பயணி யார்?

யார் இவர்? எதற்கு இந்தப் புனைபெயர்? இரண்டுமே நியாயமான கேள்விகள் என்பதால், ஒரு சில விவரங்கள் இதோ:

பயணி என்னும் புனைபெயர் கொண்ட ஸ்ரீதரன் மதுசூதனன் (சுருக்கமாக, ‘தரன்’) சென்னையைச் சேர்ந்தவர்.

இந்திய வெளியுறவுத்துறை (Indian Foreign Service - IFS) அதிகாரி. எனவே, தொழில்முறை நாடோடி. ஆனால், ‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைய இவ்வுல’கின் ‘பயணி’ எனும் புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்தபோது தரன் IFSஇல் இல்லை.

பெய்சிங்கில் சீன மொழி கற்றவர். ஒன்பது ஆண்டுகள் பெய்சிங்கிலும் ஹாங்காங்கிலும் பணியாற்றியவர். பிறகு ஃபிஜித் தீவுகளிலும், வாஷிங்டனிலும் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றிவிட்டு, தற்போது தாய்வானில் பணியாற்றுகிறார்.

இவரது நூல்கள்:

1. சீன மொழி - ஒரு அறிமுகம்.

2. வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: கவித்தொகை - சீனாவின் சங்க இலக்கியம்.

3. நோபல் பரிசு பெற்ற மோயான் எழுதிய ‘மாற்றம்’ நாவலின் மொழிபெயர்ப்பு.

4. எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்.

2016ஆம் ஆண்டின் ஸ்பாரோ இலக்கிய விருது பெற்றவர். ("பண்டைச் சீனத்தின் கவித்தொகையையும் புதிய சீனத்தின் நோபல் பரிசுப் படைப்பையும் நவீனத் தமிழுக்கு கொண்டு வந்த மகத்தான பங்களிப்புக்காக.” இன்னும்...)

ஏன் மற்றவர்களைப் போல, ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்றில்லாமல் இது போன்ற வேலைகளில் பயணி தரன் ஈடுபட்டார் என்று சிலருக்குத் தோன்றக்கூடும் என்பதால், இன்னும் கொஞ்சம் தகவல்கள்:

கல்லூரி நாட்களில் விகடனில் மாணவப் பத்திரிகையாளராக (முதல் பேட்ச்!) இருந்தவர். பின்பு ‘பிரம்மா செய்திக் கட்டுரைகள்’ எனும் அமைப்பைத் துவக்கினார். ஐக்யா நாடகக் குழுவின் வழியே தமிழின் நவீன நாடகங்களில் பங்கேற்றார். கணையாழி, விகடன், கல்கி போன்ற இதழ்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். கல்வியாராய்ச்சி இதழ்களில் தமிழ் அகராதியியல் மற்றும் இலக்கியத்துக்கும் இயற்கைக்குமான உறவு பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பட்டப்படிப்பில் அறிவியலையும் நான்கு மேல் பட்டப் படிப்புகளாக இதழியல் (PG Dip in Journalism), பொது நிர்வாகம் (Master of Public Administration), மனிதவள மேலாண்மை (Master of Human Resource Management), வணிக மேலாண்மை (Master of Business Administration - MBA, Colorado, USA) ஆகியவற்றையும் பயின்றவர்.

மனைவி வைதேஹி, கல்வியாளர். மகன் அபி, இசைக்கலைஞர். மகள் கீர்த்தனா, மாணவி.

புதுத்தடம் பதிக்கும் பயணியின் நூல்கள்