சிந்தனை, செய்தி, சில்லறை...20210331

நாம் நாமாய் இருப்பது பற்றி தீபா

இந்தப் பதிவை நண்பர்களுடன் பகிருங்கள்!

20210320

“தில்லியில் இப்போது வசந்தகாலம். எல்லாப் பூங்காக்களும் மலர்வனம். நண்பரைப் போலப் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்திருத்தல் ஒரு வரம்” என்று எழுதிவிட்டு, “இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி: கடைசியாகப் பூக்களின் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது எப்போது?” என்று பயணிக் குறிப்புகள் மின்னஞ்சல் நண்பர்களைக் கேட்டிருந்தேன். சில சுவாரஸ்யமான பதில்கள் வந்திருந்தன.

தாய்வானிலிருந்து தீபா நிதானமாக வசந்த கால மலர்களைப் போல் தனது கருத்துகளை வி(வ)ரித்திருந்தார்:

“அழகானதும் ஆழமானதுமான ஓர் கேள்வி. எனக்கு மிகவும் நெருக்கமான சில விஷயங்களில் பூக்களும் ஒன்று. எனது சிறு வயதில் நந்தியாவட்டை, அரளிப்பூ, பூவரசம்பூ, தும்பைப்பூ, சங்குப்பூ, பீநாரிப்பூ எனப் பல பூக்களை அருகில் அமர்ந்து ரசித்திருக்கிறேன். பூவரசம்பூவின் உள்நாக்கு வெற்றிலை பாக்கு போட்டதால்தான் சிவந்திருக்கிறது என்றெல்லாம் என்னைவிட குட்டீஸிடம் (எனக்கே அப்போது ஏழு வயசுதான்) கப்சா அடித்திருக்கிறேன். மதுரையில் என் பாட்டி வீட்டு வாசலிலிருந்த பவழமல்லிச் செடியருகே அமர்ந்து, மணிக்கணக்காக அதன் நறுமணத்திலும், அதன் வெள்ளை, ஆரஞ்சு வண்ணக் கலவையிலும் லயித்திருக்கிறேன். உங்களின் கேள்வி அந்த வாசத்தை என் மூளைக்குள் இன்று பரவவிடுகிறது. ரோஜாப்பு மொட்டு விரிவதைப் பார்க்க வேண்டுமென்று பூந்தொட்டி அருகிலேயே உட்கார்ந்து கொண்டு, கண் இமைக்காமல் அந்த மொட்டையே நானும் என் தோழி தனலட்சுமியும் நள்ளிரவு வரை விழித்திருந்து பார்த்து, பின் எங்களை அறியாமலேயே திண்ணையில் தூங்கிய கதையை உங்களின் கேள்வி இன்று தட்டி எழுப்புகிறது. இன்று அவள் எங்கிருக்கிறாளோ தெரியவில்லை... அதைத் தாண்டி யோசித்துப் பார்த்தால், ஏனோ பத்து வயதிற்கு மேல் பூக்கள் எனக்கு அந்நியப்பட்டிருக்கிறது. பூக்கள் மட்டுமல்ல எனக்குப் பிடித்த இரவு வானம், கடலலை, வானவில் போன்ற பல விஷயங்களை நான் என்னுடன் இணைத்துக்கொள்ளாமலேயே வாழ்ந்து தொலைந்திருக்கிறேன் வாழ்க்கையின் வெள்ள ஓட்டத்தில். அதற்குப் பிறகுப் பத்து வருடங்கள் கழித்து என் மகளை என் மடியில் போட்டுக்கொண்டு அவள் இரு பாதங்களையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு "பூ மாதிரி விரி" என்று கூறியதும், ஏதோ அதைப் புரிந்து கொண்டவள் போல அவள் தன் பாத விரல்களை விரித்த அக்கணத்தையும் உங்களின் கேள்வி இன்று என் கண்களில் நீந்த விடுகிறது. அன்று அவள் விரித்த அப்பூம்பாதத்தில் மீண்டும் பதினைந்து வருடம் தொலைந்துவிட்டிருக்கிறேன் வேறு பூக்களை பார்க்க நேரமின்றி. அதன் பின் எனது முப்பத்தைந்து வயதில், தாய்வான் வாழ்க்கையில் பல முறை பூக்களைப் பார்த்திருக்கிறேன், பூக்கள் அருங்காட்சியகத்திற்குப் போயிருக்கிறேன். எனினும் அவற்றைப் பத்து வயதில் ரசித்தது போல ரசிக்கவில்லை என்ற உண்மையை உங்களின் கேள்வி என் அடி மனதிலிருந்து இன்று தோண்டி எடுக்கிறது. கடைசியாய்ச் சில வாரங்களுக்கு முன்னால் நானும் என் மகளும் 'சக்கூரா' மலர்களைப் பார்த்துவிட்டு வந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவற்றை அதன் அருகில் அமர்ந்து பார்த்து ரசித்தேன். பத்து வயதில் பூக்களை ரசித்த தீபாவிற்கும் இப்பொழுதுள்ள தீபாவிற்கும் எத்தனை வித்தியாசம், அப்பொழுது அந்த ரசனையிலிருந்த என் மன ஓட்டத்திற்கும், இப்பொழுது இருந்த என் மன ஓட்டத்திற்கும் எத்தனை வித்தியாசம். அப்பொழுது நான் ரசித்த சூழலுக்கும், இப்பொழுதிருந்த சூழலுக்கும் எத்தனை வித்தியாசம். அப்பொழுது ரசித்ததை ஐம்புலன்களில் மட்டுமே சேமிக்க முடிந்தது. இப்பொழுதோ ‘ஐ-போனிலும்’ சேமிக்க முடிந்தது. இத்தனை வித்தியாசங்களையும் தாண்டி நான் உணர்ந்த ஒரு ஒற்றுமை, அந்த ரசனையில் விழைந்த உள்ளின்பமும், உள்ளமைதியும். இன்னும் நான் என்னைத் தொலைத்துவிடவில்லை, நான் நானாகவிருக்கிறேன் என்னும் புரிதலை உங்களின் கேள்வி இன்று எனக்கு உணர்த்துகிறது.

சமீபத்தில் நான் ‘the Biology of belief’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அதன் நூலாசிரியர் அதில் ‘Quest for fire’ என்ற சினிமாவின் climax scene பற்றிச் சொல்லும்போது ‘With primary survival assured, humankind was free to reflect on the nature of the world’ என்பார் (இதைப் புரிந்து கொள்ள அப்படத்தையும் பார்த்தேன்). இப்பொழுது இதை எழுதும் பொழுது எனக்கு அந்த வாக்கியம் ஞாபகத்துக்கு வருகிறது. அழகான பதிவு!!!👏🙏 தொடரட்டும் உங்கள் பயணம்🥰🥰”

இந்தப் பதிவை நண்பர்களுடன் பகிருங்கள்!