உலகில் முதன்முறையாக நெடிய மொழி வரலாற்றில் சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்தவன் நான். ஆனால், மொழி கற்றலுக்கும் எனக்குமான உறவு ஆரம்பத்தில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அது ஆங்கிலம் கற்பதிலிருந்து துவங்கியது.
📚 சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் தமிழ் வசமானது. ஆனாலும் பள்ளியில் தமிழில் சராசரி மதிப்பெண் தான். வாழ்க்கை சடாரென்று திசை மாறி +1இல் இங்கிலிஷ் மீடியம் சேர்ந்ததும் கை கால் உதறியது. கல்லூரிப்படிப்பும் போராட்டமாகத் தொடர்ந்தது. தமிழ் மேடைகள் மனஉறுதி தந்தன. ஆனால், மொழிப் பாடங்களிலும் சேர்த்து, ஒரு சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாகவே தொடர்ந்தேன்.
😯 மற்ற பாடங்களோ மொழியோ, விஷயம் சப்ஜெக்ட்டில் இல்லை, கற்கும் முறையில் இருக்கிறது என்று புரிந்தபோது, “ச்சீ! இதுக்கா பயந்தோம்!?” என்று விட்டுப்போனது.
👍 அதன் பிறகு, மொழியிலும் ஏறு முகம் தான்.
🔤 இந்திய அயலுறவுப் பணியில் சேரும் அலுவலர்கள் ஒரு கட்டாய அயல் மொழியைக் கற்க வேண்டும். எனக்கு வாய்ப்பிருந்த நான்கைந்து மொழிகளில் சீன மொழியைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் இரண்டு: 1. எனக்குச் சீனமொழி துளியும் தெரியாது. 2. அது உலகின் மிகக் கடினமான மொழிகளில் ஒன்று என்று சொன்னார்கள்.
📕✍️ பிறகு நடந்தவை, வரலாறு. எனது ஐந்து நூல்களில் இரண்டு சீனமொழியை அறிமுகப்படுத்துவன. மீதி இரண்டும் சீனமொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்புகள். அதில் முதலில் வந்த ‘கவித்தொகை: சீனாவின் சங்க இலக்கியம்’ என்கிற நூல் தான் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பில் வந்த முதல் நூல் என்று தெரியவந்தபோது, எனது பள்ளிக் காலத்து மொழிப்பாட மதிப்பெண்களையும் நினைத்துக்கொண்டேன்.
🧠 மொழியைக் கற்றல் என்பதும் ஒரு திறமை தான். சரியான வழிகாட்டல் இருந்தால், யாரும் புது மொழிகளைக் கற்றுப் பல மனங்களையும் புத்தம்புது உலகங்களையும் திறக்கலாம். இந்தக் காலத்தில் இது இன்னும் எளிதாகியிருக்கிறது.
🚨 ஆனால், இப்போதைய எல்லா விஷயங்களையும் போல, இதிலும் உங்கள் வழிகாட்டிகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
👉 இந்தப் பின்னணியில், மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளைத் தொடும் நூல்கள் எனக்குப் பிரியமானவை. நடைமுறையில் பயன்படும் விஷயங்களை எளிதாகச் சொல்லும் நூல்கள் அரிது. அவற்றில் நிச்சயமாக இடம்பெற வேண்டிய நூல் இது: Fluent Forever: How to Learn Any Language Fast and Never Forget It by Gabriel Wyner (“எப்போதும் சரளமாக: எந்த மொழியையும் விரைவாகக் கற்றுக்கொள்வதும் அதை மறக்காமல் இருப்பதும் எப்படி?” - கேப்ரியல் வைனர்)
🌐 Fluent Forever என்கிற மொழி கற்கும் இணைய தளத்தை நிறுவி, அதன் மூலம் தனது மொழி கற்கும் வழிமுறைகளைச் சொல்லித்தரும் கேப்ரியல் வைனர், அமெரிக்காவில் மேற்கத்திய செவ்விசைப் பாடகர். ஐரோப்பா சென்று இசை கற்றுக்கொண்டபோது மொழி தடையாக இருக்கவே, மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு வெற்றி கண்டவர். இப்போது பன்மொழி வல்லுனர் (polyglot).
📖 அவருடைய நூலை அறிமுகம் செய்து, அதிலுள்ள முக்கிய விஷயங்களைப் பேசியிருக்கிறேன். 👇
🔴- குழந்தைகள் மொழி கற்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?
🔴 - மொழி கற்றலின் ஐந்து அடிப்படை விதிகள் என்ன?
🔴 - ஏன் பாரம்பரிய மொழி கற்கும் உத்திகள் பெரிய பலன்கள் அளிப்பதில்லை?
🔴 - இன்றைய சூழலில் மொழி கற்க உள்ள புதுக் கருவிகள் எவை? (பல இலவசமாகக் கிடைக்கின்றன)
🔴 - மொழி கற்பதை விளையாட்டாக அணுகுவது எப்படி?
👋 புது மொழிக்கு ஹலோ சொல்லுங்கள்! (மறதிக்கு டாட்டா சொல்லுங்கள்) | Fluent Forever Book Review.