சிந்தனை, செய்தி, சில்லறை...20191208

இப்படியும் ஒருவரால் ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்க முடியுமா?

- வாசகர் ‘தீபா ஸ்ரீதரன்’

20191208

எ.சீ.மொ.பே.21.வா நூல் பற்றி, வாசகர் ‘தீபா ஸ்ரீதரன்’ முகநூலில் எழுதிய பின்னூட்டமும், அடியேனின் பதிலும். மிக்க நன்றி, தீபா!

‘தீபா ஸ்ரீதரன்’ பின்னூட்டம்:

எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்: இன்று தான் படிக்கத் துவங்கினேன். முன்னுரையைப் படித்தேன்,படித்தேன்,படித்தேன். ஆமாம், மூன்று முறை படித்தேன். உங்களைப் போலவே உங்கள் எழுத்து நடையும் அத்தனை எளிமை!!!! (ஆஹா சூப்பர் ஆசிரியர் கிடைத்து விட்டார். எப்படியாவது சீன மொழியை படித்துவிடலாம் என்று ஒரே பூரிப்பு)

சரி, முன்னுரையிலேயே மூழ்கிக்கிடந்தால் எப்படி என்று சுதாரித்துக் கொண்டு பாடத்திற்குள் நுழைந்தேன். (உங்களுக்கு ஒரு சலாம் ( நீன் ஹாவ்) போட்டு விட்டு) பக்கங்களை கீழே தள்ள தள்ள (புரட்ட முடியவில்லை,சேர்ந்து நடக்க வேண்டுமே) என்ன ஒரு அருமையான அனுபவம்.

இப்படியும் ஒருவரால் ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்க முடியுமா? என்று வியந்து போனேன். கதைகளும், நகைச்சுவை உணர்வுகளும், சுவாரசியமான அனுபவங்களும்.... Thoroughly enjoyed it....

என் மகளுக்கு ஆங்கில புத்தகங்கள் எழுத வேண்டும் என்று ஆசை. அதனால் தமிழ் பத்தகங்கள் சிலவற்றையும் explore பண்ண வேண்டும் என்று சமீபத்தில் கூறினாள் (ஏதோ தட்டுத் தடுமாறி வாசித்து விடுகிறாள் தமிழை)இந்த புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறேன் அவளுக்கு... சும்மாவா "ஒரே கல்லில் நான்கு மாங்காய்" ஆச்சே...

1. தமிழ் மொழி

2. சீன மொழி

3. எழுத்து நடை

4. வாழ்க்கைக் கதை, நான்கும் கற்றுக் கொள்ளலாமே அவள்.

ஆசிரியர்(நீங்கள்): சரி இந்த கதையெல்லாம் இருக்கட்டும், நீ சீன மொழி கற்றுக் கொண்டாயா?

நான் : 🙄🙄🙄🙄(Mind voice: நீங்கள் தானே சேர்ந்து நடக்கலாம் "வா" என்றீர்கள். உங்களின் எழுத்து நடையோடு நடந்ததில் சீனத்தை மறந்து விட்டேன் ஐயா)

ஆசிரியர்(நீங்கள்) : என்ன திருதிருன்னு முழிக்கிற? பதில் சொல்லு

நான் (த்)வெய்-பூ-ச்சீ... அடுத்த நூல் எப்பொழுது வெளியிடுவீர்கள் ஐயா?

ஆசிரியர்(நீங்கள்) : -------

அடியேனின் பதில்:

மிக்க நன்றி, தீபா. நூலைப் படிப்பது உங்களுக்கு அலுப்பூட்டவில்லை என்பதே மனதுக்கு நிறைவு. உங்களது கனிவான பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது. (ஓரிரு வரிகளை எனது இம்மாத மின்னஞ்சல் கடிதத்திலும் குறிப்பிடுகிறேன்)

உங்கள் மகளுக்குத் தமிழ்மீது வெறுப்பு வளர நானும் ஒரு காரணமாகிவிடுவேனோ என்கிற பயம் தவிர, பிரச்சனை அதிகம் இல்லை. அவளது ஆங்கில நூல் வெளிவரும் நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

“வாங்க, சீன மொழி பேசலாம்” என்கிற தலைப்பில் நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘21 வாக்கியங்கள்’ முன்னுரையில் சொன்னதைப்போல, ஒரு மொழி நூல் ஏன் படிக்க சுவாரஸ்யமாக இருக்கக் கூடாது என்று தோன்றிவிட்டது. (வெளியுறவுத்துறையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு பாதி சம்பளம் பேசாமல் இருப்பதற்கு. மீதி? பேசவேண்டிய சூழல் வந்துவிட்டால், கேட்போருக்கு சுவாரஸ்யம் வந்துவிடாமல் கவனமாகப் பேச.😁 )

நூல் வெளிவரும்போது உங்களுக்கும் சொல்கிறேன்–இல்லை, நீங்கள் உங்கள் மகளுக்கு அதைச் சொல்லியாகவேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.

சேர்ந்தே நடப்போம்!

அன்புடன்

தரன்

#வாசகர்_பின்னூட்டம் #பயணி #பயணி_தரன் #தமிழ்_வழி_சீனம்

#சீன_மொழி #சீன_மொழி_பேச_21_வாக்கியங்கள்