சிந்தனை, செய்தி, சில்லறை...20201123

போன்சாய் குறுங்கதைகள்

(நூல் அனுபவம் - சுரேஷ்குமார இந்திரஜித்)

20201123

‘குறுங்கதை என்பது ஒரு வீரியமுள்ள விதை. ஒரு தோட்டாவைப் போல, ஒரு சவுக்கைப் போல, ஒரு மின்னலைப் போல, வேகமும் வெடித்தன்மையும் கொண்டு அந்தக் கதை செயல்பட வேண்டும்’ என்பது பொதுவான எதிர்ப்பார்ப்பு. ஆனால், ஒரு போன்சாய் மரத்தைப் போல பெருங்கதைகளுக்கான நிதானமும், கால நீட்டமும் முழுமையான உருவமும் கொண்ட குறுங்கதைகளையும் படைக்க முடியும் என்று செய்துகாட்டியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித். இவரது 64 குறுங்கதைகளின் தொகுப்பு ‘பின்னணிப் பாடகர்’ எனும் நூலாக வெளிவந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக ‘தாம்பத்யம்’ என்னும் குறுங்கதையைச் சொல்லலாம். மொத்தம் 17 வரி. கோவிட் கால வறுமையில், சித்தாள்களாக வேலை செய்யும் தம்பதிகளின் வாழ்வின் ஒரு துண்டு - அன்பும் பரிவும் புரிதலும் இயல்பாய் மிளிர, எந்தவகை மிகையுமில்லாமல் தண்ணென்று சொல்லப்பட்டுவிட்டது.

‘பூர்வீக வீடு’ கதை இருபதே வரிகளில் பளிச்சென்று ஒரு வாரப் பத்திரிகையில் வரும் தரத்துக் கதையைத் தரமுடியும் என்று நிரூபிக்கிறது. கடைசி வரி படித்ததும் முதல் வரியிலிருந்து படிக்கவைக்கும் தன்மையை குறுங்கதையில் சாதித்திருக்கிறார்.

‘இளவரசி கண்ட வாள் போர்’ குறுங்கதையில் வரலாற்றுத் தளமும் பேரசைவுகளும், கூடவே தனிமனித ரத்தமும் மனமும் சித்தித்திருக்கிறது. ‘கறிக்குழம்பு’ கதையும் செறிவாக வந்திருக்கிறது. ‘அழுகின்ற பெண்கள்’ கதை ஒரு ஐரோப்பிய குறும்படத்தைப் பார்ப்பது மாதிரி இருந்தது. ‘அவர்கள் சினிமாவுக்குச் செல்கிறார்கள்’ கதையும் திடமாக வந்திருக்கிறது - ஆங், இந்தக் கதையிலும், கடைசி வரியை நறுக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள குறுங்கதைகளில் எனக்கு இடறிய விஷயமாக பல இடங்களில் தலைகாட்டும் ஆசிரியரின் ‘விளக்கும் தொனி’யைச் சொல்லுவேன். இது சாதாரண அளவு கதைக்கே தேவையில்லை. குறுங்கதையில் இருக்கவே கூடாது. ஒரு செயல் நடக்கிறது நடக்கவில்லை என்பதை வைத்து வாசகர்களால் இந்த விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். இதை ஆசிரியர் சொல்லவேண்டியதில்லை. சில எடுத்துக்காட்டுகள்:

தீடீரென்று மனதைப் பயம் கவ்விக்கொண்டது. (மரணம்)

இந்திய உளவியலின்படி வசந்தா தோன்றத்தானே செய்வாள். (வசந்தா)

எனக்கு அவளிடம் சில சந்தேகங்கள் ஏற்பட்டன. ஆனால், நான் அந்த சந்தேகங்களை அவளிடம் கேட்கவில்லை. (என் சந்தேகங்கள்)

பேச்சாளரின் முதல் மனைவி என் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் ஏன் சென்றாள் என்று எனக்குத் தெரியவில்லை. (பார்வை)

எனக்கு இந்த நூலில் பிடித்த விஷயமாக, எப்படி சிறு வடிவத்துக்குள் ஒரு மரபு வழிவந்த சிறுகதை மூல வடிவத்தை ஆசிரியர் கொண்டுவந்திருக்கிறார் என்பதைச் சொல்லலாம்.

ஒரு சில கதைகளில் கதையம்சம் கூடி வந்திருந்தாலும் ஒரு குறுங்கதையின் மந்திரமோ, அல்லது இந்திரஜித் செய்யும் போன்சாய் வெற்றியோ நிகழவில்லை. ஆயினும் அவை முக்கியமான கதைகள். எடுத்துக்காட்டாக, ‘மஞ்சள் நிறச் சாமியார்,’ ‘வசியக் குரல்,’ ‘ஜன்னல்.’

சில கதைகளில் கதைவடிவம் சமைந்து வரவில்லையானாலும் வாழ்வின் செறிவை, முடிச்சுகளைக் கொண்டுவந்துவிடுகிறார். எல்லாமே காத்திரமானவை. எடுத்துக்காட்டாக, ‘கடல் நீலம்,’ ‘நினைவுக்கிடங்கு,’ ‘சோற்றுக்காக,’ ‘படைவீரர்கள்.’ நூலின் தலைப்பாக அமைந்திருக்கும் ‘பின்னணிப் பாடகர்’ கதையும் இந்த வகையில் தான் நிற்கிறது.

நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பிற படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவற்றின் செறிவும், அந்த மந்திரத்தன்மையும் இந்த நூலில் உள்ள சில குறுங்கதைகளிலும் காணக்கிடைத்தது. எடுத்துக்காட்டாக, ‘வயலின் இசை,’ ‘பயணியின் குறிப்புகள்,’ ‘அறைக்குள் வந்த இளம்பெண்.’

என்னளவில், இங்குமில்லாமல் அங்குமில்லாமல் தேங்கிவிடும் கதைகளாக சில இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘நெடுஞ்சாலை,’ ‘ரோஜா மலர்கள்,’ ‘வெற்றிகரமான ஹீரோ.’

என் கவனத்தை ஈர்த்த மற்ற சில குறுங்கதைகள்

‘ஜெரால்டு நிக்கல்சன்,’ ‘மடம்’ - வீச்சுக்கும் திடத்துக்கும்.

‘சுபம்’ - நகைச்சுவையின் வெற்றிக்கு.

‘படி ஏறி வரும் சத்தம்’ - நன்கு எடிட் செய்யப்பட்ட குறும்படம் போன்ற வடிவத்துக்கு.

கடைசியாக இரண்டு விஷயங்கள்:

கதைகளை வாசிப்பது எப்படி? கவிதைகளை வாசிப்பது எப்படி? எனும் ரீதியில் குறுங்கதைகளை வாசிப்பது எப்படி எனும் அணுகுமுறையும் அவசியப்படுகிறது.

குறுங்கதைகள் வெறும் புது முயற்சிகள் அல்ல; அளவு கணக்குக்கு அப்பாற்பட்டு அடிப்படையில் அவை கதைகள் என்பதை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.

பின்னணிப் பாடகர் (64 குறுங்கதைகள்)

ஆசிரியர்: சுரேஷ்குமார இந்திரஜித்

விலை ₹140

எழுத்து பிரசுரம்

அச்சு வடிவில் வாங்க: https://www.panuval.com/pinnani-padagar-10016949

கிண்டில் வடிவில் வாங்க: https://www.amazon.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-Sureshkumara-Indrajith-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/dp/9390053064


- பயணி தரன்