சிந்தனை, செய்தி, சில்லறை...20201212

அக்கினிக் குஞ்சுகள்

இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள்

(இந்து தமிழ் திசை, 12 டிசம்பர் 2020)

20201212

எழுதித்தள்ளிய காவியக் காலங்களிலிருந்து எழுத்தை எண்ணும் கீச்சுக் காலத்துக்கு வந்துவிட்டோம். இந்தக் காலத்திலும், கதை சிறுத்தாலும் காரம் போகாது என்று நிறுவுகின்றன குறுங்கதைகள். இந்த இலக்கிய வடிவத்திலும் புது உயரங்களை எட்ட முடியும் என்பதைத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்த இரு எழுத்தாளர்களின் சமீபத்திய படைப்புகள் நமக்குக் காட்டுகின்றன. பெருந்தேவியின் 51 குறுங்கதைகள் அடங்கிய ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ என்னும் நூலும், சுரேஷ்குமார இந்திரஜித்தின் 64 குறுங்கதைகள் அடங்கிய ‘பின்னணிப் பாடகர்’ என்னும் நூலும் கவனத்துக்குரியவை.

இந்த இரண்டு நூல்களுமே இன்றைய கரோனா வைரஸ் அவலத்தையும் தொட்டுப் பேசும் அளவுக்குச் சமீபத்தியவை. இரண்டும் தமிழின் கதைசொல்லலின் வேரையும் விடாமல் புதுப்புதுப் பூக்களை அறிமுகப்படுத்தியிருப்பவை. அதிலும் மேலாக, பல எதிர்காலச் சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியிருப்பவை.

பெருந்தேவியின் ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ என்கிற நூலில் சவுக்கு போன்ற, மந்திரஜாலம் போன்ற, தோட்டாவைப் போன்ற கதைகளைப் பார்க்க முடிகிறது. இதிலுள்ள பல குறுங்கதைகள் சரசரவென சில வரிகளில் வளர்ந்து, முடிச்சை நோக்கி நகர்ந்து, முடிவில் சலீரென ஒரு திருப்பத்தை, தள மாற்றத்தைத் தந்து ‘எப்டி?’ என்று கேட்டுவிட்டு நகர்கின்றன.

எடுத்துக்காட்டாய், ‘ஆப்பிள்’ கதையானது மழை ஓய்ந்த வெளிறிய வானம், விண்கலம், வேற்றுக்கிரகவாசிகள், கிரகத்தின் கனி, ஆவலோடு தின்றாள் என்று பின்னப்பட்டு, கடைசி வரியில் ‘இருவரும் ஊர்ந்து ஏறினர்’ என்று தவ்வுகிறது. ‘முடிக்கற்றை’ கதையில் எப்போதும் காதலியின் ஒரு கண்ணை மறைக்கும்படி அவள் முகத்தில் விழும் முடிக்கற்றையை அவன் வலுக்கட்டாயமாகச் சுண்டி அகற்றுகிறான். வெள்ளை விழியில் ஓட்டை. ஓட்டையேதான். அதன் பின், இருவரும் அவரவர் அலுவலகத்துக்கு வரவில்லை என்று பாய்ச்சலுடன் முடிகிறது கதை. அதேபோல, ‘பல்லி’ கதையானது நினைக்கும்போது தன்னைப் பல்லியாக மாற்றிக்கொள்ளும் பெண்ணை அறிமுகப்படுத்தி, பல்லியாய் அவள் தேர்வுத்தாள்களையும், அவளது அக்கா-மாமா உறவுகொள்வதையும் காணக்கிடைப்பதைச் சொல்லி, ஒரு பிரச்சினையையும் குறிப்பிடுகிறது. புரட்டாசி சனிக்கிழமையில் பூச்சியைத் தின்னத் தோன்றும் குழப்பத்தில் பல்லி அவளாகிவிடுகிறது. கதை இப்படி முடிகிறது: ஒரு சனிக்கிழமையன்று “என்னடி வாயில சிலந்தி உட்கார்ந்திருக்கு?” என்று பதறிப்போய் அவள் அம்மா தட்டிவிட்டபோது பாதிச் சிலந்தி கீழே விழுந்தது.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘பின்னணிப் பாடகர்’ தொகுப்பில், ஒரு போன்சாய் மரத்தைப் போல பெருங்கதைகளுக்கான நிதானமும் கால நீட்டமும் முழுமையான உருவமும் கொண்ட குறுங்கதைகளையும் படைக்க முடியும் என்று செய்துகாட்டியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.

எடுத்துக்காட்டாக, ‘தாம்பத்தியம்’ கதையைச் சொல்லலாம். மொத்தம் 17 வரிகள். கரோனா கால வறுமையில், சித்தாள்களாக வேலைசெய்யும் தம்பதியினுடைய வாழ்வின் ஒரு துண்டு - அன்பும் பரிவும் புரிதலும் இயல்பாய் மிளிர, எந்தவகை மிகையுமில்லாமல் தண்ணென்று சொல்லப்பட்டுவிட்டது. “நம்ம பையன் எங்கே?” என்று கேட்பவனிடம், “அவனை எங்க அம்மா வீட்டிலேயே இருக்கச் சொல்லிட்டேன்” என்று பதிலளிக்கும் அவள் காட்டும் காதலானது குறுங்கதைக்காகக் குறைக்கப்படவில்லை. ‘பூர்வீக வீடு’ கதை இருபதே வரிகளில் பளிச்சென்று, ஒரு வாரப் பத்திரிகையில் வரும் தரத்துக் கதையைத் தர முடியும் என்று நிரூபிக்கிறது. மலேசியாவிலிருந்து தாத்தாவின் பெட்டியில் பார்த்த கவிதையைப் பற்றியபடி மதுரைக்கு வரும் பேரனின் அனுபவம் இயல்பான திருப்பத்துடன் செதுக்கப்பட்டிருக்கிறது. கடைசி வரி படித்ததும் முதல் வரியிலிருந்து படிக்க வைக்கும் தன்மையைக் குறுங்கதையில் சாதித்திருக்கிறார். ‘இளவரசி கண்ட வாள் போர்’ கதையில் வரலாற்றுத் தளமும் பேரசைவுகளும், கூடவே தனிமனித ரத்தமும் மனமும் சித்தித்திருக்கிறது. இவை சாதாரண விஷயமில்லை.

இரண்டு நூல்களிலும் உள்ள எல்லாக் கதைகளுமே வெற்றிகரமான படைப்புகள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனாலும், தனித்துவமும் மெருகும் கொண்ட பல கதைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு பக்கக் கதைகள் என்னும் உருவத்திலும், தரத்திலும் குறைந்த, இலக்கியத் தரம் இல்லாத படைப்புகளே குறுங்கதைகளாக வலம்வந்த சூழல் மாறி, குறுங்கதை என்னும் வடிவத்தின் சவால்களை இலக்கிய அமைதியுடன் செழுமையான கதைகளாக ஆக்க முடியும் என்பதை இந்த இரண்டு நூல்களும் நிறுவுகின்றன. குறுங்கதைகள் என்னும் வடிவத்தை ஒரு பகடிக்காகவோ, சிறுவர் இலக்கியத்துக்கானதாகவோ, பெரிய கதையாய் வர முடியாத குறைப் பிரசவங்களாகவோ நிறுத்தும் நிலையை மாற்றி, இவற்றுக்கான இலக்கிய அக்கறையையும் முனைப்பையும் அழகையும் தந்து இந்த வடிவத்துக்குச் செறிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இரண்டு நூல்களுமே அச்சிலும் கிண்டில் வடிவிலும் கிடைப்பதும் கவனத்துக்குரியது.

- பயணி தரன்

சுட்டி: https://www.hindutamil.in/news/literature/610961-book-review-1.html

**********************

ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்

பெருந்தேவி

சஹானா பதிப்பகம்

பெசன்ட் நகர்,

சென்னை-90.

தொடர்புக்கு: 9176394272

விலை: ரூ.140

**********************

பின்னணிப் பாடகர்

சுரேஷ்குமார இந்திரஜித்

எழுத்துப் பிரசுரம்

அண்ணா நகர்,

சென்னை-40.

தொடர்புக்கு: 98400 65000

விலை: ரூ.140

****************************