சிந்தனை, செய்தி, சில்லறை...20210525

ஒளி அணைந்த தருணம், விடுபட்டது மனது

புத்தர் காலத்துப் பெண் துறவிகளின் கவிதைகள்

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

பத சாரா எனும் பெண் துறவியின் கதை புத்த மதம் பற்றிய புத்தகங்களில் பிரபலமானது. வசதியான குடும்பத்தில் பிறந்த பத சாரா, ஒரு வேலைக்காரனுடன் ஓடிப்போய், கர்ப்பமாகி, வீட்டுக்குத் திரும்பி வரும் பொழுதில் வழியிலேயே மழைப்புயலில் பிரசவமாகி, பிள்ளையும் கணவனும் இறக்க, சோகத்தில் பித்தாகி அலைந்தவர். புத்தரின் அருகாமையில் சோகம் விலக, துறவியாகிறார். ஆனால் மனம் அலைபாய்ந்தபடி இருக்கிறது. ஒரு நாள் வறண்ட நிலத்தில் ஊற்றிய நீர், முதலில் கொஞ்சமும், பிறகு மீதியுமாக நிலத்தில் ஈர்க்கப்படுவதைப் பார்க்கிறார். மனிதரின் ஆயுளின் நீளம் மாறினாலும் கடைசியில் எல்லாம் மண்ணில் போகும் என்று உணர்கிறார். ஒரு நாள், படுக்கும் முன்பு விளக்கின் திரியை இழுத்து அணைத்த கணத்தில், வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலையாவது எப்படி என்று புரிந்துபோகிறது. இதை அவர் கவிதையாக எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்:

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

“பாதம் கழுவிட ஊற்றிய நீரில் இன்னொரு பயன் கண்டேன்

முதலில் கொஞ்சம், பின்பு மீதியென எல்லாம் நிலத்தில் சேர்ந்தது.


பின்பு குதிரையை அடக்குதல் போலே சித்தத்தை நான் அடக்கினேன்.

ஒற்றைத் தீபம் கைக்கொண்டு விகாரத்துள்ளே நுழைந்திட்டேன்


பாயைப் பார்த்து நின்றேன், திண்டின் மேல் அமர்ந்தேன்

ஊசி ஒன்றைக் கைக்கொண்டு திரியைப் பின்னால் இழுத்தேன்

ஒளி அணைந்த தருணம், விடுபட்டது மனது.”


* * * * * * *

பத சாரா போன்ற, புத்தர் காலத்தை ஒட்டிய பெண் துறவிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘தேரீ காதா’ எனும் புத்தகமாகும். ‘தெரீ’ என்றால் பெரியவர்கள், மூத்த பெண் துறவிகள் என்று பொருள். கி.மு. 400 வாக்கில் காஞ்சிபுரத்தில் பிறந்து புத்தத் துறவியான தர்மபாலர் இக்கவிதைகளுக்கு உரை எழுதித் தொகுத்துள்ளார்.

திருத்திய மொழியான சமஸ்கிருதத்துக்கு முந்திய காலகட்டத்தில் இயல் மொழிகளான பிராக்ருத மொழிகள் பரவலான பயன்பாட்டில் இருந்தன. அவற்றில் ஒன்று பாலி மொழி. புத்தரும் மகாவீரரும் வாழ்ந்த கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருந்தன. ஆனால், மதக் கருத்துகளை எழுத்தில் பதித்தவர்கள் மிகக் குறைவு. எழுதப்பட்டப் புத்தகங்களில் பல பாலி மொழியில் எழுதப்பட்டன. ‘தேரீ காதா’வும் ஒரு பாலி மொழிப் புத்தகம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஏற்கெனெவே வெளிவந்துள்ளன. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்ல்ஸ் ஹேலிஸி (Charles Hallisey) ஆங்கிலத்தில் மீண்டும் மொழிபெயர்த்திருக்கிறார். கவிதைகளே வழிநடத்தும் உணர்வுப் புரிதலுடன் இந்தப் புத்தகத்தை அணுகி மொழிபெயர்த்ததாக முன்னுரையில் விளக்குகிறார் மொழிபெயர்ப்பாளர். Infosys நாரணாயமூர்த்தியின் குடும்பம் நிதியுதவி செய்து, ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும் மூர்த்தி இந்தியச் செவ்விலக்கிய நூலக வரிசையில் (Murty Classical Library of India) இந்தப் புத்தகம் 2015இல் வெளிவந்துள்ளது. 290 பக்கங்கள் கொண்ட தரமான பதிப்பு 221 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

புத்தகத்தின் ஒரு பக்கம் ரோமன்/ஆங்கில எழுத்துக்களில் பாலி மொழி மூலமும், எதிர்ப்பக்கத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளன. சற்றே நிதானமாகப் படித்தால், பாலி மொழியில் உள்ள வரிகளில் கூட, தீபம், விகாரம், ஜீவிதம் போன்ற பல சொற்களை அடையாளம் காண முடிகிறது. இதிலுள்ள 73 கவிதைளும் அளவு வரிசைப்படி 16 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எழுதிய பெண் துறவிகளின் பெயர்களே கவிதைகளின் தலைப்பாக அமைகின்றன. ‘தெரீகா’ என்பவரின் இரண்டடிக் கவிதையில் துவங்கி, ‘சுமேதா’ என்பவரின் நீண்ட நெடுங்கவிதையில் முடிகிறது இந்தப் புத்தகம்.

புத்த மதத்தின் மிக ஆரம்பத்திலே துறவிகளானவர்களின் தொகுப்பு இது. உலகிலேயே பெண் எழுத்தாளர்களின் முதல் கவிதைத் தொகுப்பு என்னும் இலக்கிய வரலாற்றுச் சிறப்பு பெற்றது. புத்த மதத்தின் தேரா வாதப் பிரிவின் முக்கிய நூல்களை திரிபீடகம் - மூன்று கூடைகள் என்று பிரிப்பார்கள். அவற்றில் சுத்த பீடகம் என்னும் கூடையில் உள்ள புத்தங்களில் ஒன்று தான் ‘தெரீ காதா’.

அந்தக் காலத்தின் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், பெண்களின் நிலை பற்றியம், புத்த மதம் பரவிய வகை பற்றியும், புத்த மதத்தின் கோட்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது இந்தப் புத்தகம். ‘மரணமே நிகழாத வீட்டிலிருந்து கடுகு வாங்கி வந்தால் உன் செத்துப்போன குழந்தையை உயிர்ப்பிக்கிறேன்’ என்று புத்தர் சொன்னதால் தெளிவு பெற்ற துறவியின் கவிதை இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. பரத்தைக் குலத்திலிருந்து துறவியானவரின் கவிதை இருக்கிறது. மாட மாளிகைகளைத் துறந்துத் திருவோடு ஏந்தியவர்களின் கவிதை இருக்கிறது. புத்தரின் அத்தையாக புத்தரைத் தாலாட்டி வளர்த்து, அவர் துறவியானதும் தானும் துறவியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு முதல் புத்தப் பெண் துறவியான கோதமியின் கவிதை கூட இருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் புதுக்கருக்குக் குலையாத கவி உணர்வும், மூச்சும் எச்சிலும் ரத்தமுமான மனித உயிர்ப்பும் நம்மை ஈர்க்கின்றன. ஆனால் எல்லா கவிதைகளிலும் ஒரு மகா நிதானம். ஒரு கல்யாணம் காட்சிக்கெனப் போன இடத்தில், குடும்பத்துப் பெரியவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து அவர்கள் நமது கைவிரல்களைப் பற்றிக்கொண்டிருக்க, அவர்களின் மெல்லிய குரலில் அவர்களது கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பது போல இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு சில வரிகளின் தமிழ் மொழியாக்கம்:


வீரா, எப்படி அறிவது என்பதை அறிந்தவளே,

இதுவே உன் கடைசி, இந்த உடலைக் கவனி.

வெறும் மரணம் சுமப்பதாக இதை மாற்றி விடாதே.

—(வீரா)

* * *


மகனே, என் வெட்கங்கெட்டக் கணவரும், அவர் வேலை செய்த நிழல் தடுப்பும்

நீர்ப்பாம்பு வீச்சம் அடிக்கும் என் பானையும் அருவருப்பைத் தருகின்றன.


என் கோபத்தையும் தாபத்தையும் ஒழித்தபோது

மூங்கில் பிளக்கும் ஓசை நினைவு வந்தது.

ஒரு மரத்தடிக்குச் சென்று “ஆ! ஆனந்தமே!” என நினைத்தேன்.

அந்த ஆனந்தத்தின் உள்ளிருந்து தியானம் செய்யத் துவங்கினேன்.

—(சுமங்களாவின் அம்மா)

* * *


உப்பிரிக்கு புத்தர் சொன்னது


அம்மா, வனத்தில் “ஓ! ஜீவா!” என்று புலம்புகிறாய்

சமாதானப் படுத்திக்கொள், உப்பரி.

எண்பத்தி நாலாயிரம் பெண் குழந்தைகள்,

எதைக்கொண்டு அவர்களை உயிர் என்றோமோ

அதே பெயர் அவர்கள் எல்லோருக்கும்

அனைவரும் இந்தச் சுடுகாட்டில் எரிக்கப்பட்டார்கள்

எனவே, எந்தப் பெண் குழந்தைக்கு துக்கிக்கிறாய் நீ?


—(உப்பிரி)

* * *


மாறன் சோமாவுக்குச் சொன்னது:

முனிவர்கள் அடையத் துடிக்கும் இடத்தை அடைவது கடினம்

பெண்களால் இயலாதது

முக்கியமாக, இரண்டு விரற்கடை அளவே ஞானமுள்ளவர்களால்


சோமாவின் பதில்:

பெண்ணாயிருப்பதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

சலனமில்லா மனமும் நிஜம் காணும் குணமுமே முக்கியம்.

உனக்கு இன்பமெனப் படுபவை எனக்கல்ல

மன இருள்குவியல் பிளந்து திறக்கப்பட்டது

தீமையே, இதை அறிக: நீ தோற்றாய், நீ முடிந்தாய்.


—(சோமா)




—பயணி தரன்

20210525

(இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் 20170219 அன்று ஹிந்து தமிழ் நாளேட்டில் வெளியானது)


இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: