சிந்தனை, செய்தி, சில்லறை...20210515

எங்கள் குடும்பப் பாடல்கள்

உலக குடும்ப நாள் (மே 15)* சிறப்புப் பதிவு

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்.

உலக குடும்ப நாள் (மே 15)* சிறப்புப் பதிவு: எங்கள் குடும்பப் பாடல்கள்.

‘நாளை நமதே!’ படத்தில் வருவது மாதிரி, தமிழ் சினிமாக்களில் குடும்பப் பாடல்கள் வரும். அப்போதெல்லாம் சிரித்திருக்கிறேன். இப்போது, எங்கள் குடும்பப் பாடல்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

வைதேகி நாங்கள் பள்ளியில் படித்தபோது ஒரு திருட்டுக்கடிதம் கொடுத்தாள். கடிதம் கொடுத்த முறை தான் திருடு. மற்றபடி, கடிதத்தின் விஷயம் வெதவெதவென்று ஏதோ. ஆனால் ‘இலக்கியத் தேர் ஏறி’ என்று என்னைப் பற்றி ஒரு வரி வரும். (அப்பெல்லாம் நாலஞ்சு பத்தி பாரதி வரி சொல்லாம ஒரு மேடையிலருந்து இறங்கிட்டா தமிழ்த் துரோகத்தின் குற்றவுணர்ச்சி கொன்னுடும்.) கொஞ்ச நாள் எங்கள் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில், ‘தேர்’ என்பது வைதேகிக்கான குழூஉக்குறியாக இருந்தது. நிற்க.

நான் வைதேகிக்கு ஏதும் கவிதைகள் (காதலோ, இன்ன பிறவோ, அப்போதோ, பிறகோ) எழுதிக் கொடுத்ததாய் நினைவில்லை. நிற்க.

எங்கள் மகன் அபி பிறந்த காலத்தில் நான் தமிழ்த்தாய்க்கு அணிகலன்கள் செய்து பூட்டுவதைத் தலையாய கடமையாய்ச் செய்துவந்தேன். அப்போது அவனுக்கு ஒரு பாடல் எழுதினேன். அதை வைதேகி மெட்டு போட்டு எங்கள் மகனுக்குப் பாடுவாள். சரணத்தில் ‘ஆராரோ’ வரும். அபியைத் தூங்கவைக்க (விக்கிரமாதித்தயன் மனநிலை தேவை) முயற்சி செய்யும்போது ‘ஆயாயோ பாத்து’ என்று நேயர் விருப்பம் வைப்பான். எல்லா ஆராரோவும் செல்லாது. எங்கள் பாட்டு தான். அந்தப் பாட்டை இன்னும் பலப்பல குழந்தைகளுக்கு (சமீபத்திய தாய்வான் போஸ்டிங் வரை) வைதேகி பாடுவாள். மொழி, நாடு பேதமில்லை—எல்லாக் குழந்தைகளும் தூங்கிவிடும்.

அந்தப் பாட்டில்,

“என்ன சொல்ல, ராஜா, உன்

வேரும் நானாய் இருப்பேன்.

என்னை உந்தன் ஓடையாக

உருக்கி உருக்கிக் கொடுப்பேன்” என்று பாடும்போது குரல் கம்மிவிடும். நிற்க.

எங்கள் மகள் கீர்த்தனா பிறந்த காலத்தில் நாங்கள் சீனாவில் இருந்தோம். தமிழ்த்தாயின் சார்பாக ஏதும் கேட்க ஆளில்லாமல், வைதேகி பல பாடல்களின் வேகத்தை வெகுவாகக் குறைத்துத் தாலாட்டுப் பாட்டு என்று கலப்படம் செய்து பிழைத்தாள். உதாரணமாக, “வா, வாத்யாரே வூட்டாண்டே” பாடல். நாங்கள் சென்னைக்கு விடுமுறைக்கு வந்தபோது எல்லோரும் இருக்கும் சூழலில் எங்கள் செல்ல மகள் நேயர் விருப்பமாக தன் மழலையில் “ஜாம்பஜா(ர்) ஜக்கு” என்று கேட்க, தமிழ்கூறு நல்லுலகம் எங்களைப் புழுவாய்ப் பார்த்தது.

இந்த வசைநிலை மாற, எங்கள் மகளுக்காக வைதேகியே ஒரு மெட்டு போட்டு, சில சொற்களைச் சேர்த்துப் பாட ஆரம்பித்தாள். இன்றைக்கும் எங்கள் மகள் வீட்டுக்கு வந்தால், வைதேகி இதை ஆசைக்காகவாவது பாட வேண்டும்.

“சொல்லித் தந்தது யாரு?

தங்கமே தான் உன் பேரு

அள்ளித் தந்தது யாரு?

கண்ணு உறங்கு, கண்ணு உறங்கு” என்று போகும் பல்லவி. நிற்க.

நான் எனக்கே எழுதிக்கொண்ட ஒரு பாடலைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் memento mori (லத்தீனில் ‘உனது மரணத்தை மறக்காதே’ என்று அர்த்தம்), stoicism என்றெல்லாம் போகவேண்டும். இப்போதைக்கு—சற்றே அதிர்ச்சியூட்டும் என்றாலும்—அதன் முதல் இரண்டு வரிகளைச் சொல்கிறேன்.

தோள்கள், பல கால்கள்

என்னைச் சுமந்தே போகுதே

மலர்கள், நறுமணங்கள்

எந்தன் உடல்மேல் வாடுதே

ஆமாம். எனது மரண ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நான் பாடும் பாடல். ஏறத்தாழ 30 வருஷம் முன்பு எழுதியது. இப்போதும் அடிக்கடி முணுமுணுப்பேன். கொரோனா காலத்தில், இப்போதைக்கு இது போதும். நிற்க.

கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு இன்னொரு குடும்பப் பாடலும் சேர்ந்துவிட்டது. காரணம், சீட்டாட்டம். நானும் வைதேகியும் வீட்டுக்குள் அடைந்து கிடைப்பதால் கார்ட்ஸ் ஆடுவோம். வெறும் ரம்மி தான். ஆனால் டிரம்ப்ஸ் ஆடுவது போல பாவலா நடக்கும். அதிலும் வைதேகி அவளது முகபாவனைகளை மறைத்துக்கொள்ளுவதில் கில்லாடி. கண்கள் ஆன்மாவின் சாளரங்கள் என்று எந்த மடையன் சொன்னானோ தெரியாது. ஆனால், இவ்வளவு பெரிய அழகான கண்களை வைத்துக்கொண்டு அவள் “அச்சோ, இந்த தடவையும் இவ்வளவு மட்டமான கார்ட்ஸ் வந்திருக்குடா!” என்று சொன்னால், அது மட்டமான கார்ட்ஸ் ஆகவும் இருக்கலாம், அல்லது, ரெண்டு-ரன்-ரெண்டு-ஜோக்கர் வந்திருக்கலாம். அவளது முகபாவத்திலிருந்து ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது. வார்த்தைகளோ வழி தவற வைக்கும்.

அதனால், அவளை நம்பக்கூடாது என்பதை நான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வேன். அதற்காக, சமீபத்தில் ஒரு பாட்டு செய்தேன். முதல் ஒற்றை வரியாகத் துவங்கி, ஆட்டத்தின்போது பாடிப்பாடி இப்போது முழு பல்லவியும் அமைந்துவிட்டது. நாங்கள் பெரும்பாலும் தினமும் காபி/டீ, கார்ட்ஸ், அரட்டை என்று ஒரு மணி நேரமாவது செலவிடுவதால், சரணங்களும் சீக்கிரம் எழுதிவிடுவேன் என்று நினைக்கிறேன். கார்ட்ஸ் ஆடும்போது ‘அவளை நம்பக்கூடாது’ என்னும் அடிப்படை கருத்தை எடுத்துச்சொல்லும் இந்தப் பாடலை, பாலமுரளி கிருஷ்ணா பாடிய “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” மெட்டில் உரக்கப் பாடினால் ஆட்டத்தில் நீங்கள் ஜெயிக்கும் வாய்ப்புகள் கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரணம் எழுதிய பிறகு புல்லாங்குழல் இசையுடன் பாடிப்பார்க்க ஆசை. அந்தப் பாடலின் வெளியீட்டு உரிமை விஷயங்களில் சிக்கல் இருப்பதால், இப்போதைக்கு அப்படி ஒரு குடும்பப்பாடல் இருக்கிறது என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் உலக குடும்ப நாள்* வாழ்த்துகள்!

—பயணி தரன் (20210515)

#family #life #songs #delhidiaries #lyrics

*The International Day of Families is observed on the 15 May every year. The Day was proclaimed by the UN General Assembly in 1993 with resolution A/RES/47/237 and reflects the importance the international community attaches to families.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்.