துறை #2

வைரஸ் என்றால் விஷம் என்று பொருள்

(Viruses)

20200212

இணையத்தளத்திலே ஒரு வீடியோவோ போட்டோவோ மளமளவென்று எல்லோராலும் பகிரப்பட்டு உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவும் போது அந்த வீடியோ அல்லது போட்டோ ‘வைரல்’ ஆகிவிட்டது என்று சொல்லுகிறோம். கம்ப்யூட்டர் வைரஸ்களுக்கும், அவை இதுபோல் பரவுவதால்தான் அந்தப் பெயரே வந்தது. சீனாவின் வூ-ஹான் நகரத்தில் அடையாளம் காணப்பட்ட புது வகை வைரஸால், நுண்ணுயிரிகளான நிஜமான வைரஸ்கள் இப்பொழுது செய்தித்தாள்களையும் தொலைக்காட்சிகளையும் நிறைக்கின்றன. நான் வைரஸ்களைப் பற்றி சமீபத்தில் படித்த சில நூல்களும் பார்த்த சில வீடியோக்களும் சில சுவாரஸ்யமான தகவல்களைத் தந்தன. அவற்றில் சில, இங்கே.

📍 வைரஸ் என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் விஷம் என்று பொருள்.

📍 நமக்கெல்லாம் வைரஸ்களால் தான் சளி பிடிக்கிறது. ஆனால் மனிதர்களுக்குச் சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. நம் வாழ்நாளில் நம் ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ ஐம்பது வெவ்வேறு வகையான வைரஸ்களால் சளி பிடிக்கிறது.

📍 ஒரே ஒரு லிட்டர் கடல் தண்ணீரில் ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன (உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடி தான்)

📍 வைரஸ்கள் உயிர் வாழ்வதில்லை. ஆனால், அவை அழிந்துவிடாமல் செழிக்கின்றன. வைரஸ்களால் நகர முடியாது. ஆனால், அவை எங்கும் வேகமாகப் பரவி விடுகின்றன. பீட்டர் மேடவார் என்னும் அறிவியல் அறிஞர், வைரஸ்களை, “புரதச்சத்து போர்வை போர்த்திக் கொண்டு வரும் கெட்ட செய்தி” என்று விவரித்தார்.

📍 கொரோனா வைரஸ் என்பது ஒரு வைரஸ் குடும்பத்தின் பெயர். அந்தக் குடும்பத்தில் உள்ள வைரஸ்கள் அத்தனைக்கும் மேலே இருக்கும் தோலில் கிரீடம் வைத்தது போல் புள்ளி புள்ளியாய் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. சில கொரோனா வைரஸ்களால் நமக்குச் சளி பிடிக்கிறது. சில கொரோனா வைரஸ்களால் நமக்கு SARS நோய் வருகிறது. சமீபத்தில் சீனாவின் வூ-ஹான் நகரத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் பெயர், புதிய அல்லது நாவல் கொரோனா வைரஸ் 2019 (2019-nCoV).

📍 மைக்ரோஸ்கோப் என்னும் உருபெருக்கிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், உயிரற்ற ஜடப்பொருள்களிலிருந்து நுண்ணுயிரிகள் தானே உருவாகி நோயை உண்டாக்குகின்றன என்று நம்பினார்கள். இதற்கு ‘தன்னால் உருவாகும் கோட்பாடு’ என்று பெயர்.

📍 வைரஸ்கள் எந்த உயிரையும் தாக்கக் கூடியவை அந்த உயிரி மனிதர்களாக இருக்கலாம் விலங்குகளாக இருக்கலாம் தாவரங்கள் ஆக இருக்கலாம் ஏன் பாக்டீரியாவாகக் கூட இருக்கலாம்.

📍 டெங்குகாய்ச்சலை உருவாக்கும் வைரஸ், ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்குப் பரவ, பழைய டிரக்குகளின் டயர்கள் காரணமாக இருந்தன. இந்த பழைய டயர்களை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு ஏற்றுமதி செய்தபோது, அவற்றின் உள்ளே தேங்கியிருந்த தண்ணீரில் தங்கியிருந்த கொசுக்களால் தான் இந்த டெங்குகாய்ச்சலைத் தரும் வைரஸ்களும் புதுப்புது கண்டங்களுக்குத் தாவித் தழைத்தன.

📍 ரெட்ரோவைரஸ் என்று சொல்லப்படுகின்ற வகையைச் சேர்ந்த வைரஸ்கள் ஒரு உயிரியைத் தாக்கும்போது அதனுடைய மூல கரு அமிலமான டி.என்.ஏ என்பதையே மாற்றி விடக் கூடியவை. மனிதர்களின் டி.என்.ஏ கரு அமிலத்தில் 5% முதல் 8% வரை இதுபோல பழைய வைரஸ்களால் கலப்படம் செய்யப்பட்ட விஷயங்கள்தான் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

📍 பெரும்பாலான வைரஸ்கள் ஓரிரு நாட்களுக்குள் தங்களைப் பிரதி எடுத்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஒவ்வொரு முறை இனப்பெருக்கம் நடக்கும் பொழுதும் ஆயிரக்கணக்கான புது வைரஸ்கள் உருவாகின்றன. அப்படி ஒவ்வொரு புது தலைமுறையிலும் முன்னைப்போலவே இல்லாமல் பலப்பல மாற்றங்களை செய்து பிரதி எடுக்கின்றன. இந்தப் புது மாற்றம் கொண்ட வைரஸ்களில் சில, நிலைக்க முடியாமல் அழிந்து போகின்றன. ஆனால் ஒரு சில புது வைரஸ்கள், முந்தைய தலைமுறையை விட இன்னும் திடமாக உருவாகிவிடுகின்றன. பழைய தலைமுறைக்கு மனிதர்கள் கண்டுபிடித்த மருந்துகளுக்கு 'டிமிக்கி' கொடுக்கக் கற்றுக்கொள்கின்றன. இன்னொரு போர் துவங்குகிறது.

- பயணி தரன் (20200213)

#அறிவோம்_பகிர்வோம்

#கற்றல்_இனிது

#ஒரு_கப்பல்_நூறு_துறைமுகங்கள்

புதுத்தடம் பதிக்கும் பயணியின் நூல்கள்