சிந்தனை, செய்தி, சில்லறை...20200315

அண்டத்தின் அணையா

அறிவுச் சுடர்:

ஸ்டீபன் ஹாவ்கிங்*

(2ஆம் ஆண்டு நினைவு நாள்)

20200315

அண்டம் மறுபடியும் குறும்புடன் கண்ணடிக்கிறது. ஜனவரி 8, 1942இல் வானியல்-இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாவ்கிங் பிறந்தார். அன்றுதான் ‘பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது’ என்று முதலில் கண்டுபிடித்துச் சொன்ன வானியல் அறிஞர் கலிலியோவின் 300வது பிறந்தநாள். கடந்த மார்ச் 14ஆம் தேதி ஸ்டீபன் இறந்தார். அன்றுதான் அணுவை அலசிய இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டீனின் 139வது பிறந்தநாள்.

ஸ்டீபனும் - அப்படித்தான் அவரைக் கூப்பிடவேண்டும் என்பார் - கண்ணடித்திருப்பார். “இந்த மாதிரியான தற்செயலான விஷயங்களுக்கெல்லாம் அர்த்தம் எதுவும் கிடையாது” என்று சொல்லியிருப்பார். ஆனால் அவர் வாழ்வில் பல புள்ளிகள் கோடுகளாக இணைந்து சுழன்று வலை பின்னிக்கொண்டே இருந்தன.

இங்கிலாந்தில் வளர்ந்த ஸ்டீபனின் அப்பா படித்தது அறிவியல். அம்மா படித்தது தத்துவம். ஸ்டீபன் பின்னாளில் அறிவியலின் துணைகொண்டு கடவுள் எனும் தத்துவத்தை அலசினார். ஸ்டெபனுக்குப் பிடித்தது கணிதம். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தது அறிவியல். பின்னாளில் கணிதத்தின் மூலம் அறிவியலின் பல புதிர்களை விளக்கினார். 21 வயதில் தசைகள் இறுகி இழுபட்டுச் சுருங்கும் ALS எனும் பக்கவாதம் போன்ற நோய் வந்து, கல்லூரியில் படிக்கும்போதே பேச்சுத் திறனை இழந்த இவர்தான் அணுவையும் அண்டத்தையும் இணைக்கும் அறிவியலை சாமானியர்களுக்கும் புரியும்படியாக எடுத்துச் சொன்னார். “இன்னும் இரண்டே வருஷத்தில் நீ இறந்து விடுவாய்” என்று டாக்டர்கள் சொன்னதைப் பொய்யாக்கி 76 வயது வரை வாழ்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு குலைந்தது. ஆனால், அறிவு சுடராக ஒளிர்ந்தபடியே இருந்தது.

அவர் வாழ்வின் கடைசிப் பகுதியில் ஒரு விரலையும் அசைக்க முடியாமல், கண் பாவையை அசைத்தே கம்பியூட்டர் மூலமாகப் பேசுவார், எழுதுவார், பாடம் நடத்துவார், கடி ஜோக்குகள் சொல்லுவார், கடவுள் தேவை இல்லை என்று அறிவியலால் நிறுவுவார், அவருடைய சக்கர நாற்காலியை இயக்குவார். (அருண் மேத்தா, விக்ரம் கிருஷ்ணா என்ற இரண்டு இந்தியர்கள் தான் இதற்கு ப்ரோக்ராம் எழுதினார்கள்). திருமணம், மூன்று பிள்ளைகள், விவாகரத்து, தன்னைப் பார்த்துக்கொண்டு நர்ஸ்களில் ஒருத்தருடன் இரண்டாவது திருமணம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் வேலை, எண்ணிலடங்கா அறிவியல் விருதுகள், விற்பனையில் விறுவிறுப்பு நாவல்களுடன் போட்டிபோட்ட அறிவியல் நூல்கள், அவரது மகளுடன் சிறுவர்களுக்கு எழுதிய அறிவியல் நூல்கள், அவர் வாழ்வு பற்றிய நூல்களும் திரைப்படங்களும் (2014இல் வந்த The Theory of Everything என்ற படத்தில் ஸ்டீபனாக நடித்தவருக்கு ஆஸ்கர் கிடைத்தது), தொலைக்காட்சித் தொடர்கள், பன்னாட்டுப் பயணங்கள் (இந்தியா உட்பட), என்று பிரகாசமான ஒரு வாழ்வு. ஆனால் “ஐன்ஸ்டீனுக்குப் பிறகு நீங்கள் தான் அறிவியலின் மாமேதை என்கிறார்களே?” என்றால், “அதெல்லாம் பத்திரிகைக்காரர்களின் வேலை. அவர்களுக்கு ஹீரோக்கள் வேண்டும். அதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார்.

அவர் மாமேதை என்றுதான் பலரும் சொல்லுகிறார்கள். முக்கியமாக, பேரண்டத்தின் இலக்கணத்தைக் கருங்குழிகளை (Black Hole) ஆராய்ந்து விளக்கியவர் ஸ்டீபன். புவியீர்ப்பு விசையால் பூமி இழுத்து ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுகிறது, அப்படியே தான் பேரண்டத்தின் எல்லா பொருட்களும் அவற்றின் அடர்த்தியைப் பொறுத்து ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு பயணிக்கின்றன என்றார் நியூட்டன். அடிப்படையில் பொருளுக்கும் கதிர்களுக்கும் வித்தியாசம் இல்லை, எல்லாமே சக்தி தான் என்றார் ஐன்ஸ்டீன். அண்டத்தின் சில பகுதிகளின் அடர்த்தி உக்கிரமாக இருப்பதால், அவை அவற்றின் பக்கத்தில் போகும் எல்லாவற்றையுமே இழுத்துக்கொள்கின்றன, ஒளிக்கதிர்களைக் கூட. இவைகளைக் கருங்குழி (Black holes) என்கிறார்கள். 1970களிலிருந்து நம் அண்டத்தில் பல கருங்குழிகளை நிஜமாகவே அடையாளம் கண்டுகொண்டார்கள்.

ஆனால் ஸ்டீபன் ஒரு படி மேலே போய், பேரண்டமும் ஒரு கருங்குழி போலத்தான் என்று நிரூபித்தார். மற்றவர்கள் இதைப் புரிந்துக்கொள்ள முயலும் நேரத்திலேயே, அவரே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டார். ‘உலகத்தில் எப்போதுமே சீர்குலைவு அதிகரித்துக்கொண்டே போகும்’ என்ற அறிவியல்விதி கருங்குழியில் செல்லுபடியாகாதா? எல்லா பொருளும் கருங்குழிக்கு உள்ளே போனால், அங்கேயும் சீர்குலைவின் அளவான சிதறம் அதிகமாகத் தானே ஆகவேண்டும்? இதைப் பற்றிக் கணக்குப் போட்டுப்பார்த்து ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். ‘நான் தடுக்கி விழுந்து அதைக் கண்டுபிடித்துக் கடுப்பாகிவிட்டேன்’ என்றார். கருங்குழி என்பது கருப்பும் இல்லை, குழியும் இல்லை, அது கதிரியக்கம் கொண்ட சக்தியின் ஊற்றுக்கண். காலத்தின் ஒரு புள்ளியில் அது வெடித்து ஆவியாகி உறிஞ்சிய சக்திகளை வெளியேற்றும் என்று நிறுவினார். அவரது அறுபதாவது பிறந்தநாளின் போது, காலப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அண்டத்தின் ஈர்ப்பு விசைக்கும் கருங்குழியின் பரப்பளவுக்கும் சிதறத்திற்கும் உள்ள உறவைச் சொல்லும் அழகான சிறிய வாய்ப்பாட்டையும் கண்டுபிடித்துச் சொல்லி, இதை என் கல்லறையின் மீது எழுதி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பின்னாளில், கருங்குழி ஆவியாகும்போது கூட, அதனுள்ளே விழுந்தவைகளின் அடையாளத்தை வைத்திருக்கும் என்று இன்னும் ஒரு படி மேலே சென்று நிறுவினார். இந்த விஷயங்களை எல்லோருக்கும் புரியும் படி நூல்களாக எழுதினார்.

ஸ்டீபனின் மேதமைக்கு இன்னொரு பக்கம், கடவுள் பற்றியது. எல்லா மதங்களுமே மனிதனை மையமாகக் கொண்டவை. மனித இனத்துக்காக கடவுள் இந்த அண்டத்தைப் படைத்துப் பாதுகாக்கிறார் என்பவை. அப்படி இல்லை என்று அறிவியல் ரீதியாக நிறுவுவது என்பது மதங்களின் ஆணிவேரையே அசைக்கும் ஒரு செயல். பூமியைச் சூரியன் சுற்றவில்லை, பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்று சரியாகக் கண்டுபிடித்த கலிலியோவை பைத்தியம் என்று சாகும்வரைக்கும் சிறை வைத்தார்கள் மத குருக்கள். தற்கால மத குருக்களின் மனம் கலங்கும்படி ஸ்டீபன் சில கண்டுபிடிப்புகளை முன்வைத்தார். நமது பேரண்டமே காலமும் பொருளும் ஒன்றாகத் தோன்றிய கணத்திலிருந்து தான் துவங்குகிறது என்பதைக் கண்டுபிடித்தபிறகு, காலத்திற்கு முன்னால் ஒரு படைப்பாளி இருந்து எதையும் படைத்திருக்க வாய்ப்பே இல்லை. தென் துருவத்தில் நின்றுக்கொண்டு தெற்கு திசை எங்கே என்று கேட்பதைப் போலத்தான் அது என்றார். ஒரு பந்தின் பரப்பில் அதன் முனையைத் தேடுவது போல அர்த்தமேயில்லாத கேள்வி அது என்றார்.

“காலத்தின் துவக்கம் எல்லாம் இருக்கட்டும். இத்தனை வடிவான பேரண்டம் யாரும் படைக்காமல் எப்படி உருவாகி இருக்க முடியும்? எப்படி இயங்க முடியும்?” என்ற கேள்விக்கு “The Grand Design” என்னும் 2010இல் வெளிவந்த அவருடைய புத்தகத்தில் நிதானமாக விரிவாக பதில் சொன்னார். “படைத்தவன் இல்லாமல் எந்தப் படைப்புமே இருக்க முடியாது என்றால், படைத்தவனைப் படைத்தது யார்? படைத்தவன் சுயம்புவாக இருக்க முடியும் என்றால், படைப்பு ஏன் சுயம்புவாக இருக்க முடியாது? கடவுள் இல்லை. பேரண்டத்தை வடிவத்துடன் யாரும் படைக்கவில்லை, காக்கவில்லை. வடிவமாக அமைந்ததெல்லாம் தங்கியது, மற்றது அழிந்தது. அணுத்துகள், மண் புழு, மனித இனம், தண்ணீர், சூரியப் பிழம்பு, அண்ட சராசரங்களின் அசைவுகள் என்று அத்தனையையும் அவற்றின் வடிவமும் செயலும் எப்படி உருவாகி எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அறிவியலின் துணை கொண்டு நாம் விளக்கிவிட முடிகிறது. அன்பை, காதலை, அழகை பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகள் மூலம் அறிவியல் அணுகிவிட்டது. மூளை கம்பியூட்டர் போலத்தான். நின்று போன கம்பியூட்டருக்கு சொர்கம் நரகம் மறுபிறப்பு எல்லாம் கிடையாது” என்றார்.

இப்படி வாழ்நாள் முழுக்க ஓயாமல் அறிவியல் விதிகளை விளக்காக ஏந்திக்கொண்டு அணுவுக்குள்ளும் அண்டம் முழுமைக்குள்ளும் மனித மூளைக்குள்ளும் ஒளிந்துக்கொண்டிருக்கும் அழகிய ரகசியங்களைத் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேடிப் போன ஸ்டீபன் தனிமனித அளவிலும் உயிர்ப்புடன் இருந்தார். அவரது கிண்டல்கள் புகழ்பெற்றவை. ஒரு நகைச்சுவை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி தந்த போது, “பல அண்டங்கள் இருக்கின்றன என்கிறீர்களே, அதில் ஒன்றில் நான் உங்களை விட புத்திசாலியாக இருப்பேனா?” என்ற நிருபரின் கேள்விக்கு, “ஆமாம். இன்னொரு அண்டத்தில் உங்களுக்கு நகைச்சுவை உணர்வும் இருக்கும்” என்று கொளுத்திப் போட்டுவிட்டுக் குறும்புடன் சிரித்தார். உலகில் ஆயுதக் குறைப்புக்குக் குரல் கொடுத்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சுற்றுச்சூழல் கொள்கைகளை விமர்சித்தார். மருத்துவ வசதிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்தார். நமது எதிர்காலத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தார். “சுயமாய் சிந்திக்கக் கூடிய செயற்கை அறிவுக் கருவிகள் மனித இனத்தை அழித்துவிடும்” என்று எச்சரித்தார். “நமக்கு பூமி மட்டும் பத்தாது. வேறு கிரகங்களை சீக்கிரம் கண்டுபிடித்துக் குடியேற வேண்டும்” என்றார் ஸ்டீபன். நிஜமாகவே ராக்கட்டில் வான்வெளிக்குச் செல்ல ரிசர்வ் செய்திருந்தார்.

இப்படி ஒரே நேரத்தில் பேரண்டத்தின் அசைவுகளையும், தனிமனித உணர்வுகளையும், அணுத்துகளின் சிதறல்களையும் அவர் அணுகினார். எல்லாவற்றிக்கும் முன்னே நாம் ஒன்றுமே இல்லையா என்ற கேள்விக்கும் பதில் வைத்திருந்தார்: “ஒரு சராசரி நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு சிறிய கோளத்தில் வாழும் கொஞ்சம் மேம்பட்டக் குரங்கு வகை தான் மனித இனம். ஆனால், நம்மால் பேரண்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். அது நம்மை சிறப்பானவர்களாக ஆக்குகிறது.”

கொஞ்சம் மேம்பட்டக் குரங்கு வகை, தன்னைப் பற்றியும் தானிருக்கும் அண்டத்தைப் பற்றியும் அறிய உதவிய ஒரு குறும்புக்கார நண்பரை இழந்துவிட்டது.

-பயணி தரன்

(ஏப்ரல் 2018 தீராநதி இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரை. 2ஆம் ஆண்டு நினைவு நாள் பதிவு. அச்சில் இருந்த தேதி தொடர்பான தவறு திருத்தப்பட்டுள்ளது.)

Top 22 Stephen Hawking Quotes

1“My expectations were reduced to zero when I was 21. Everything since then has been a bonus.” / 2. “Intelligence is the ability to adapt to change.”

3. Although I cannot move and I have to speak through a computer, in my mind I am free.

4. We are just an advanced breed of monkeys on a minor planet of a very average star. But we can understand the Universe. That makes us something very special.

5.Life would be tragic if it weren’t funny.

6. However difficult life may seem, there is always something you can do and succeed at.

7. I think computer viruses should count as life … I think it says something about human nature that the only form of life we have created so far is purely destructive. We’ve created life in our own image

8. My advice to other disabled people would be, concentrate on things your disability doesn’t prevent you doing well, and don’t regret the things it interferes with. Don’t be disabled in spirit, as well as physically.

9. “One of the basic rules of the universe is that nothing is perfect. Perfection simply doesn’t exist…..Without imperfection, neither you nor I would exist”

10. “The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge.”

11.It is no good getting furious if you get stuck. What I do is keep thinking about the problem but work on something else. Sometimes it is years before I see the way forward. In the case of information loss and black holes, it was 29 years.

12. I have noticed that even people who claim everything is predetermined and that we can do nothing to change it, look before they cross the road.

13. Quiet People have the Loudest minds

14. We are all different, but we share the same human spirit. Perhaps it’s human nature that we adapt and survive.

15. So next time someone complains that you have made a mistake, tell him that may be a good thing. Because without imperfection, neither you nor I would exist.

16. I am just a child who has never grown up. I still keep asking these ‘how’ and ‘why’ questions. Occasionally, I find an answer.

17. Try to make sense of what you see and wonder about what makes the universe exist. Be curious, and however difficult life may seem, there is always something you can do, and succeed at. It matters that you don’t just give up.

18. One, remember to look up at the stars and not down at your feet. Two, never give up work. Work gives you meaning and purpose, and life is empty without it. Three, if you are lucky enough to find love, remember it is there and don’t throw it away.

19. Keeping an active mind has been vital to my survival, as has been maintaining a sense of humor.

20. “The thing about smart people is that they seem like crazy people to dumb people.”

21. Some people would claim that things like love, joy and beauty belong to a different category from science and can’t be described in scientific terms, but I think they can now be explained by the theory of evolution.

22. It is a waste of time to be angry about my disability. One has to get on with life and I haven’t done badly. People won’t have time for you if you are always angry or complaining.