல கித்தான் துணியப் போட்டு மூடிக் கட்டினேன். சுங்கக் காவல் எல்லைக்குக் கிட்ட வந்ததும் கம்பளி சரக்கு இருந்த வண்டிய நிறுத்திட்டு, மொதல்ல பருத்தி சரக்கு இருக்கிற வண்டிய ஓட்டிக்கிட்டுப் போய் அவங்கள வண்டில இருந்த சரக்கை சோதனை பண்ண விட்டேன். அவங்க சோதனை பண்ணும்போது ஒன்னா சேந்து நா தந்த சிகரெட்டைப் புடிச்சோம். அவங்களுக்கு சாராய பாட்டிலுங்க குடுத்தேன். திரும்பி வரும்போது ஏதாவது பொருள் கொண்டு வரேன்னு வாக்கு குடுத்தேன். சோதன முடிஞ்சதும் வண்டிய எடுத்துக்கிட்டு முன்னாடிப் போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே நா வண்டிய திருப்பிக்கிட்டு அங்கயே போனேன். அவங்க கிட்ட, வண்டிக்கான ஸ்டெப்னி டயர வெச்சிட்டு வந்துட்டேன்னும் அவசியம் திரும்பப் போய் எடுத்துக்கிட்டு வரணும்னும் சொன்னேன். நேரா கம்பளி சரக்கு ஏத்தியிருந்த வண்டி கிட்ட போனேன். பருத்திச் சரக்கு ஏத்தியிருந்த வண்டிய நிறுத்தினேன். கம்பளிச் சரக்கு வண்டிய எடுத்திக்கிட்டு திரும்பிப் போனேன். சுங்கக் காவல்காரங்களுக்கு ஸ்டெப்னி டயர் கெடச்சிடுச்சின்னு சொன்னேன். அவங்க அப்ப தானே சோதனை போட்டாங்க. மறுபடியும் சோதனை பண்ண அவசியம் இல்ல. இப்படி, ‘வானத்த ஏமாத்திக் கடல கடந்த மாரி’ன்னு சொல்லுவாங்களே, அந்த மாரி நானும் என்னோட ரெண்டு தம்பிங்களும் ஒரு வசந்த காலத்தில நாப்பது டன் கம்பளி வித்து நாப்பதாயிரம் யுவான் சம்பாரிச்சோம்.”

- நாவல்: மாற்றம். ஆசிரியர்: மோ-யான் (இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்). சீன மொழியிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பு: பயணி. காலச்சுவடு பதிப்பகம். பக்கம் 88. விலை ரூ. 80. சுட்டி




(ii)

சீனப் பல்லவி

நான் பெய்சிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 2004இல் இரண்டாம் முறையாக அதிகாரியாகச் சேர்ந்த சில வாரங்களில்,சீனாவில் பணிபுரியும் இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராக எனக்கு அறிமுகமானார் பல்லவி. அவர் 2009இல் எழுதிய எழுதிய ‘சீனா: விலகும் திரை’ என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதைச் சமீபத்தில் படித்துமுடித்தேன். நானும் சீனாவில் இருந்த காலகட்டங்களைப் பற்றிய நூல் என்பதால் எனக்குச் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்தது. இந்தக் கால சீனா பற்றி இந்தியப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட நூல் இது என்பதில் மகிழ்ச்சி. அதிலும் நேரடியாகச் சீனாவில் வாழ்ந்த ஒருவர் எழுதிய நூல் இப்போது தமிழிலும் கிடைக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இதன் மொழியாக்கச் சொதப்பல் பற்றி முன்பு ஒருமுறை ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ கடிதத்தில் நான் அழுதிருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். எனவே, இப்போதைக்கு இது பயனுள்ள சுவாரஸ்யமான நூல் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.


சீனா: விலகும் திரை. ஆசிரியர்: பல்லவி அய்யர். கிழக்குப் பதிப்பகம். பக்கம் 360. விலை 270. சுட்டி



(iii)

ஐயா, வள்ளுவரே!

என்னிடமும் பல திருக்குறள் நூல்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு நூல்களாக வாங்கி அலுவலகத்தில் ஒன்றும், இதோ, இப்போது வீட்டிலிருந்து எழுதும்போது எனது மேஜை மீது ஒன்றுமாக இருக்கும் பதிப்பு, ‘திருக்குறள்: ஆராய்ச்சிப் பதிப்பு.’ ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன். ராமகிருஷ்ண மடம் பதிப்பகம். அலுவலகத்திலும் வீட்டிலும் இருக்கும்போது சட்டென்று ஏதாவது ஒரு குறளில் ஏதேனும் சந்தேகம் வரும். பொதுவாக இந்தச் சந்தேகங்கள் எளிமையாக இருக்காது. ஆழமாகத் தேடவேண்டி வரும். அதே நேரத்தில் வீட்டுக்குப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்றோ அலுவலகம் போனால் பார்த்துக்கொள்ளலாம் என்றோ இருக்கமுடியாது. அதனால் இன்னொரு பிரதி வாங்க விரும்பினேன். இணையத்தில் கிடைக்கவில்லை. பிறகு, நண்பர் பவானீஸ்வரி மூலம் கோவையிலிருக்கும் ராமகிருஷ்ண மடத்திலிருந்து சென்னை வந்து அங்கிருந்து டெல்லி வந்து என்னைச் சேர்ந்த பிரதி தான் என் எதிரே இருக்கிறது.


அப்படியும் சில சந்தேகங்கள் எளிதில் தீராது. உதாரணமாய்

‘அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு’

என்னும் 74ஆம் குறளில் வரும் ‘நாடாச் சிறப்பு’ என்னும் அடைமொழி என்னைக் குடைந்துகொண்டிருக்கிறது. பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், கவிராஜபண்டிதர் என்று உரைகளை அலசிவிட்டேன். ஆங்கிலத்திலும் சுந்தரம், காந்தி என்று தேடிவிட்டேன். எல்லோரும் ஊகங்களைச் சொல்கிறார்கள் என்று தலையாட்டி நகர்கிறது மனது. அவரைப் பார்த்தால் கேட்கணும், ஐயா வள்ளுவரே, எதற்கு ‘நாடாச் சிறப்பு’ என்கிறீர்?

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

நாம் நாமாய் இருப்பது பற்றி தீபா

“தில்லியில் இப்போது வசந்தகாலம். எல்லாப் பூங்காக்களும் மலர்வனம். நண்பரைப் போலப் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்திருத்தல் ஒரு வரம்” என்று எழுதிவிட்டு, “இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி: கடைசியாகப் பூக்களின் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது எப்போது?” என்று நண்பர்களைக் கேட்டிருந்தேன். சில சுவாரஸ்யமான பதில்கள் வந்திருந்தன.

வாழ்வின் எளிமையான சுகங்களும் எப்படித் தள்ளிப் போய் விடுகின்றன என்று அசை போட வைத்தன சில பதில்கள். “பூக்களை பொக்கேவில் கூட அருகில் பார்ப்பதை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது” என்று எழுதியிருந்தார் பவானீஸ்வரி.

"கடைசியாகப் பூக்களின் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது 2008ல் அலுவலக நண்பர்களுடன் ... ஏற்காடு சென்றிருந்த போது" என்று எழுதியிருந்தார் நளினி.

தாய்வானிலிருந்து தீபா நிதானமாக வசந்த கால மலர்களைப் போல் தனது கருத்துகளை வி(வ)ரித்திருந்தார்:

“அழகானதும் ஆழமானதுமான ஓர் கேள்வி. எனக்கு மிகவும் நெருக்கமான சில விஷயங்களில் பூக்களும் ஒன்று. எனது சிறு வயதில் நந்தியாவட்டை, அரளிப்பூ, பூவரசம்பூ, தும்பைப்பூ, சங்குப்பூ, பீநாரிப்பூ எனப் பல பூக்களை அருகில் அமர்ந்து ரசித்திருக்கிறேன். பூவரசம்பூவின் உள்நாக்கு வெற்றிலை பாக்கு போட்டதால்தான் சிவந்திருக்கிறது என்றெல்லாம் என்னைவிட குட்டீஸிடம் (எனக்கே அப்போது ஏழு வயசுதான்) கப்சா அடித்திருக்கிறேன். மதுரையில் என் பாட்டி வீட்டு வாசலிலிருந்த பவழமல்லிச் செடியருகே அமர்ந்து, மணிக்கணக்காக அதன் நறுமணத்திலும், அதன் வெள்ளை, ஆரஞ்சு வண்ணக் கலவையிலும் லயித்திருக்கிறேன். உங்களின் கேள்வி அந்த வாசத்தை என் மூளைக்குள் இன்று பரவவிடுகிறது. ரோஜாப்பு மொட்டு விரிவதைப் பார்க்க வேண்டுமென்று பூந்தொட்டி அருகிலேயே உட்கார்ந்து கொண்டு, கண் இமைக்காமல் அந்த மொட்டையே நானும் என் தோழி தனலட்சுமியும் நள்ளிரவு வரை விழித்திருந்து பார்த்து, பின் எங்களை அறியாமலேயே திண்ணையில் தூங்கிய கதையை உங்களின் கேள்வி இன்று தட்டி எழுப்புகிறது. இன்று அவள் எங்கிருக்கிறாளோ தெரியவில்லை... அதைத் தாண்டி யோசித்துப் பார்த்தால், ஏனோ பத்து வயதிற்கு மேல் பூக்கள் எனக்கு அந்நியப்பட்டிருக்கிறது. பூக்கள் மட்டுமல்ல எனக்குப் பிடித்த இரவு வானம், கடலலை, வானவில் போன்ற பல விஷயங்களை நான் என்னுடன் இணைத்துக்கொள்ளாமலேயே வாழ்ந்து தொலைந்திருக்கிறேன் வாழ்க்கையின் வெள்ள ஓட்டத்தில். அதற்குப் பிறகுப் பத்து வருடங்கள் கழித்து என் மகளை என் மடியில் போட்டுக்கொண்டு அவள் இரு பாதங்களையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு "பூ மாதிரி விரி" என்று கூறியதும், ஏதோ அதைப் புரிந்து கொண்டவள் போல அவள் தன் பாத விரல்களை விரித்த அக்கணத்தையும் உங்களின் கேள்வி இன்று என் கண்களில் நீந்த விடுகிறது. அன்று அவள் விரித்த அப்பூம்பாதத்தில் மீண்டும் பதினைந்து வருடம் தொலைந்துவிட்டிருக்கிறேன் வேறு பூக்களை பார்க்க நேரமின்றி. அதன் பின் எனது முப்பத்தைந்து வயதில், தாய்வான் வாழ்க்கையில் பல முறை பூக்களைப் பார்த்திருக்கிறேன், பூக்கள் அருங்காட்சியகத்திற்குப் போயிருக்கிறேன். எனினும் அவற்றைப் பத்து வயதில் ரசித்தது போல ரசிக்கவில்லை என்ற உண்மையை உங்களின் கேள்வி என் அடி மனதிலிருந்து இன்று தோண்டி எடுக்கிறது. கடைசியாய்ச் சில வாரங்களுக்கு முன்னால் நானும் என் மகளும் 'சக்கூரா' மலர்களைப் பார்த்துவிட்டு வந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவற்றை அதன் அருகில் அமர்ந்து பார்த்து ரசித்தேன். பத்து வயதில் பூக்களை ரசித்த தீபாவிற்கும் இப்பொழுதுள்ள தீபாவிற்கும் எத்தனை வித்தியாசம், அப்பொழுது அந்த ரசனையிலிருந்த என் மன ஓட்டத்திற்கும், இப்பொழுது இருந்த என் மன ஓட்டத்திற்கும் எத்தனை வித்தியாசம். அப்பொழுது நான் ரசித்த சூழலுக்கும், இப்பொழுதிருந்த சூழலுக்கும் எத்தனை வித்தியாசம். அப்பொழுது ரசித்ததை ஐம்புலன்களில் மட்டுமே சேமிக்க முடிந்தது. இப்பொழுதோ ‘ஐ-போனிலும்’ சேமிக்க முடிந்தது. இத்தனை வித்தியாசங்களையும் தாண்டி நான் உணர்ந்த ஒரு ஒற்றுமை, அந்த ரசனையில் விழைந்த உள்ளின்பமும், உள்ளமைதியும். இன்னும் நான் என்னைத் தொலைத்துவிடவில்லை, நான் நானாகவிருக்கிறேன் என்னும் புரிதலை உங்களின் கேள்வி இன்று எனக்கு உணர்த்துகிறது.

சமீபத்தில் நான் ‘the Biology of belief’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதன் நூலாசிரியர் அதில் ‘Quest for fire’ என்ற சினிமாவின் climax scene பற்றிச் சொல்லும்போது ‘With primary survival assured, humankind was free to reflect on the nature of the world’ என்பார் (இதைப் புரிந்து கொள்ள அப்படத்தையும் பார்த்தேன்). இப்பொழுது இதை எழுதும் பொழுது எனக்கு அந்த வாக்கியம் ஞாபகத்துக்கு வருகிறது. அழகான பதிவு!!!👏🙏 தொடரட்டும் உங்கள் பயணம்🥰🥰”



(ii)

அனுபவங்கள் பற்றி ஞானக்கூத்தன்

“ஈர மணலில் எனது கால் நடந்த சின்னக் குழிகளில்
நுரையற்ற கடல் நீர் நிரம்புகிறது.”

- ஒரு குழியில் சிறிது கடல்நீர் கவிதையில் ஞானக்கூத்தன். என் உளம் நிற்றி நீ. காலச்சுவடு பதிப்பகம். பக்கம் 184. விலை ரூ.160. சுட்டி

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

சமீபத்தில் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் தானே நிழலாடும் கவிதை/கதை வரி எது?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)