சிந்தனை, செய்தி, சில்லறை...20210414

மண்டேலா: மண்டைல ஒன்னுமில்லாத படம் - 20210414

20210414

மண்டேலா போன்ற படங்களை நான் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் பார்ப்பதில்லை. அவசியம் இருக்காது—இரண்டு நிமிடங்களிலேயே வெளுத்துவிடும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுகொண்டதால், கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்காக முழுதும் பார்த்தேன்.

1990களின் ஆரம்பத்தில் என் நண்பன் படைப்பை கிருஷ்ணமூர்த்தியைச் சென்னை தீவுத்திடலில் உள்ள சிற்றரங்கத்தில் நவீன நாடகம் பார்க்க அழைத்துப் போனேன். அன்று கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகம். நான் ஏற்கனவே சில முறை பார்த்த நாடகம். நாடகத்தில் இரண்டு கட்சிகள். ஓட்டு சேகரிக்கிறார்கள். இரண்டு கட்சியிலும் சேராமல் ஓரமாய் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஒருத்தரை ஆசை காட்டி இழுக்கிறார்கள். வாக்குறுதிகள் தருகிறார்கள். எதிர்க் கட்சியைத் தூற்றுகிறார்கள். வாக்காளருக்குச் சலுகைகள் தருகிறார்கள். தேர்தல் நெருங்க, கட்சிகளுக்கு இடையே சண்டை முற்றுகிறது. இறுதியில் ஒரே வாக்கு வித்தியாசத்தில் பிரச்சனை பூதாகரமாக, இரண்டு கட்சிக் காரர்களும் சேர்ந்து நாற்காலிக்காரரைக் கொல்லத் துணிகிறார்கள்.

அன்று இரவு நாங்கள் நாடகம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, முதல்முறையாக நவீன நாடகத்தைப் பார்த்த என் நண்பன் சொன்னான்: “தரன், செருப்பாலேயே அடிச்ச மாதிரி இருக்கு.”

அந்த நாடகத்தில், ‘நமக்கு எதுக்குங்க அரசியல்?’ ‘எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு உதவினாலே’ ‘நம்ம வாட்ஸாப் குழுவில் இதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்கலாமே?’ போன்று தம்மிடம் இருக்கும் செல்வாக்குடன் ஒதுங்கியிருக்க விழையும் வழவழாக்களுக்கு மகத்தான சம்பவம் நடக்கும். நம் வாழ்வின் அரசியலிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள முடியாது என்று முகத்தில் கத்தும் அந்த நாடகம்.

மண்டேலா திரைப்படத்தில் இந்தக் கதையைத் திருடி, ஒதுங்கியிருக்கும் மனிதர்களை நல்லவர்களாக்கி, அரசியல்வாதி திருந்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் பழைய பஞ்சாமிர்தத்தை வாயில் புகட்டுகிறார்கள். எல்லா வழவழாக்களும் வாழ்த்துப் பாடுகிறார்கள்.

கருத்து போக, இதெல்லாம் ஒரு படமா என்று எல்லா விதத்திலும் கேட்க வைக்கிறது மண்டேலா. மட்டமான திரைக்கதை, சிறுவர் பள்ளிக்கூட நாடகம் போல நடிப்பு, எச்சில் போட்டு ஒட்டின மாதிரி ஒரு இசை, கல்யாண வீடியோ போல எடிட்டிங்... இந்த ‘நல்ல கருத்து’ சொல்லும் படம் எடுப்பவர்களுக்கு படம் எடுப்பது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கக்கூடாது என்பது என்ன மாதிரியான டிசைன்?