சிந்தனை, செய்தி, சில்லறை...20210524

வைரஸ்களைப் பற்றிய 9 அடிப்படைத் தகவல்கள்

COVID-19 என்னும் கொரோனா வகை வைரஸ் பற்றி சரியான புரிதல் வேண்டும் என்றால், பொதுவாக வைரஸ்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.


கோயம்பத்தூரில் கொரோனா தேவிக்குச் சிலை வைக்க முக்கிய காரணங்கள் அறியாமையும், அதன் விளைவாக வரும் பயமும். COVID-19 என்னும் கொரோனா வகை வைரஸ் பற்றி சரியான புரிதல் வேண்டும் என்றால், பொதுவாக வைரஸ்கள் பற்றித் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். போன வருஷம் நாங்கள் தாய்வானிலிருந்து இந்தியா வந்துசேர்ந்த காலத்தில் இன்று நம்மை வதைக்கும் COVID-19, கதவிடுக்கிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது. அடிப்படையில் நான் அறிவியல் மாணவன் என்றாலும், அப்போது வைரஸ்கள் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள சில நூல்களைப் படித்தேன். இங்கே, சில அடிப்படைத் தகவல்கள்:


1. வைரஸ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

வைரஸ் என்கிற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்தது. ‘விஷம்’ என்று அர்த்தம். அது கண்ணுக்குத் தெரியாத விஷம் என்று நம்பினார்கள்.


2. வைரஸ்கள் எப்போது தோன்றின? எங்கே இருக்கின்றன? எத்தனை இருக்கின்றன?

வைரஸ்கள் விலங்குகள் தோன்றுவதற்கும் மனிதன் தோன்றுவதற்கும் முன்பே தோன்றிவிட்டன.

எல்லா இடங்களிலும் வைரஸ்கள் இருக்கின்றன.

எக்கச்சக்கமாக. ஒரே ஒரு லிட்டர் கடல் தண்ணீரில் 1000 கோடிக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன (உலகின் மொத்த ஜனத்தொகையே 800 கோடி தான்). ஆமாம், ஒரே ஒரு லிட்டரில் உலக மக்களைவிட அதிகமான வைரஸ்கள் இருக்கின்றன.


3. வைரஸ் என்றால் நமக்கு மரணம் தானா?

இல்லை. ஒரு வகையில், வைரஸ்களும் பாம்புகளைப் போல—விஷப் பாம்பும் உண்டு, விஷமில்லாத பாம்பும் உண்டு. விஷப் பாம்பிலேயும் விஷத்தின் தீவிரம் மாறும். சிலது கடித்தால் அப்போதே சாவு. சிலவற்றில் சாவே வராது, ஆனால் மற்ற விளைவுகள் இருக்கும். வைரஸ்களும் அப்படித்தான்.

உதாரணமாக, நமக்குச் சளி பிடிப்பது வைரஸ்களால் தான். (அதனால் தான் தீவிரமான சளிக்கு anti-viral மருந்துகள் தருகிறார்கள்). சளி வைரஸ் என்று ஒன்று தனியாகக் கிடையாது. மனிதர்களுக்குச் சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. நம் வாழ்நாளில் நம் ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ ஐம்பது வெவ்வேறு வகையான வைரஸ்களால் சளி பிடிக்கிறது.


4. வைரஸ்கள் மனிதர்களை மட்டும் ஏன் தாக்குகின்றன?

வைரஸ்கள் எந்த உயிரையும் தாக்கக் கூடியவை. அந்த உயிரி மனிதர்களாக இருக்கலாம், விலங்குகளாக இருக்கலாம், தாவரங்கள் ஆக இருக்கலாம். ஏன், பாக்டீரியாவாகக் கூட இருக்கலாம்.


5. வைரஸ் என்பது நுண்ணுயிரி என்கிறார்களே, அதற்கு உயிர் உண்டா?

ஒரு படத்தில் வடிவேலு, ‘வரும், ஆனா, வராது’ என்பாரே, அதைப் போலத்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.


வைரஸுக்கு உயிர் கிடையாது. ஆனால், அது சாகாது.

வைரஸால் நகர முடியாது. ஆனால், அது எல்லா இடத்திலும் பரவிவிடும்.

வைரஸ் வளராது, ‘குட்டி’ போடாது. ஆனால், ‘இனப்பெருக்கம்’ செய்யும்.


6. உயிர் இல்லாத ஒன்று எப்படி ‘இனப்பெருக்கம்’ செய்யும்? எப்படி நம்மைக் கொல்லும்?

வைரல் என்றால் எக்கச்சக்கமான ‘இனப்பெருக்கம்’ என்கிற அர்த்தம் நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. எப்படி? நமக்குத் தெரிந்த மூன்று விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவரலாம்: ‘வைரலாகும் YouTube வீடியோ,’ கம்பியூட்டர் வைரஸ், ஜெராக்ஸ் மெஷின்.

YouTube வீடியோவுக்கு உயிர் கிடையாது. ஆனால், நாம் பலரும் பல வழிகளில் பகிர்வதால் அது பரவுகிறது. முதல் வீடியோவை பலபேர் டவுன்லோட் செய்து வாட்ஸாப்பில் அனுப்புகிறார்கள். இன்ஸ்டாகிராமில் போடுகிறார்கள். ட்விட்டரில் பகிர்கிறார்கள். அவர்களுடைய YouTubeஇல் கூட போடுகிறார்கள். அதனால் தான் அந்த வீடியோ ‘வைரலானது’ என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. வடிவேலு மீம்ஸ் பரவுவதும் ‘வைரல்’ ஆவதால் தான்.

அடுத்ததாக, கம்பியூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்கிறோம். என்ன அர்த்தம்? யாரோ ஒருத்தர் எழுதிய கம்ப்யூட்டர் codeஐ நாம் நம் கம்யூட்டருக்குள் இறக்கிக்கொள்கிறோம் (கம்யூட்டர் வைரஸ் code தானே ‘வராது.’ நாம் தான் தெரிந்தோ தெரியாமலோ இறக்கிக்கொள்கிறோம்). அந்த code-ஐ எழுதியவர், அந்த code நம் கம்யூட்டருக்குள் வந்ததும் நம் கம்யூட்டரைப் பயன்படுத்தி தன்னைத் தானே ஜெராக்ஸ் செய்துக்கொள்ளும்படி எழுதியிருக்கிறார். ஜெராக்ஸ் மெஷினை வைத்து உங்களது ஒரு டிகிரி சர்டிபிகேட்டை எப்படி பல காப்பிகள் எடுக்கிறோமோ, அது போல. இந்த code, தன்னைத்தானே காப்பி எடுத்துத் தள்ளுகிறது. நம் கம்பியூட்டர் தான் அதற்கு ஜெராக்ஸ் மெஷின். எக்கச்சக்கமான code காப்பிகள் பெருகி கம்யூட்டரில் நிரம்பியதும் நம் கம்பியூட்டர் அது சாதாரணமாகச் செய்யும் வேலைகளைச் செய்ய முடியாமல் திணறுகிறது (“கம்யூட்டர் ரொம்ப ஸ்லோ ஆயிடுச்சி”). அல்லது செயலிழக்கிறது (“கம்யூட்டர் நின்னு போச்சு”).

COVID-19 போன்ற வைரஸ்களை நாம் நம் உடம்புக்குள் இறக்கிக்கொள்கிறோம் (இதுவும் கம்யூட்டர் வைரஸ் போல. அதுவே தானே ‘வராது.’ நாம் தான் தெரிந்தோ தெரியாமலோ இறக்கிக்கொள்கிறோம்). நம் உடம்பு தான் வைரஸ்களின் ஜெராக்ஸ் மெஷின். COVID-19 வைரஸ்கள் தங்களை நம் உடம்புக்குள் ஜெராக்ஸ் செய்துத் தள்ளினால் நம் உடல்நலம் குறைகிறது. இன்னும் அதிகமானால், மரிக்கிறோம்.


7. வைரஸ்கள் எப்படிப் பரவுகின்றன?

நம்மைப் போன்ற நகரும் விஷயங்களால் தான். உதாரணமாக, டெங்குகாய்ச்சலை உருவாக்கும் வைரஸ், ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்குப் பரவ, பழைய டிரக்குகளின் டயர்கள் காரணமாக இருந்தன. இந்த பழைய டயர்களை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு ஏற்றுமதி செய்தபோது, அவற்றின் உள்ளே தேங்கியிருந்த தண்ணீரில் தங்கியிருந்த கொசுக்களால் தான் இந்த டெங்குகாய்ச்சலைத் தரும் வைரஸ்களும் புதுப்புது கண்டங்களுக்குத் தாவித் தழைத்தன.

இப்படித்தான் நகரக்கூட முடியாத வைரஸ் எங்கும் பரவுகிறது.


8. COVID-19 வைரஸ்களில் கூட, இந்த வகை, அந்த வகை என்கிறார்களே? ஜெராக்ஸ் எடுத்தால் ஒரே மாதிரி தானே வரணும்?

நல்ல கேள்வி. வைரஸ்கள் தங்களை ஜெராக்ஸ் எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சம் Photoshop செய்து எடுக்கின்றன.

உதாரணமாக, ஒரு வடிவேலு படமே பல மீம்ஸ் வடிவங்களில் வருவதைப் பார்த்திருக்கிறோம். ஏனென்றால் மீம்ஸ் உருவாக்குபவர்கள் ஒவ்வொரு தடவையும் அதைச் சற்றே மாற்றுகிறார்கள். அதே வடிவேலு போட்டோ தான். ஆனால் கொஞ்சம் மாறியிருக்கும்.

இப்படி மாற்றி மாற்றி உருவாக்கும் வடிவேலு மீம்ஸ்களில், சிலது ‘பிச்சிக்கிட்டு போய்’ வைரல் மீம்ஸ் ஆகும். சிலது ஆளில்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும். இந்த வடிவேலு மீம்ஸ் தான் வைரல் ஆகும் என்று எந்த மீம்ஸ் உருவாக்கும் நண்பருக்கும் தெரியாது. ‘செஞ்சி பகிர்வோம், எப்படிப் போகுது பார்ப்போம்’ என்பது தான் அணுகுமுறை.

வைரஸ்களும் இப்படித்தான். ஒவ்வொரு முறையும் வைரஸ்கள் தங்களை ‘ஜெராக்ஸ் + கொஞ்சூண்டு Photoshop’ முறையில் காப்பி எடுக்கும்போது, புது வகையில் எந்த வகை நிற்கும் எது அழியும் என்று அவற்றுக்கும் தெரியாது. ‘செஞ்சி பகிர்வோம், எப்படிப் போகுது பார்ப்போம்’ என்பது தான் வைரஸ்களின் அணுகுமுறையும். அந்தப் புது வகைகளில் சில ‘பிச்சிக்கிட்டு போய்’ பரவும்போது, புது வகை வைரஸ் என்று மருத்துவர்கள் அதை அடையாளம் காண்கிறார்கள்.


9. வைரஸ்களை நாம் ஒழிக்க முடியாதா?

முடியாது. வைரஸ்கள் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கும். நம் உடம்பை அவை ஜெராக்ஸ் + Photoshop மெஷினாக பயன்படுத்துவதைத் தடுப்பது மட்டும் தான் மனிதர்கள் செய்யக்கூடிய காரியம். அங்கே தான் அறிவியல் தன் கவனத்தைச் செலுத்துகிறது.


நன்றி.

(“அட, அதுக்குள்ளே கெளம்பிட்டீங்களா? இருங்க! வைரஸ் எப்படி நம்ம உடம்பை ஜெராக்ஸ் மெஷினா பயன்படுத்துது? வாக்சின் எப்படி அதைத் தடுக்குது? புது வகை வைரஸ் பழைய மருந்துக்கு ஏன் அஞ்ச மாட்டேங்குது? இதெயெல்லாம் பேசாம போனா எப்படி?” என்று கேட்டால், அது நியாயமான கேள்வி.

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

இப்போதைக்கு, இந்தப் பதிவுக்கு ஜெராக்ஸ் மெஷின் முக்கிய பகுதி என்றால், இது பற்றிய அடுத்த பதிவுக்கு பூட்டு-சாவி முக்கிய பகுதி என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)


“வைரஸ்கள் எப்படிப் பரவுகின்றன?

நம்மைப் போன்ற நகரும் விஷயங்களால் தான்.” - வீட்டில் இருங்கள்.


“COVID-19 போன்ற வைரஸ்களை நாம் நம் உடம்புக்குள் இறக்கிக்கொள்கிறோம் (இதுவும் கம்யூட்டர் வைரஸ் போல. அதுவே தானே ‘வராது.’ நாம் தான் தெரிந்தோ தெரியாமலோ இறக்கிக்கொள்கிறோம்). “ - மாஸ்க் போடுங்கள்.


—பயணி தரன்

20210524


வடிவேலு படம்: கூகுள் இமேஜஸ்