சிந்தனை, செய்தி, சில்லறை...20200712

டேஸ்ட் பொட்டலமாக ஒரு கதைசொல்லியின் கதை

(தில்லிகை - பவா செல்லத்துரை)

20200712

எனக்கு இன்று, சிறுவயதில் எனது மூக்கைத் துளைத்த தாம்பரம் இனிப்புக் கடைகளின் வாசம் நினைவுக்கு வந்துவிட்டது. காரணம், ஒரு இலக்கிய உரை. முதலில் அந்த டேஸ்ட் பொட்டலம் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

அப்போதெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ் போன்ற இனிப்புக் கடைகள் தாம்பரத்தில் பிரபலம். மாதம் முதலில் சம்பளம் வந்ததும், பெரியவர்கள் வாங்கிவரும் இனிப்பு டப்பாக்களுக்காக நானும் நாக்கும் காத்திருந்த காலம். அவர்கள் வாங்கி வரும் இனிப்பை மீறி, அந்தப் பையிலே இருக்கும் ஒரு சிறிய பொட்டலம் என் மனதைக் கவர்ந்ததாக இருந்தது. மந்தாரை இலையில் சன்னமான வெள்ளை நூலால் சுற்றப்பட்ட அந்தப் பொட்டலத்தில், அந்த இனிப்பு கடையின் இனிப்புகள் கொஞ்சம் கொஞ்சம் சேர்க்கப்பட்டு ருசி பார்ப்பதற்காக ஒன்றாக கொடுக்கப்பட்டிருக்கும். அதுதான் டேஸ்ட் பொட்டலம். ஜாங்கிரியும், மைசூர் பாகும், பால்கோவாவும், கோதுமை அல்வாவும் ஒன்றைஒன்று தொட்டு உரசி மட்டும் நிற்காமல், நெருங்கிக் குழைந்து ஒரு இனிப்புக் கோலாகலமாக அதிலே கிடக்கும். வீட்டின் கடைக்குட்டி என்பதால் அந்தப் பொட்டலத்தின் சரி பாதியாவது எனக்கு வந்து சேர்ந்துவிடும். நான் எங்கள் வீட்டில் கூரையைத் தாங்கியபடி அறையின் நடுவே இருக்கும் ஒற்றை மூங்கில் தூணில் சாய்ந்தபடி காலை நீட்டிக் கொண்டு அந்த மந்தார இலையை விரித்து இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் ஒவ்வொரு இனிப்பாக விண்டு வாயில் போட்டுக்கொள்வேன். அப்போது அந்தக் கடையில் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இனிப்புகளின் சாதகமும் என் மனமெங்கும் கூத்தாடும்.

ஜூலை 12ஆம் தேதி ஞாயிறு மாலை தில்லிகை - தில்லி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த “கதை சொல்லியின் கதை” என்னும் பவா செல்லத்துரையின் சூம் உரையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. தன் வாசிப்புகளை கதைசொல்லும் வசியமாக மாற்றியவரின் கதை எப்படி இருக்கும் என்னும் ஆர்வம் எனக்கும் மிகுந்திருந்தது.

14 வருடங்கள் வேண்டிப் பெற்ற மகனுக்கு, வீட்டுக்கு வெளியே, தெருவில், கிழிந்த பாயில் படுத்தபடி கதைகள் சொல்லி மந்திரக்கம்பளத்தில் பறக்கவைத்த அம்மாவைச் சொன்னார். “ஒன்னரை மணி நேரம் பேசினே, அதுக்குள்ளே பன்னிரண்டு கதை சொல்லிட்டேயே. மத்தவங்களுக்கும் சொல்லேன்” என்று இவரின் பைக் ஹாண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு சொன்ன நண்பரைச் சொன்னார். பின்பு யூ-ட்யூப் அறிமுகமானதைச் சொன்னார். இன்று உலகெங்கிலும் கதையின் வழியே நண்பர்களையும் உற்றார் உறவினரையும் பெற்றுள்ள நிலைமையைச் சொன்னார். (நிகழ்விலும் பலபேர் இவரை அப்பா, மாமா என்பது போல அழைத்துக்கொண்டார்கள். இவரும் தலையாட்டியபடி உரையாடலைத் தொடர்ந்தார்.)

கவிதைகளின் ஆழத்தைச் சொன்னார். (சைகையால் கழுத்தை அறுத்து ரத்தமாக்கி சிவப்புப் பாவாடை கேட்ட சின்னப் பெண் பற்றிய கவிதையைச் சொன்னார். ஏதோ ஒரு ரயிலடியில் பார்த்த அறிமுகமில்லாத பெண்ணுக்காக சுந்தரராமசாமி எழுதிய கவிதையைச் சொன்னார்: நான் உன் கஷ்டங்களின் மறுபக்கம் | கண்ணீரின் நீர்மை). கூடவே, முதல் காதல் கவிதைகளைப் பற்றியும் சொன்னார் (“இந்தக் கவிதைகளாலேயே தோற்றுப்போன காதல்களைப் பற்றி எனக்குத் தெரியும்!”).

கதை சொல்லியாக, அவரது இடத்தைத் தெளிவுபடுத்தினார். “நான் என் குரலின் வழியே, எனது முன்னத்தி ஏர்களைைக் கடத்துகிறேன். எனக்கு விழும் மாலைகள் அவர்களுக்கானவை என்பதில் எனக்குக் கொஞ்சமும் குழப்பமில்லை” என்றார். தொடும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அவற்றிற்குத் தொடர்புடைய கதைகளின் ஊர்வலத்தை அவருக்குள் தொடங்கிவிடுகின்றன. அவற்றையும் தொட்டுப் பேசினார்.

நீங்கள் இன்னும் அதிகமாக கதை சொல்ல வேண்டும் என்று ஒரு அன்பர் கேட்டுக் கொண்டபோது, “நாம் இப்படிப் பலரை கொடூரமாக அடித்து இருக்கிறோம். திண்டுக்கல் லியோனி நினைவிருக்கிறதா? யாரிடமாவது ஏதாவது இருந்தால் கடைசி சொட்டு ரத்தம் வரை கரந்து விடுகின்றோம். எனக்கு வாசிப்பதற்கும் இன்னும் நேரம் தேவைப்படுகிறது” என்று சிரித்தார்.

இன்னொரு முறை பிறந்தால், இலக்கியவாதியாகவும் கதைசொல்லியாகவும் தான் மீண்டும் வாழ்வேன் என்பதில் சந்தேகமேயில்லை என்றார்.

நிகழ்ச்சி முடிந்து கலந்துரையாடலும் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் சில விநாடிகளுக்கு முன், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ் பாரதன் என்னை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “நான் அவசரமாக ஒரு வேலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது, நீங்கள் தயவு செய்து நன்றியுரையை சொல்லிவிடுங்கள்” என்று அவசரமாக சொல்லிவிட்டு அவசரமாக தொலைபேசியை துண்டித்து விட்டார். வேறுவழியின்றி, நான் நன்றி உரை சொல்ல ஒப்புக்கொண்டேன்.

மற்றவர்களின் கதையை இன்னும் அதிகமாக அவர் சொல்லவேண்டும் என்பதற்கு பவா செல்லத்துரை சொன்ன மேற்கண்ட கருத்தை நான் ஒப்புக்கொண்டாலும், பவா செல்லத்துரை என்னும் கதை சொல்லியின் கதையைக் கேட்கும் ஆர்வம் (என்னளவில்) மிகக் கொஞ்சமே நிறைவடைந்திருந்தது. எனவே, என்னுடைய நன்றி உரையிலே நான் இதைச் சொன்னேன்: “ஒரு இனிப்புக் கடைக்குச் செல்லும்போது அங்கு ருசி பார்க்கக் கிடைக்கும் இனிப்பின் ஒரு துண்டாகத்தான் எனக்கு இன்று உங்களது உரை இருந்தது. கதைசொல்லியின் கதையை இன்னும் விரிவாக கேட்க நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம்.” சூம் மீட்டிங் என்பதால் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து இதைச் சொல்லமுடிந்தது ஒரு கூடுதல் மகிழ்ச்சி.

- பயணி தரன்

பேஸ்புக்கில் தில்லிகை நிகழ்ச்சிகள் பற்றி அறிய: https://www.facebook.com/dhilligai