தொகுப்பு: “பங்யோ!” - 20 வருடத்து உண்மைச் சிறுகதை + பாடல் + சுட்டிகள்

தொகுப்பு: கதைப் பகுதிகள் + பாடல் + சுட்டிகள்

கதைப் பகுதிகள்

“பங்யோ!”

நவம்பர் 8, 2019. தாய்பெய் நகரம்:

“பங்யோ’ என்று ஒரு சீனப் பாட்டுப் பாடட்டுமா? உங்களுக்கு அந்தப் பாட்டு தெரியுமா என்று தெரியாது...” என்றார் அந்த இளைஞர். நான் வைதேகியைப் பார்த்தேன். அவள் கண்கள் எல்லோரையும் சுற்றுமுற்றும் பார்ப்பதான தோற்றத்தில் என்னையும் பார்த்துச் சென்றன.

அன்று தாய்பெய் நகரில் எங்கள் வீட்டில் சில இந்திய நண்பர்களுக்கான விருந்து. சாப்பாடு முடிந்து இனிப்பும் சிரிப்பும் டீயும் பாடல்களுமாக வீடு நிறைந்துகொண்டிருந்தது. என் ஒருத்தனின் நேயர் விருப்பமாக வைதேகி “காதோடுதான் நான் பாடுவேன்” பாடினாள்.

ஒரு இளைஞன் புது ஹிந்தி பாடலைப் பாடினான். எனது அலுவலக நண்பரின் மனைவி ஜான் டென்வரின் “You fill up my senses” பாடினாள். வந்திருந்தவர்களில் சிலருக்குச் சீனமொழி ஓரளவு தெரியும். அதில் ஒருவர்தான் ‘பங்யோ’ பாடல் தெரியுமா என்று கேட்டுவிட்டு அந்த சீனமொழிப் பாடலைப் பாடினார்.

அந்த இளைஞர் பாடி முடித்தவுடன் எல்லோரும் கை தட்டினோம். வீரமான முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். சீனமொழி உச்சரிப்பு கத்திமேல் நடப்பது போல. இவரோ அதில் படுத்துப் புரண்டு எழுந்திருந்தார். சீனமொழிக்கு இதெல்லாம் சகஜம் தான். ஆனால், அந்தப் பாடலின் மெட்டும் இவரும் ஓரளவாவது சமாதானமாகப் போயிருக்கலாம் என்று பட்டது.

அடுத்த பாடல் துவங்குவதற்கு முன்னால் எல்லோரையும் இரண்டாவது ரவுண்ட் ஐஸ்கிரீம் எடுத்துக்கொள்ள அழைத்தோம். ஹிந்திப் பாடலைப் பாடிய இளைஞனிடம் வைதேகி அந்தப் பாடல் எந்தப் படத்தில், யார் பாடியது என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். அவனும் பதில் சொன்னான். பிறகு ‘பங்யோ’ பாடலைப் பாடிய வீர இளைஞன், அந்தப் பாடலை வைதேகி பாடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தான். வைதேகி மறுத்தாள். மற்ற பலரும் அந்த இளைஞனின் கோரிக்கையை வழிமொழிந்தார்கள்.

பரவலான வற்புறுத்தலுக்குப் பிறகு, “நானும் சீனமொழியைச் சிதைத்துத்தான் பாடுவேன். ட்யூன் மட்டும் ஓரளவு பழக்கம்” என்று சொல்லிவிட்டு, சோபாவில் உட்கார்ந்துகொண்டு தாய்வானின் அலைகளுக்கும் மலைகளுக்கும் இலைகளுக்கும் வாஞ்சை உண்டாகும்படி அவளது வாழ்நாளில் ஏழாயிரத்து முந்நூற்று ஐம்பத்து எட்டாம் முறையாக பங்யோ பாடலின் சில வரிகளைப் பாடினாள் வைதேகி.

“தனியாளாய் பலகாலம். மழைக்காற்றைக் கடக்கின்றேன்

பிழையுண்டு, களைப்புண்டு, பின்னும் நீங்கா நினைவென்ன?...

நட்பே! ஒன்றாய் எப்போதும்.

இப்போதெங்கே அக்காலம்?

ஒரு பேச்சு, ஒரு மூச்சு, ஒரு தாகம், ஒரு பானம்...

பங்யோ! ஈஷன் ஈச்சி ஸௌ...”

அன்று விருந்தினர்கள் போன உடனேயே அந்தப் பாடல் எங்கள் ஸ்பீக்கரில் மீண்டும் தவழ ஆரம்பித்திருந்தது. கூடவே வைதேகி ஹம்மிங் செய்துகொண்டிருந்தாள்.

“தானானா, தானானா...”

* * * * * * *

1998. பெய்ஜிங் நகரம்:

அவள் உள்ளே நுழையும்போதே அந்த மெட்டை முணுமுணுத்திருக்க வேண்டும். நான் கவனிக்கவில்லை. வைதேகி வாங்கி வந்திருந்த காய்கறிகளை எடுத்து ஃபிரிஜ்ஜில் வைக்கும்போது அவள் என் எதிரே வந்து மீண்டும் ஹம்மிங் செய்தாள்.

“தானானா, தானானா, தானானா, தானானா”

“என்ன பாட்டு?” என்றேன்.

“நீ சொல்லு. இது ஏதோ சைனீஸ் பாட்டு. நீ சொல்லுவேன்னு ஹம் பண்ணா என்னையே கேக்கறியே?” என்றாள்.

“இன்னொரு தடவை ஹம் பண்ணு?”

“தானானா, தானானா, தானானா, தானானா”

“ம்ஹூம், தெரியலையே?” என்றேன்.

“உனக்கெல்லாம் கவர்மெண்ட் பணம் கொடுத்து பெய்ஜிங் வரைக்கும் அனுப்பி சைனீஸ் கத்துக்கொடுத்தா, ஒரு பாட்டைக் கூட கண்டுபிடிக்க முடியலையாடா?” என்றாள்.

“எங்கே கேட்ட இந்தப் பாட்டை?” என்று பேச்சை மாற்றினேன்.

* * * * * * *

(நடுவுல கொஞ்சம் பக்கத்த–இப்போதைக்கு–காணோம்...)

* * * * * * *

நவம்பர் 8, 2019. தாய்பெய் நகரம்: ....

....சில வினாடிகளில் என் கண்கள் வைதேகியைத் தேடின. முன்வரிசையில் அவளது உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அதே வரிசையில் அடுத்த முனையில் கான்ஸ்டன்ஸின் கணவரும் உட்கார்ந்திருப்பதும் தெரிந்தது. அப்போது முன் வரிசையில் அவர்கள் இரண்டு பேர் மட்டும்தான் தனித்தனியே இரு மூலைகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

நான் வைதேகியின் முன் நின்றேன். “ஒரு நிமிஷம், வா” என்றேன்.

“என்ன?” என்றாள்.

நான் கான்ஸ்டன்ஸின் கணவரை நோக்கி நகர்ந்தேன்.

வைதேகி என் கையைப் பிடித்து இழுத்தாள். கிசுகிசுத்தாள்.

“நாம ஏற்கனவே அவருக்கு ஹலோ சொல்லிட்டோம்டா”

“பரவால்ல, வா”

அவள் கையைப் பற்றி எழுப்பினேன்.

கூட்டிச்சென்று, அவருக்குப் பக்கத்து நாற்காலியில் உட்கார வைத்தேன். அவர் நிமிர்ந்து பார்த்தார். எங்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தபடி மெல்லப் புன்னகைத்தார்.

வைதேகியின் புருவங்கள் சுருங்கியிருந்தன. புன்னகைக்க முயன்றாள்.

“இவர் யார் தெரியுமா?” என்று கேட்டேன்.

“ம்ஹூம்” என்றாள் வைதேகி.

நான் அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி அவரைப் பார்த்து, “மன்னிக்கவும். நீங்கள் உங்களின் முழுப் பெயரையும் இவளுக்குச் சொல்லமுடியுமா?” என்று கேட்டேன்.

பாடல் மொழிபெயர்ப்பு

“நட்பே!” என்னும் சொல் போதும்

இந்தக் கட்டுரைக்காக அந்த மிகப் பிரபலமான இனிமையான 'பங்யோ' (நண்பர்) என்னும் பாடலின் சில வரிகளை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.

எதற்குக் குறை வைக்க வேண்டும் என்று அந்தச் சிறிய பாடலை முழுமையாக மொழிபெயர்த்துவிட்டேன்!

இந்தப் பாடலை இன்னும் ரசிக்க வேண்டுமென்றால், இன்னும் ஒரு சில படிகள் மேலே போவோம்:

1. முதலில் இந்த ஒரிஜினல் வீடியோவைப் பார்த்துவிடுங்கள். கூடவே வாக்கின் ச்சாவ்-இன் இனிய புன்னகையையும் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

2. இந்த 2வது வீடியோவில் ஒரிஜினல் வாக்கின் ச்சாவ் குரலும், கூடவே, ஆங்கில மொழிபெயர்ப்பும் (வரிவரியாக, இசைக்கு இசைந்து) கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவை உருவாக்கிய Allen Douangchak சொல்லியிருப்பதுபோல, இது அர்த்தத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், மெட்டுக்கு ஏற்றபடி வளைந்துகொடுத்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

3. கடைசியாக, உங்களுக்கு வாயார, உங்களது நண்பர்களை, இளவயது நினைவுகளை அசைபோட்டபடி தமிழில் பாடவேண்டும் என்றால், இதோ, இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புடன் பாடிப்பாருங்கள். மேலே ஆலன் சொல்லியிருப்பது போல, நானும் நேரடி அர்த்தத்துக்கு மட்டுமில்லாமல், பாடலின் மெட்டுக்கும் பொருந்திவர வேண்டும் என்னும் நினைவுடன்தான் மொழிபெயர்த்திருக்கிறேன்.


தனியாளாய் பலகாலம். மழைகாற்றைக் கடக்கின்றேன்

பிழையுண்டு, களைப்புண்டு, பின்னும் நீங்கா நினைவென்ன?...


காதலின்றி புரியாது

கவலை நினைவு வதைத்தாலும்

கனவுண்டு, என் நெஞ்சில்...நீ உண்டு.


நட்பே! ஒன்றாய் எப்போதும்.

இப்போதெங்கே அக்காலம்?

ஒரு பேச்சு, ஒரு மூச்சு, ஒரு தாகம், ஒரு பானம்...


வெறுமை இல்லை ஒருபோதும்.

“நட்பே!” என்னும் சொல் போதும்.

வலி உண்டு, வடு உண்டு, தொலைவுண்டு...நான் உண்டு.


உங்களுக்குப் பாட்டு பிடித்திருந்தால், இதன் இசையோ, வரியோ உங்கள் நெஞ்சத்தைத் தொட்டிருந்தால், பழைய நினைவுகளைக் கிளறி மகிழ்ச்சி தந்திருந்தால், எழுதுங்கள்.

நீங்கள் யாராவது தமிழில் இதைப் பாடி பதிவு செய்தால், அதையும் வலையில் ஏற்றி சுட்டியை அனுப்பிவையுங்கள்.

“ஏய், நாம கூட இப்படித்தானே எப்பவும் ஒன்னுமன்னா சுத்திக்கிட்டு இருந்தோம்?” என்று உங்கள் நட்புகளை வாட்ஸாப்பில் கேட்க, அழகான வடிவமைப்பில் அந்தப் பாடலின் வாழ்த்து அட்டை. (button)

சுட்டிகள்

இன்னும் படிக்க

முதலில், முகநூலில் நான் இந்தச் சம்பவத்தை ஆங்கிலத்தில் எழுதப் போய், அது பன்னாட்டுச் செய்தியானது.

முகநூலில் - ஆங்கிலம்: படிக்க >

இது ஒரு செய்தியாக பல ஊடகங்களில் - முக்கியமாக, சீன மொழியில் - வெளியாகியுள்ளது. ஒரு சில செய்திச் சுட்டிகள்:

தாய்வான் - ஆங்கிலம்: படிக்க >

தாய்வான் - சீன மொழி: படிக்க >

சிங்கப்பூர் - ஆங்கிலம்: படிக்க >

சிங்கப்பூர் - சீன மொழி: படிக்க >

மலேசியா - சீன மொழி: படிக்க >