சிந்தனை, செய்தி, சில்லறை...20210427

உள்ளங்கையில் தந்தவர்: பேராசிரியர் ஆல்பர்ட் - 20210427

20210427

ஒரே ஒருமுறை சந்தித்தது. இடையில் அவரைக் கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். நேற்று இறந்துவிட்டார் என்பதையும் கேள்விப்பட்டேன்.

எங்களது ஒரே சந்திப்பு ஒரு நீண்ட விஷயமாக அமைந்தது. நாடக எழுத்துப்பட்டறை என்பது அடிப்படையாக இருந்தாலும், ஒரு ஓவியம் போலத்தான் பேராசிரியர் ஆல்பர்ட் என் நினைவில் இருக்கிறார். ஒரு நாள் மாலை. அவரைப் பந்தல் போன்ற பந்தலின் கீழே ஒரு இரும்பு நாற்காலியில் உட்கார்ந்து எனது நோட்டில் நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்னை மதிய நினைவில் தோய்த்த மாலையின் புழுக்கம். எனக்கு வியர்த்துப் போயிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் ஓரங்க நாடகத்தில் சிக்கலான கட்டம். அப்பாவும் பிள்ளையும் அவனது புது மனைவியின் முன்னணியில் பல ஆண்டுகள் கழித்து நேருக்கு நேர் சந்திக்கும் சூழல். டிக் டிக் டிக் என்று கடிகாரத்தின் ஒலி மட்டும் கேட்கும் வீரியத்தில் அந்தப் பெண்ணின் பார்வையிலிருந்து இந்தக் காட்சி ஒரு அசாதாரணமான சந்திப்பு, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதெல்லாம் பதிவாகிவிட வேண்டும். வசனம் அதிகம் இருக்க முடியாது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் எல்லாம் தெரியும். இவளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் இருவரும் இவளுடன் பேசக்கூடாது. நான் கண்களை மூடிக்கொண்டு வார்த்தைகளை இறைஞ்சுவதும் கொல்வதுமாய் ரணப்பட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை இலைகளின் சலசலப்பு என்று தள்ளிவிட்டும் முதுகில் இமை விரித்த உணர்வை உதற முடியாமல் கண் திறந்து உடல் திருப்பிப் பார்த்தேன். பேராசிரியர் ஆல்பர்ட் நின்றுகொண்டிருந்தார்.

சற்று தூரத்தில், தோட்டத்தின் நடைபாதையில் என்னைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். அவர் தனியாக இல்லை. பயிற்சிப்பட்டறையின் மதிய அமர்வு முடிந்து எல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம். அவருடன் மாலை உலாவுக்குச் சென்ற சில நண்பர்களும் இருந்தார்கள். ஒரு ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். அத்தனை பேரையும் தனது ஆள்காட்டி விரலால் உதடுகளை அடக்கி சமிக்ஞை செய்து அடக்கிவைத்திருந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு தோட்டத்தின் மாலை நேரக்காட்சியைத் தைல ஓவியமாய் வரைந்து வைத்ததுபோல எல்லோரும் அசையாமல் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு கணம் தான். பிறகு பேராசிரியர் ஆல்பர்ட் புன்னகையுடன் எனக்குக் கேட்கவேண்டியது அவசியம் இல்லை என்பதுபோல “பாக்கவே திருப்தியா இருக்கு. எழுதுங்க” என்ற சொற்களை உச்சரித்துவிட்டு காற்றில் இலை அசைவது போலத் தனது சிறிய உடலை நகர்த்தி நடந்து போனார். அவருடன் இருந்த பட்டறை மாணவர்களும் நடந்துபோனார்கள்.

1980களின் கடைசியில் என்று நினைவு. சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நாடக எழுத்துப்பட்டறை ஏற்பாடு செய்தார்கள். ஒரு வாரமா, மூன்று நாளா என்று கூட நினைவில்லை. ஆனால், விடிய விடியப் பேசிக்கொண்டிருந்தோம் என்பதால் பலநாள் நிகழ்வு என்பது உறுதி. நான் எழுத்துப்பட்டறைக்குப் போனபோது எனக்குத் தெரிந்த நண்பர்கள் யாரும் அங்கு இல்லை. ஆனால், பட்டறையில் பல நண்பர்கள் கிடைத்தார்கள். இமையம், அன்பாதவன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் சில மாணவர்கள் என்று அறிமுகமானார்கள். செய்தி வாசிப்பாளர் நிஜந்தன் வந்து பதிவு செய்துவிட்டு, பிறகு பட்டறையில் கலந்துகொள்ளாமல் வெளியேறினார்.

இமையம் போன்ற நண்பர்களுக்கெல்லாம் பேராசிரியரை முன்பே தெரிந்திருந்தது. நான் வழக்கம்போல யார் என்ன என்றெல்லாம் விசாரிக்காமல் பேர் கொடுத்துவிட்டு பெட்டியுடன் பேனாவுடன் வந்து இறங்கியிருந்தேன். பேராசிரியர் ஆல்பர்ட் பட்டறையின் இடையில் சென்னைப் பல்கலை அரங்கம் தயாரித்திருந்த ‘ஒரு பயணத்தின் கதை’ நாடகத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார். தீவுத்திடல் சிற்றரங்கத்தில் கூத்துப்பட்டறையின் ஒரு நாடகமும் பார்த்தோம். அந்தப் பட்டறையின் போது எனக்குப் பேராசிரியர் ஆல்பர்ட்டைப் பிடித்துப்போனது. அவரது அதிராத பேச்சு, விஷய ஞானம், விஷயங்களைச் சுளை உரிக்கும் லாவகம் (பேராசிரியர் ராமானுஜத்திடமும் இந்த சுளை உரிக்கும் லாவகம் கண்டு பயந்திருக்கிறேன்) என்று என்னை மயக்கினார். நான் பார்த்திருந்த சத்யஜித் ரே படங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தார். எடுத்துக்கொண்ட ஓரங்க நாடகங்களில் எப்படி நாடகம் உருவாகிறது என்று வரிகளைப் பிரித்துப்போட்டு விளக்கினார்.

பயிற்சிப்பட்டறையின் கடைசி நாள் எல்லோரும் அவரவர் எழுதியிருந்த ஓரங்க நாடகங்களைப் படித்தோம். ‘மரங்கொத்தி என்றொரு கணக்கு’ என்ற என்னுடைய நாடகத்தை நான் படித்தேன். “நல்லா வந்திருக்கு” என்றார். “அந்த கடிகாரம் பிரமாதம்” என்றார். பலரது நாடகங்களுக்கும் இப்படித்தான் எதையாவது சொன்னார். பேராசிரியர் ஆல்பர்ட்டின் செய்கை எளிமையாக இருந்தது. ஆஹா, ஓஹோ என்று எதையும் சொல்லவில்லை. ஒவ்வொரு நாடகத்திலும் ரொம்பவும் நேரடியாகவும் சுலபமாகவும் தோன்றக்கூடிய எதையாவது ஒன்றைக் கவனப்படுத்தினார். அது எப்படி இயல்பாக நாடகம் என்னும் கலையில் இழைகிறது என்று ரசித்தார். நம் கரத்தைப் பிடித்து ஆதரவாக வைத்துக்கொண்டு நம் விரல்களை விரித்து நம் உள்ளங்கையில் ஒரு நெல்லிக்காயையோ கடலைஉருண்டையையோ வைத்து, பிறகு நம் விரல்களை மூடச்செய்து அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் என்பது போலத் தட்டிக்கொடுத்து விலகி நடப்பது போலத்தான் கலையின் சூட்சுமத்தை நமக்குத் தந்தார். இது முக்கியமில்லாத விஷயமில்லை. இது தான் முக்கியமான விஷயம்.

நிறைய நாள் கழித்து அந்த நாடகத்தைச் சிறுகதையாக எழுதினேன். குங்குமத்தில் 8 பக்கமோ 10 பக்கமோ அடித்தல் திருத்தல் இல்லாமல் பதிப்பித்திருந்தார்கள். அந்த நாடகத்தில் ஒரு சுவர்க்கடிகாரம் வரும். அதன் டிக் டிக் டிக் ஓசை தான் நாடகத்தின் மையம். மகனைப் பொறுத்தவரை, அப்பாவின் இல்லற வன்முறைகளுக்கு நினைவுச் சின்னம். அப்பாவுக்கு அது கடந்தகாலத்து வலியின் நினைவொலி. நாடகத்தின் உச்சக்கட்டத்தில் அந்த கடிகாரம் உடைபடும். சப்தம் நின்றுவிடும். அப்பாவின் கேவல் கேட்கும். அந்தச் சிறுகதை முழுதும் ஒரே ஒரு நிறுத்தற் குறி தான் பயன்படுத்தியிருந்தேன்: முற்றுப்புள்ளி. அந்த கடிகாரத்தின் டிக் டிக் போல, கதை முழுதும் வெறும் முற்றுப்புள்ளி தான் வரும்.

நாம் பல விஷயங்களை நம் உள்ளங்கைகளில் வைத்துக்கொள்ள முடியும். வாழ்வில் ஒரே ஒரு முறை சந்தித்த ஒரு கலைரசிகரைக் கூட.

- பயணி தரன் (20210427)