சிந்தனை, செய்தி, சில்லறை...20210331

அமுதம்

20210331

நண்பர் சாய் அமுதாவிடம் பல விஷயம் பேசினாலும் இதை அடிக்கடிச் சொல்லுவேன்: நீங்க சாப்பாடு பத்தி பேசறதைக் கேட்டாலே கேலரி எகிறிடும், அமுதா! பதத்துக்கு ஒரு சில.

“அட, வெங்காய வடையை வெறும் சட்னி தொட்டு சாப்பிடுவாங்களா? சாம்பார்ல முழுகவிடுங்க தரன்.”

“எள்ளு எடுத்து மிக்ஸியிலே அரைச்சிக்கிட்டு, அப்புறம் மண்ட வெல்லத்தைப் போட்டு அரைச்சி உருண்டை உருண்டையா பண்ணி வெச்சிக்கிங்க. போக வர சாப்பிடுங்க.”

“வாழப் பழத்தை சிறுசு சிறுசா நறுக்கி ஒரு தட்டுல பரப்பிட்டு, கேட்பரீஸ் சில்க் சாக்லெட்டை உருக்கி அதுமேல கோடுகோடாய் ட்ரிஸ்ஸில் பண்ணிடுங்க. அப்புறம் ஃபோர்க் வெச்சி எடுத்து சாப்பிடுங்க. கூடாது. ஸ்பூன்ல எப்படி எடுப்பீங்க? சில சமயங்கள்ல ஸ்பூன்ல அதிக சாக்லேட் வந்திடும். டேஸ்ட் ஏறுமாறா இருக்கும்.”

“உடச்ச கடலையை நைசா அரைச்சி அதில சர்க்கரையும் போட்டு அரைச்சி ஸ்பூனாலே எடுத்து சாப்பிட்டுப் பாருங்க.”

“ஸ்வீட் பாக்ஸ் பிரிச்சி பக்கத்திலே வெச்சிக்கிட்டு தனியா படம் பாத்துக்கிட்டே ஒன்னு ஒன்னா எடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கறது ஒரு சுகம்.”

“நல்ல இந்திய டீ போட்டுக்கிட்டு, ஆனா சுத்தமா சக்கரை சேக்காம, பெரிய கப்புல வெச்சிக்கிங்க. நல்ல மில்க் ஸ்வீட்ட்டா ஒன்னு ரெண்டு ஒரு தட்டுல வெச்சிக்கிங்க. கொஞ்சம் டீ, ஒரு கடி ஸ்வீட். பிரமாதமா இருக்கும்.”

“கல்கத்தாவுல இருந்து வெல்லம் கொடுத்தாங்களா? அப்பன்னா அது கரும்பு வெல்லம் இல்லை. ம்ஹூம், கிடையாது, பனை வெல்லமும் கிடையாது. பிஷ்ணுபூர்ல இருந்து பேரீச்சம் பழ மரத்தோட வெல்லம் கொடுத்திருப்பாங்க. இறுகாம இளகி நிக்கும். தாட் வெல்லம்னு சொல்லுவாங்க. சுடச்சுட ரொட்டி பண்ணி கொஞ்சம் நெய் தடவி, அதுமேல இந்த வெல்லத்தைத் தடவி ரோல் பண்ணிக்குங்க. அப்படியே கையில பிடிச்சி கடிச்சி சாப்பிடலாம். இல்லன்னா, தயிர் சாப்பிடுவீங்கல்ல? ஒரு கப் தயிரும் கொஞ்சம் வெல்லமும் போட்டு ஸ்பூன் வெச்சி சாப்பிடுங்க. அதுவும் இல்லைன்னா ஒரு முழு ஸ்பூன் வெல்லத்தை எடுத்து அப்படியே வாயில போட்டு சாப்பிடுங்க. ஜோரா இருக்கும்.”

வாழ்வை ருசித்தலே அமுதம்.