சிந்தனை, செய்தி, சில்லறை...20200314

முன்பின் தெரியா ஓவியரின் அன்பும் கனிவும் அக்கறையும்

20200314

“அம்மா ஒரு எழுத்தோவியர். Calligraphist. உங்களுக்காகவே ஒரு சிறிய ஓவியத்தை வரைந்திருக்கிறார். அதை உங்களிடம் நேரடியாக கொடுக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார். அதைக் கொடுக்க உங்களை ஒரு சில நிமிடங்கள் சந்திக்க முடியுமா?” என்று ஒரு தாய்வான் நண்பர் எங்களை அணுகினார். “அதற்கென்ன, அவசியம் வாருங்கள்” என்று சொன்னேன்.

அவரை நேரில் சந்தித்தபோது, அவருடைய தாய் திருமிகு யே, பல வருடங்களாக சீன எழுத்துக்களை ஓவியமாக வரையும் கலையைக் கற்றுக்கொண்டு வருகிறார் என்று அறிந்தேன். அவர் எனக்காக வரைந்த எழுத்தோவியத்தை அந்த நண்பர் தந்தார்.

முதலில் அந்தப் படைப்பில் இருக்கும் வரிகளை பற்றி சொல்லிவிடுகிறேன். இந்த இரண்டு வரிகள் மங் ஸு (Meng zi, Mencius https://en.wikipedia.org/wiki/Mencius) எனும் சீனத் தத்துவ கவிஞர் எழுதியவை. கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த வரிகள் என்ன சொல்லுகின்றன?

மக்களை நேசிப்பவரை மக்கள் என்றும் நேசிப்பார்கள்

மக்களை மதிப்பவரை மக்கள் என்றும் மதிப்பார்கள்

மிக எளிமையாகவும் நேரடியாகவும் தெளிவாகவும் மனித உறவுகளுக்கு உள்ளே இருக்கும் நடைமுறைக்கும் தத்துவத்துக்கும் அடிப்படையான விஷயத்தை இந்த வரிகள் சொல்லுகின்றன.

முதலில் ஒரு விளக்கம். என்னை பொருத்தவரை, இந்த வரிகளை எனக்காக எழுதிய அந்தப் பெண்மணியின் கனிவின் வெளிப்பாடாகவே நான் இதை எடுத்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக, இந்த கலைப் படைப்பில் சில அழகான ஓவியக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. அதற்கு முதலில் நாம் சீன மொழியில் இது எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதை சற்றேனும் பார்த்துக்கொள்ளலாம்.

愛人者人恆愛之

敬人者人恆敬之

இதை ஆங்கில எழுத்துருக்களை கொண்டு சீனு ஒலிகளை எழுதும் பின்யீன் (pinyin) எனும் எழுத்து முறையில் எழுதினால் இப்படி இருக்கும்:

Ài rén zhě rén héng ài zhī,

jìng rén zhě rén héng jìng zhī.

மேலே உள்ள வரிகளை ஆங்கிலம் படிப்பது போல படித்தால் தவறான ஒலிகளை எழுப்புவோம். உதாரணமாக, இந்த வரிகளின் கடைசி வார்த்தையான zhi என்பதை ட்ர் இன்று படிக்க வேண்டும். ren என்பதை ரன் என்று படிக்க வேண்டும். ஆனால், இப்போதைக்கு இந்த விஷயங்களை குழப்பிக் கொள்ளாமல் நேரடியாக மேலே உள்ள சீன வார்த்தைகளை இந்த படத்தில் எப்படி ஓவியமாக ஆக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

முதலில், சீன மொழியில் எழுத்துக்கள் என்பவை இல்லை. சீன மொழியின் அடிப்படையே முழுமையான அர்த்தமும் சேர்ந்த வார்த்தைகள்தான். எனவே இந்தப் படத்தில் இருக்கும் ஒவ்வொரு அடிப்படை வடிவமும்(unit) தனித்தனி வார்த்தைகள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவை முழுமையான வார்த்தைகள் என்பதால் இவற்றை மேலிருந்து கீழாகவும் எழுதலாம். இடப்புறத்திலிருந்து வலப்புறமாகவும் எழுதலாம். எடுத்துக்காட்டாக, எழுதலாம் வலப்புறமாகவும் இடப்புறத்திலிருந்து.

இந்த ஓவியத்தில் எழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. நான் மேலே கொடுத்திருக்கும் சீன எழுத்துக்களை உற்றுக் கவனித்தால், அவை இந்த ஓவியத்தில் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிக்க முனைந்தால், இதைக் கவனிக்க முடியும்.

சீன எழுத்து சில ஆயிரம் ஆண்டுகளாக சீன கவிஞர்களும் ஓவியர்களும் பல வகைகளை கடை பிடித்திருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் இடைக்காலச் சீன ஓவிய முறையில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.

இது ஓவியம் என்பதால், முக்கியமாக ஒரு அச்சுரு (font) இல்லை என்பதால், ஒரே சொல்லையே கூட பலவகைகளில் கலைச்சுதந்திரத்துடன் ஒரு சில மாற்றங்களுடன் அதன் பல அழகுகளும் மிளிரும் வகையில் எழுதி இருக்கிறார்கள். உதாரணமாக, மனிதனைக் குறிக்கும் 人 (ரன்) என்ற சொல்லை நான்கு முறையும் வெவ்வேறு வகையில் எழுதி இருப்பதைக் கவனிக்க முடியும்.

இந்த ஓவியத்தின் வலப்பக்கம் சிறு வடிவத்தில் மேலிருந்து கீழாக எழுதி இருக்கும் வார்த்தைகள் கவிஞர் மங் ஸு சொன்னது என்பதைக் குறிக்கின்றன. அதேபோல, இடப்பக்க கோடியில் சிறு வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் தாய்-நான் என்னும் நகரை சேர்ந்த ஏறி யே-லீ-ஷ்ஸிங் எனும் ஓவியர் எழுதியது என்பதைக் குறிக்கின்றன.

நான் இந்த ஓவியரை சந்தித்ததே இல்லை. இப்பொழுது என்னுடைய பணி முடிந்து தாய்வானில் இருந்து இந்தியாவுக்கு கிளம்புவதற்காக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டிருக்கும் நான், பலரையும் சந்தித்து விடை பெற்றுக் கொண்டிருக்கிறேன். அப்போது தாய்வானின் மறக்கமுடியாத கூறுகளில் ஒன்றாக, முன்பின் தெரியாத மனிதர்களின் அன்பையும் கனிவையும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நமக்கு முன்பின் தெரியாதவர்களும் நடைபாதையில் பார்க்கும்போதோ பூங்காக்களில் பார்க்கும்பொதோ மற்றப் பொது இடங்களில் சந்திக்கும் போதோ, அன்பும் கனிவும் கொண்டு புன்னகைப்பதோடு மட்டுமல்லாமல் மனமுவந்து உதவும் முன்வருவதைப் பல நேரங்களில் கண்டிருக்கிறேன். இப்போது முன்பின் அறிமுகமில்லாத என்பதையும் கடந்து பார்த்தேயிராத ஒரு தாய்வான் நண்பரின் அன்பும் அக்கறையும் கனிவுமான பரிசு என்னை வந்தடைந்திருக்கிறது.

நாங்கள் டெல்லி வந்து சேர்ந்து, காகிதப்பெட்டிகளில் அடைந்திருக்கும் எங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு புது வாழ்வு வாழத் தொடங்கும்போது, எங்கள் வீட்டின் வரவேற்பறையில் இந்த படம் அந்த அன்பையும் அக்கறையையும் கனிவையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.