சிந்தனை, செய்தி, சில்லறை...20201218

மறக்கமுடியாத மாலையில் மறந்த பை

20201218

போன வருடம் இதே நாளில் (டிசம்பர் 18ஆம் தேதி), நான் எனது பாஸ்போர்ட், பணம், விமான சீட்டு அனைத்தும் இருந்த கருப்பு நிற தோள் பையைத் தொலைத்துவிட்டு நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தேன். மறுநாள் காலை நான் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து டெல்லிக்குப் பயணம் செய்யவேண்டும். அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கியமான சந்திப்பு. பிறகு தில்லியிருந்து தாய்வானுக்குப் போக வேண்டும். இப்போது, சென்னை விமான நிலையத்தின் உள்ளே கூடப் போகமுடியாது என்னும் நிலை.

கீதா இளங்கோவன் வீட்டில் நண்பர்களுடன் இரவு விருந்துக்காகச் சந்தித்தபோது பை பற்றிய நினைவு கிஞ்சித்தும் இல்லை. கூடும் உற்சாகமும் பூச்சில்லாத நட்பும் ருசியான உணவும் அந்த மாலையைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. கேழ்வரகு சேமியாவில் தயிர்சாதம் செய்தால் பிரமாதமாக இருக்கும் என்பது போன்ற பெரிய விஷயங்களில் மனம் சென்றுவிட்டதால் பாஸ்போர்ட் போன்ற அற்ப விஷயங்களில் கவனம் சென்றிருக்க வழியில்லை. நான் தான் கடைசியாகக் கிளம்பியவன். கீதாவுக்கும் இளங்கோவனுக்கும் எடுத்துச் சென்ற சில அன்புப் பரிசுகளை வைத்திருந்த பையை மாலையில் அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போதே கொடுத்துவிட்டேன். எனவே, எனது பையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். ஆனால், பை இல்லை. வழக்கமாக அமரும் நாற்காலி/சோபா அருகில் தான் வைப்பேன். உடனே, நான் வந்த காரில் அந்தப் பை வைத்துவிட்டு வந்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். எனது கார் பங்களாவுக்குள் வரும்வரை அவர்கள் இருவரையும் கதவருகே காத்திருக்கவைக்க வேண்டாம் என்று பிரியாவிடை பெற்றுக்கொண்டு அழகிய பங்களா நடைபாதை வழியே நடந்து கேட்டுக்கு வெளியே வந்தேன்.

டிசம்பர் மென்குளிரில் விருந்தின் இதமான நினைவுகளுடன் நின்றிருந்தேன். புது ஓட்டுநர். சற்று நேரம் கழித்து கார் வந்தது. காரில் பை இல்லை. நான் என்ன தேடுகிறேன் என்று ஓட்டுநர் என்னையே கேட்டார்.

வேறு வழியில்லை. பாஸ்போர்ட், விமான சீட்டு, டாலர்கள் என்று எல்லாம் காலி. நாங்கள் அன்று மாலை விருந்தில் இரண்டு மூன்று அறைகளில் இருந்தோம். சென்றதும் உட்கார்ந்து பேசியது வரவேற்பறை. சாப்பிட இன்னொரு அறை. அதை ஒட்டிய வராந்தா போன்ற ஒரு இடத்திலும் நின்று பேசிய நினைவு. உட்காரும் இடத்திலன்றி வேறு எங்கோ எனது பையைத் தவறி வைத்துவிட்டேனோ சந்தேகம் வந்தது.

தயக்கத்துடன் நான் மீண்டும் அவர்கள் வீட்டு வாசலில் போய் நின்றபோது கீதாவும் இளங்கோவனும் புதிராக என்னைப் பார்த்தார்கள். விஷயத்தைச் சொன்னேன். காரிலும் பை இல்லை என்றேன். மூன்று பேரும் உள்ளே சென்று தேடினோம். பை எங்கேயும் இல்லை. அவர்கள் வீட்டிலிருந்த பணியாளர் நான் ஒரு சிறு பை மட்டுமே கொண்டுவந்ததாகச் சொன்னார். ஆ என்றிருந்தது.

விடுமுறைக்கு வரும் நேரங்களில் ஊருக்குக் கிளம்பும் முதல்நாளில் நான் வழக்கமாக வீட்டிலேயே இருந்துவிடுவேன். இந்த முறையும் அப்படித்தான் திட்டம். டிசம்பர் 16ஆம் தேதி திரு பாலகிருஷ்ணன் அவர்களின் Journey of a Civilization நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்த நண்பர்களுடன் மாம்பலத்தில் ஒரு விருந்து இருந்தது. அதில் இளங்கோவனும் பங்குகொண்டார். இடையில், “எங்கள் வீட்டுக்கு வாங்களேன்? ஒரு சில நண்பர்களையும் கூப்பிடுவோம்?” என்று சொன்னார். 16, 17ஆம் தேதிகளில் இரண்டு மாலை நேர விருந்துகளுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தேன். 19ஆம் தேதி மாலை மட்டும்தான் இருந்தது. ஊருக்குள் கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள். ஆயினும் “19ஆம் தேதி உங்களுக்கு வசதிப்படுமா?” என்று கேட்டேன். “தாராளமாக,” என்றார் இளங்கோவன். 20ஆம் தேதி காலை விமானப் பயணம் என்றாலும் சமாளித்துவிடலாம் என்று மனதில் ஒரு தெம்பு இருந்தது. பை காணாமல் போகும் என்று யாருக்குத் தெரியும்?

நான் வழக்கமாய் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை வந்தால் செய்வது போலப் பல இடங்களுக்கும் கடைகளுக்கும் சென்றுவிட்டு கடைசியாக கீதா இளங்கோவன் வீட்டு விருந்துக்கு வந்திருந்தேன். இரவு உணவு நேரமும் முடிந்த நிலையில் எந்தக் கடையில், எந்த வீட்டில், எந்த இடத்தில் பையைத் தேடுவது? ஆனால், காரில் ஏறி ஸ்ரீபெரும்புதூர் போய் என்ன செய்வது? சென்னையில் தொலைத்த பையைச் சென்னையில் தானே தேடவேண்டும்? “என் நண்பர்கள் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் விட்டிருப்பேன். பார்த்துக்கொள்கிறேன்” என்று இரண்டாம் முறையாக கீதாவிடமும் இளங்கோவனிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கேட்டை நோக்கி நடந்தேன். அவர்களுக்கும் சங்கடம்.

காரில் ஏறி, முதலில் கிளம்பி தெரு தாண்டியதும் எங்கேனும் நிறுத்துங்கள் என்று ஓட்டுநரிடம் சொன்னேன். கார் கிளம்பியது. தெரு தாண்டி சாலை ஓரத்தில் நிறுத்தினார்.

கீதா இளங்கோவன் வீட்டுக்கு வருவதற்கு முன்பு சிவக்குமார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பத்துடன் பல பத்தாண்டுகள் பழக்கம். நான் பார்த்துப் பிறந்த குழந்தைகள் எல்லாம் எனக்காகச் சற்றுக் குனிந்து என்னைப் பார்த்துப் பேசும் நிலைக்கு வளர்ந்திருந்தார்கள். சிவாவின் அம்மா அப்பாவுக்கு என் குடும்பத்து விவரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டில் நான் வரவேற்பறையில் மட்டும்தான் இருந்தேன். நொறுக்குத் தீனி, டீ, அரட்டை எல்லாமே சோபாவில் தான்.

காரிலிருந்து சிவாவுக்கு போன் செய்தேன். விஷயத்தைச் சொன்னேன். ஆ என்று சொல்லிவிட்டு ஒரு சில நொடிகளில் “இல்லையேடா?” என்றான். மனிதர்கள் பஸ்களிலும் பைக்குகளிலும் கார்களிலும் அவரவர் பைகளுடன் விரைந்துகொண்டிருந்தார்கள். அவன் வீட்டுக்கு வரும் முன்பு நான் எங்கெல்லாம் போனேன் என்பது பற்றி சிவா விசாரித்தான். நான் முடிந்தவரை நினைவு படுத்திச் சொல்லிக்கொண்டிருந்தேன். கூடவே, சிவா வீட்டில் நடந்த விஷயங்களையும் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தேன். மாடிக்குப் போகவில்லை. உள்ளறைக்குப் போகவில்லை. கடைசியாக எல்லோரும் போட்டோ எடுத்துக்கொண்டோம். என்னைவிட ஒன்றரை மடங்கு உயரமாகியிருந்த குட்டி ஒன்று போட்டோ எடுத்தது. நான் தரையில் உட்கார்ந்திருந்தேன். சட்டென,

“சிவா, சோபா கீழே பை இருக்கான்னு பாரு!” என்றேன்.

“என்ன? சோபா கீழேவா? ஆ! இருக்கு, இருக்கு!” என்றான்.


முதல் வேலையாக இளங்கோவனுக்குச் செய்தி அனுப்பினேன்.

“இளங்கோவன்& கீதா: அற்புதமான மாலைக்கு மிக்க நன்றி. பை கிடைத்துவிட்டது. நண்பர் வீட்டில் இருந்தது.”

“😊😍🙏🏽”

*******

ஒரு வருடம் கழித்து, அந்த இரவில் இருட்டில் காரில் உட்கார்ந்து தொலைத்த பையைக் குறித்து யோசித்த கணங்களை நினைக்கையில் இதுவும் மனதில் ஆடுகிறது: அந்த மகிழ்ச்சியான நட்பின் கதகதப்பு சூழ்ந்த மாலையின் இறுதியில் சங்கடப்படுத்திய அந்தச் சில நிமிடங்கள் இல்லாதிருந்திருக்கலாமே? ஆயினும் என்ன? சாதாரணமாய்க் கடந்துபோகும் எத்தனையோ கணங்கள் எந்தச் சுவடும் இன்றி காலக் காற்றில் கரைந்துபோய்விட்டன. அந்த அழகிய மாலைக்குத் திருஷ்டிப் பொட்டாய், இன்னும் அழுத்தமாய் நினைவில் நிறுத்துவதாய் இது இருந்துவிட்டுப் போகட்டும்.


- பயணி தரன்