சிந்தனை, செய்தி, சில்லறை...20210513

என் ராஜ்குமார் சித்தப்பாவுக்காக - 20210513

Thriving Fishes of Thiruvottriyur

by Payani Dharan (2020). Ink and watercolor on paper. ©

திருவொற்றியூரின் திளைக்கும் மீன்கள்

ஓவியம்: பயணிதரன் (2020). Ink and watercolor on paper. ©

20210513

வேறுவழி தெரியவில்லை. சென்ற வாரக்கடைசியில் என் திருவொற்றியூர் ராஜ்குமார் சித்தப்பா கொரோனாவில் இறந்துவிட்டார். சித்தப்பா என்றாலும் வயதில் என் உடன்பிறப்புகளில் மூத்தவர்களை ஒத்தவர் தான். அவருடன் நானும் இருக்கும் ஒளிப்படங்கள் எங்கேனும் இருக்கலாம். இப்போது என்னிடம் இல்லை. அவர் தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்துவந்ததால் ஒரு இருபது வருடங்களாக எனக்கு அவருடன் தொடர்பு அதிகம் இல்லை. ஆனால், அவரது நினைவு தொடர்ந்துகொண்டிருந்தது. உதாரணமாக, ‘திருவொற்றியூரின் திளைக்கும் மீன்கள்’ சுயசரிதைக் கட்டுரைத் தொடரின் 2ஆம் அத்தியாயமான ‘தென்னமரக்குடி எண்ணெ’யில் ராஜ்குமார் சித்தப்பா தான் எனக்குக் கால் சுளுக்கு எடுக்க நைசாக அழைத்துப் போகிறார்.


சென்ற வருடக் கடைசியில் துவங்கி நான் கொரோனா தாக்குதலுக்கு உட்படும் வரை “திருவொற்றியூரின் திளைக்கும் மீன்கள்” என்னும் சுயசரிதைக் கட்டுரைத் தொடரை எழுதும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். இன்னும் எழுதி முடிக்காத இந்தக் கட்டுரைத் தொடரை எழுதி முடித்ததும் இவர்களிடமெல்லாம் காட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். என் ராஜ்குமார் சித்தப்பாவிடம் கூட.


இப்போதைக்கு இந்த 2ஆம் அத்தியாயத்தின் கரட்டு வடிவத்தை வெளியிடுகிறேன். என் சித்தப்பாவுக்காக.

- பயணி தரன் (20210513)

அத்தியாயம் 2: தென்னமரக்குடி எண்ணெய். ‘திருவொற்றியூரின் திளைக்கும் மீன்கள்’ சுயசரிதைக் கட்டுரைத் தொடரிலிருந்து. (கரட்டு வடிவம்)-பயணி தரன்

தென்னமரக்குடி எண்ணெய் என்பதை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். என்ன ஒரு ஒலி நயம். இந்த மாதிரியான பதம் திருக்குறளிலோ சிலப்பதிாரத்திலோ குறைந்தபட்சம் திருவருட்பாவிலோ வந்திருக்க வேண்டும். இத்தனை அழகான பெயருள்ள ஒரு வஸ்து என் வாழ்வில் அறிமுகமானது திருவொற்றியூரில். வாழ்வில் வலி என்னும் உணர்வை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றால் நான் நினைத்துப்பார்க்கும் கணம் அது. அந்த இலக்கிய ஒலியமைப்புடைய பதம் அறிமுகமான கணத்துக்குப் போகும்முன்பே நாம் கம்பரைக் கவனிக்கவேண்டும்.

அப்போது நாங்கள் கிழக்குத் தாம்பரம் கம்பர் தெருவில் வசித்துவந்தோம். தெருவின் குறுக்கு மூலையில் ஒரு முனிசிபாலிட்டி மைதானம் இருக்கும். அதை ஒட்டி மாதர் சங்கம் என்று சொல்லப்பட்ட ஒரு மண் தரையும் இரும்புத் தகடுகள் வேய்ந்த கூரையுமாக ஒரு அரங்கம் இருக்கும். அங்கே தான் சபா நாடகங்கள், இசைக் கச்சேரிகள் நடக்கும். முனிசிபாலிட்டி மைதானம் தான் எங்களது கிரிக்கெட் மைதானம். கால்பந்து மைதானம். பேட்மிண்டன் கோர்ட். கபடித் திடல். ஒரு முறை அது உயரக்குதிக்கும் திடலாகவும் மாறியது. சேரும் நண்பர்களையும் டிவியில் அப்போது நிகழும் போட்டிகளையும் பொறுத்து உருமாறும் கட்டாயத்தில் அந்த மைதானம் இருந்தது. திடீரென பன்றிக் கூட்டங்கள் வந்து நிலத்தை உழுவது போல தங்கள் மூக்குகளால் பாளம் பாளமாகத் தோண்டி வைக்காத வரையில், அந்த மைதானத்துக்கும் எங்களுக்குமான உறவு நேரிடையாகத்தான் இருந்தது, மணல் வண்டி வரும்வரை.

அந்த முனிசிபாலிட்டி மைதானத்தில் ஒரு குட்டி முனிசிபாலிட்டி கட்டிடம் இருக்கும். மொத்தமே இரண்டு அறைகள். முகப்பில் ஒரு வராந்தா போன்ற அறை. அதைக் கடந்தால், ஒரு அலுவலக அறை. அங்கேதான் அந்த அலுவலக அதிகாரி உட்கார்ந்திருப்பார். அந்த அலுவலகம் திறந்திருந்தால் தான் மைதானத்தில் விளையாடப்போகும் நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்லி எச்சரிக்கை செய்வோம். நாங்கள் விளையாடும்போது அவர் சைக்கிளில் வருவது தூரத்திலிருந்து தெரிந்தால், ஓடி ஒளிந்துகொள்வோம். அவர்களும் முள் கம்பி வேலி என்றெல்லாம் செய்து பார்த்தார்கள். நாங்கள் எலி வலைக்குள் புலி வேஷம் போடும் கும்பல். அதெல்லாம் வேலைக்காவாது.

அந்தக் கட்டிடத்தை விரிவாக்கத் திட்டமிட்டார்கள் போலிருக்கிறது. திடீரென ஒருநாள் ஒரு வண்டி ஜல்லியும் ஒரு வண்டி ஆற்று மணலும் கொண்டுவந்து அந்தக் கட்டிடத்தை ஒட்டி கொட்டினார்கள். வெறும் பன்றி தோண்டிய மைதானமே சொர்க்கமாக இருந்த எங்களுக்கு விளையாட ஒரு வண்டி ஆற்று மணல் கிடைத்தது. சமதளம் தேடும் வயதில்லை அப்போது. மணல் மேட்டில் ஏறுவதும் அடுத்த பக்கம் சறுக்குவதுமாகத் திருவிழாவே எங்கள் தெருவுக்கு வந்த மாதிரி ஆகிவிட்டது.

இதனிடையில் எங்களில் ஒரு குரங்குக்குப் புது யோசனை வந்தது. அந்த முனிசிபாலிட்டி கட்டிடத்தின் மேலிருந்து அந்தச் சுகமணல் குவியலில் குதித்தால் இன்னும் நன்றாக இருக்குமே? மணல் குவியலும் ஓரளவு உயரமாக இருந்ததால், அந்தக் குட்டைக் கட்டிடத்தின் தளத்திலிருந்து குதித்தால் ஒன்றும் ஆகாது என்று தோன்றியது. அந்தக் கட்டிடத்தின் வராந்தாவுக்குச் சுவருக்குப் பதில் கட்டைகளைக் குறுக்காக அடித்த தடுப்பே இருந்ததால், அதில் கால் வைத்து மளமளவென்று கூரை வரை ஏற முடிந்தது. பிறகு ஜன்னலின் தடுப்பு மீது கால்வைத்து மேலே ஏறிவிடலாம். முதலில் ஒரு பையன் குதித்தான். உடனே பெரும்பாலான பசங்களுக்குத் தைரியம் வந்தது. எல்லோரும் குதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், ஒவ்வொருவராகத்தான் குதிக்க முடியும் என்பதால், கீழே காத்திருந்தவர்கள் பொறுமையிழந்து குட்டிக்குட்டி குரங்கு சேஷ்டைகளில் ஈடுபட்டார்கள். அதில் ஒன்று, மணல் மேட்டில் ஏறி, மேலிருந்து குதிப்பவர்கள் குதிக்கமுடியாமல் குறுக்கே நிற்பது. மீறிக் குதித்தால் பாய்ந்து விலகுவது.

நான் மேலே ஏறியிருந்தேன். குதிக்கக் காத்திருந்தேன். மணல் குவியல் மேலே பக்கத்து வீட்டுப் பையன். ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கும் பிஞ்சு. அவன் எனக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டிருந்தான். நான் குதித்தால் அவன் சுதாரணையாக விலகிவிடுவான் என்று தோன்றாததால், நான் குதிக்காமல் காத்திருந்தேன். அவன் விலகுவது மாதிரி விலக, நான் அவன் போகிறான் என்று நம்பிக் குதிக்க, அவன் நான் குதிக்க முயல்வதைப் பார்த்துவிட்டு மீண்டும் நான் குதிக்கவிருக்கும் இடத்துக்கே வர நகர, நான் அவன் மேல் குதித்துவிடுவேனோ என்று நான் கத்த, நான் அவன் மேல் குதித்துவிடுவேன் என்று அவன் அலற, நான் அவனைத் தவிர்ப்பதற்காக என் கால்களை விலக்கி வைத்துக் குதிக்க, எசகுபிசகாய் கால் மணலில் சொருக, நான் முகம் குப்புற மணலின் சரிவில் கிடக்க, எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். சில வாழ்வின் தருணங்களில் அத்தனை விவரங்களும், நம் உடம்பில் எவ்வளவு வியர்வை இருந்தது, இந்தத் தசை எவ்வளவு இழுக்கப்பட்டது போன்ற எல்லா விவரங்களும், நமக்கு ஞாபகம் இருக்கும் இல்லையா, அப்படிப்பட்ட கணம் எனக்கு அது.

அன்று இரவே எனது இடது கால் முட்டியின் பின்புறம் வீங்கிவிட்டது. சுளுக்கு விழுந்து நரம்பு இழுத்துக்கொண்டது. அம்மா ஒத்தடம் கொடுத்தார்கள். ஒவ்வொரு அடிக்கும் வலி இருந்தது. ஆஸ்பிரின் மாத்திரைகள் கொடுத்தார்கள். ஓரிரு நாட்கள் நொண்டிக்கொண்டு பள்ளிக்கும் சென்றேன். ஒரு வாரத்தில் சரியாகிப் போகும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். நானும் நம்பினேன். அந்த வாரக்கடைசியில் திருவொற்றியூரில் எங்கள் மாமி-மாமா வீட்டில் ஏதோ விசேஷம். நிறைய உறவுகள் என்பதால், அங்கே யாருக்காவது நிச்சயதார்த்தம், வளைகாப்பு, காதுகுத்தல் என்று விசேஷங்கள் நடந்தபடி இருக்கும். நான் அம்மாவுடன் திருவொற்றியூருக்குக் கிளம்பும்போது, என் கால் ஓரளவு சுமாராகியிருந்தது. அத்துடன் எனது கால் சுளுக்கு பற்றிய விஷயம் முடிந்தது என்று நான் நம்பினேன். ஆனால் எல்லோருக்கும் அதுகுறித்த கருத்து ஒற்றுமை இல்லை என்பதை அங்கே போனபின்பு தான் புரிந்துகொண்டேன். புரிந்துகொள்ள வைக்கப்பட்டேன்.

அது நடக்கும்போது இயல்பாக இருந்தது. திருவொற்றியூரில், மாமி வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். விளக்கு வைக்கும் நேரம். ரா- சித்தப்பா கதவருகே எங்கேயோ வெளியே போவதுபோல நின்றுகொண்டிருந்தார். என்னைத் தாண்டி என் அம்மாவிடம் ஏதோ சொன்னார். பிறகு என்னைப் பார்த்து, “வாப்பா, கட வரைக்கும் போய்விட்டு வரலாம்” என்றார். நானும் இயல்பாய் எழுந்து சென்றேன்.

நான் மெய்ன் ரோட்டுக்கு வந்ததும் கடைத்தெரு. ஆனால், சித்தப்பா அதையும் தாண்டி தொடர்ந்து நடந்தார். பிறகு ரயில் இருப்புப்பாதையையும் கடந்தோம். அப்போது நான் கேட்டதற்கு, “ஒரு பிரண்ட் இருக்கறாப்ல ஸ்ரீ-. பாத்துட்டுப் போயிடுவோம்” என்றார்.

அந்த பிரண்ட் வீட்டில் சில இளைஞர்கள் இருந்தார்கள். ஒருவர் மட்டும் நடுத்தர வயதினராக இருந்தார். ரா- சித்தப்பா அவரை “அண்ணா!” என்று கூப்பிட்டார். வீட்டின் முகப்பு, வராண்டா எல்லாமே நான் தாம்பரத்தில் பார்த்திருந்த ரயில்வே காலனி வீடுகளைப் போல இருந்தன. எனக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தார்கள். பிறகு ஒரு வியூகம் அமைந்த தோற்றம். என்னைப் பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு குழப்பம்.

எனக்கு என்னென்ன நினைவிருக்கிறது? நான் அந்த அறையிலிருந்த கட்டிலில் குப்புறப் படுத்திருந்தேன். வெள்ளை பெட்ஷீட். எனது இரு கால்களையும் பல கைகள் பிடித்திருந்தன. என் தலையையும் முதுகையும் கூட யார்யாரோ பிடித்து அழுத்திக்கொண்டிருந்தார்கள். என் இடது கால் முட்டியின் பின்புறம் ஏதோ குழகுழவென ஊற்றப்பட்டது. பிறகு வலிக்க வலிக்க வலிக்க அந்த முட்டியின் பின்புற நரம்புகள் நீவிவிடப் பட்டன. முதலில் ஓரிரண்டு முறைதான் என்று நான் நினைத்ததும் பிறகு நம்பவே முடியாத அளவுக்கு அந்த நீவுதல்கள் நீண்டதும் நினைவிருக்கிறது. அந்தக் கைவிரல்கள் (சித்தப்பாவின் ‘அண்ணன்’ விரல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்) முட்டிக்குச் சற்று மேலிருந்து கீழே இறங்கும்போதே அந்த முட்டியின் பின்புறத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வலி வரப்போகிறது என்னும் பயம் உயர்ந்தது நினைவிருக்கிறது. கார்ட்டூன்களில் வருவது போல, வலி என்பது பெரிய எழுத்தில் வந்து அறைந்த தருணம் அது. வலியும் சினமும் அவமானமும் என்னைப் புரட்டின.

என் அலறல்கள் சுமாராக நினைவிருக்கிறது. ஆனால், எவ்வளவு நேரம் இது நடந்தது போன்ற விஷயங்கள் நினைவில்லை.

பிறகு சிவாஜி காலண்டர் நினைவிருக்கிறது. நான் நீண்ட டம்ளரில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தேன். விசும்பல் அடங்கவில்லை. அந்த அறையின் மஞ்சள் ஒளி உமிழும் உருண்டை பல்பில் என் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை மீறி சுவரில் மாட்டியிருந்த சிவாஜி காலண்டர் கண்ணில் பட்டது. சிவாஜியின் நூறு சின்னசின்ன படங்களை ஒட்டி ஒட்டி வைத்தது போன்ற காலண்டர். வெறும் புகைப்படங்கள் மட்டுமே. படத்தின் பெயரெல்லாம் இல்லை.

‘அண்ணா’ என் பின்னாலிருந்து நான் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் காலண்டரின் படங்களில் ஒவ்வொன்றாகத் தொட்டு, “பாத்தியா? பராசக்தி! மனோகரா! வீரபாண்டிய கட்டபொம்மன்!...” சொல்லிக்கொண்டு வந்தார். நான் முந்திக்கொண்டு, விசும்பலையும் மீறி, “தோ, தில்லானா மோகனாம்பாள்!” என்றேன். அறையிலிருந்த அத்தனை பேரும் ஒருசேரச் சிரித்தார்கள். நான் அவமானத்தால் மீண்டும் அழுகிறேன் என்பதையும் மீறி அவர்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பிறகு ‘அண்ணா’ என்னைச் சமாதானப்படுத்தினார்.

“சுளுக்கு எடுத்தப்ப என்னன்னா வசனம் பேசின? என்னென்ன சாபம் விட்ட? அ? சரி விடு. தோ பார், சிவந்த மண்! வியட்நாம் வீடு பாத்திட்டியா?” என்றார்.

நானும் ரா-சித்தப்பாவும் அந்த வீட்டிலிருந்து கிளம்பும்போது ஒரு சண்டை அளவுக்கு சித்தப்பா ‘அண்ணா’வின் பாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளைத் திணிக்க முயல்வதும் ‘அண்ணா’ அதைத் தடுக்க முயல்வதுமாகச் சில கணங்கள் போனது. கடைசியில் சித்தப்பா வென்றார். ‘அண்ணா’ அவரது பாக்கட்டிலிருந்த பணத்தை ஏதோ வேண்டாத மிருகம் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருப்பதைப் போலப் பார்த்தார். பிறகு உள்ளே சென்று ஒரு சின்ன ராமர் நீல தகர டப்பாவைக் கொண்டுவந்து சித்தப்பா கையில் கொடுத்தார். சித்தப்பா அதற்குப் பணம் தர முயல, இன்னொரு குட்டிச்சண்டை நடந்தது. இந்த தடவை, ‘அண்ணா’ வெற்றிபெற்றார்.

நான் ரா-சித்தப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவரும்போது ஓயாமல் பேசிக்கொண்டு வந்தேன். ரயில் பாதையைத் தாண்டி மார்க்கெட் வந்ததும் சித்தப்பா எனக்கு மசாலா பால் வாங்கிக்கொடுத்தார். நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது நன்கு இருட்டியிருந்தது. எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னைப் பார்த்து “சரியாப்போச்சா?” என்றார். “என்னாது?” என்றேன். “காலு” என்றார். அப்போதுதான் எனக்கு மீண்டும் கால் பற்றிய நினைவு வந்தது. சித்தப்பா அம்மாவிடம் தென்னமரக்குடி எண்ணெய் டப்பாவைத் தந்தார்.


*******


எங்கள் வீட்டில் தென்னமரக்குடி எண்ணெய்யின் வரவுக்கும் வளர்ச்சிக்கும் நான் பெரும்பங்கு வகித்திருக்கிறேன். நானும் அம்மாவும் திருவொற்றியூரிலிருந்து வீட்டுக்கு வரும்போதே, நான் தென்னமரக்குடி எண்ணெய்யின் விசிறியாகியிருந்தேன். அதன் வினோதமான வாசம் ஒரு புது அத்தியாயத்தைத் துவக்கியிருந்தது. அதைக் கொஞ்சம் கற்பூரம் போட்டுச் சற்றே சூடேற்றி... என்று என் மாமா அம்மாவுக்கு விளக்க, என் மனக்கண்ணில் அந்த உலகம் விரிய, அத்தனையும் எனக்காகவும் எனது முட்டிக்காகவும் என்ற எண்ணம் என்னை தென்னமரக்குடி எண்ணைக்கடலில் மிதக்கவைத்தது. இதற்காக முனிசிபாலிட்டி கட்டிடம் என்ன, LIC மாடியிலிருந்தே குதிக்கலாமே என்று பட்டது.

அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு நாங்கள் தென்னமரக்குடி எண்ணெய் நுகர்வோர் சங்கத் தலைமை உறுப்பினர்கள் போல இருந்தோம். அது இல்லாமல் ஒரு கால் வலியோ, கை வலியோ, இடுப்பு வலியோ கடந்ததாக நினைவில்லை. அதனாலேயே சில சமயங்களில் சில குடும்ப உறுப்பினர்களுக்கு வலி வந்ததாகவும் சொல்லப்பட்டது.

மாமி வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மாவுக்கு முதுகில் தென்னமரக்குடி எண்ணெய் தடவி உருவிவிடுவார். அம்மா உள்ளே போய் ரவிக்கையைக் கழற்றிவிட்டுப் புடவையை மட்டும் சுற்றிக்கொண்டு வந்து மாமிக்கு முதுகைக் காட்டியபடி தரையில் உட்காருவார். “அங்-அங்க தான் மாமி” என்று அம்மா இதமாக வழிநடத்த மாமியின் விரல்கள் அம்மாவின் முதுகிலிருந்து எடுபடாமல் ஸ்கேட்டிங் பண்ணுவதுபோல வழுக்கும். எங்கள் வீட்டில் கால் மிதித்துவிடுதலில் எனக்குத் தனிப்பெரும் பெயர் இருந்ததால் நானும் முதுகை நீவிவிடக் கற்ற நினைத்தேன். “ஆஹா, ரொம்ப நல்லா இருந்துதுப்பா. சூப்பர். சரி, நீ போய் விளையாடிக்கோ. மாமி, நீ புடி” என்று என்னை ஓரம் கட்டினார்கள். பக்கத்தில் இருக்கும் சுவரையோ கம்பையோ பிடித்துக்கொண்டு பிறரின் கால்களிலும் முதுகிலும் ஏறி நின்று மிதிக்கும் எனது ‘திறமையில்’ எனது சிறு உருவம் தான் பெரும்பங்கு வகித்தது என்பது எனக்குப் புரிய கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், மாமியின் விரல்களுக்கு அம்மாவின் வலி தெரிந்திருந்தது.


- பயணி தரன் (20210513) ©

(இன்னும் எழுதி முடிக்காத கட்டுரைத்தொடரின் ஒரு அத்தியாயத்தின் கரட்டு வடிவம்.)