3-2-1: என் கடலே, லண்டன் வாலி, ஊஞ்சும் குருவி

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(27 மார்ச் 2021 - 2021/06)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

ஊஞ்சும் குருவி

ஒரு நாள் காலையில் காபி போட்டுக்கொண்டு பால்கனியில் நின்று உறிஞ்சிக் கொண்டிருந்தபோது மேலே படும் குளிர்ந்த தென்றலுக்குப் படம் வரைந்த மாதிரி மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ஒரு கிளையில் உட்கார்ந்திருந்த குருவி ஒன்று என்னைப் பார்த்தது. பிறகு தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. அவரவர் காலை அவரவர்க்கு என்று பட்டது. காபி குடித்தபிறகு என் டைரியில் எழுதிய வரி:


நான்
காலைக்கதிரில் காபி பருகி
ஆடும் கிளையில் ஊஞ்சும் குருவி




(ii)

லண்டன் வாலி

‘அறிதல் கலைவெளி’ அமைப்புக்காக சீனச் ‘சங்க இலக்கிய’மான கவித்தொகை பற்றிய உரை தயாரித்தபோது மீண்டும் Arthur Waleyயின் The Book of Songs நூலைப் படித்தேன். இதில் உள்ள கட்டுரைகள் எனது ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ நூலுக்கு உதவின. ஷிழ் சிங் நூலின் பாடல்கள் முழுமைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அல்ல, பொதுமக்களுக்கானது எனது எழுத்து என்ற தெளிவுடன் இயங்கியவர் இந்த லண்டன் வாலி. கவித்தொகையை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புவோருக்குப் பயனுள்ள நூல் இது.


The Book of Songs: The Ancient Chinese Classic of Poetry

by Arthur Waley. Pages 400. Rs 1367 சுட்டி




(iii)

என் கடலே, கரையே, வனமே, சனமே

தமிழில் பாடல் என்றாலே ‘எந்தப் படத்துல?’ என்று தான் அடுத்த கேள்வி. திரைப்படத்துக்கு என்று இல்லாமல் தனிப்பாடல்கள் வருவது குறைவு. அதிலும் ஒரு தனிப்பாடல் பிரபலமாவது என்பது அதைவிடக் குறைவு. அப்படிப் பிரபலமாகும் பாடலில் இசை தவிர வரிகளும் நயமாக அமைந்துவிட்டால்? சமீபத்தில் கேட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல் இப்படிப்பட்ட அதிசயம். இந்தப் பாட்டை எழுதிய தெருக்குரல் அறிவு ஒரு நேர்க்காணலில், “நான் அரசியல் கலைஞனாக ஆக முயலவில்லை. உண்மையான கலைஞனாக ஆக விரும்புகிறேன். இந்தக் காலகட்டத்தில் உண்மையான கலைஞனாக இருப்பது அரசியல் கலைஞனாக இருக்கச் செய்கிறது” என்கிறார். இப்படிப்பட்ட கூர்மையான பார்வையுடன் அவர் எழுதிய வரிகள் வீச்சும் வீரியமும் குறையாமல் இனிதே குழைகின்றன:

என்
கடலே
கரையே
வனமே
சனமே
நெலமே
கொலமே
எடமே
தடமே


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

நாமே நமக்கு நண்பராக இருப்பது பற்றி கிறிஸ்டினா க்வல்

நாம் எல்லோரும் ‘உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீ மற்றவர்களை நடத்த வேண்டும்’ என்னும் பொன்மொழியைக் கேட்டு வளர்கிறோம். ஆனாலும், நாமே நமக்கு நண்பராக இருப்பது எப்படி என்பது குறித்து எந்த வழிகாட்டலும் நம்மில் பலருக்குக் கிடைப்பதில்லை.

—கிறிஸ்டினா க்வல்

தற்கனிவு என்பது தான்தோன்றித்தனம் அல்ல: இப்படித்தான் முயல வேண்டும்.
—கிறிஸ்டினா க்வல்

Self-compassion is not self-indulgence: here’s how to try it
—Christina Chwyl

பயனுள்ள மனவியல் கட்டுரை. சுட்டி



(ii)

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு பற்றி நா விச்வநாதன்

ஒரு சிறந்த எதிர்காலத்திற்காகப் போராடும்போது எல்லா விஷயத்தையும் பழியையும் ஏற்பது சரியானதுதான். சொந்த வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டியிருந்தாலும் பேரானந்த அனுபவமாகத்தான் இருக்கும். வாழ்க்கையை மேலும் அழகு பொங்குவதாக மாற்றுவதற்கு எல்லாவற்றையும் துறப்பது ஒருவகைப் பிரார்த்தனைதான். கரிச்சான்குஞ்சு தமிழிலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்.

—நா. விச்வநாதன்

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

உங்களுக்கு நீங்கள் நல்ல நண்பராக இருந்தால், மனமறிந்து இன்று என்ன உதவி செய்துகொள்வீர்கள்?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)