சிந்தனை, செய்தி, சில்லறை...20210528

அநியாய 'அமைதி'
(Silence of Injustice)

முந்தைய அநியாயத்து மேல கட்டப்பட்ட 'அமைதி,' இன்னைக்கும் எதிர்காலத்துலயும் அநியாயத்தை வளர்க்கத் தான் உதவுது.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

“இந்த வாட்ஸாப் குழுவில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கலாமே?” மாதிரியான செய்திகள் இப்போ அதிகம் வருது. ஏன்? முக்கியமா, ரெண்டு காரணங்கள்: (1) பழைய நண்பர்களோட தொடர்பு கிடைக்குது. (2) புது விஷயங்கள் பேசப்படுது.

இந்தப் புது விஷயங்கள் ஜாதி / மதம் ரீதியா இருக்கும்போது, இதுக்கெல்லாம் அடிப்படையான அரசியல் ரீதியா இருக்கும்போது, ‘இதையெல்லாம் தவிர்க்கலாமே?’ன்னு குரல் வருது. அதிலும், “முன்னாடியெல்லாம் நாம எவ்வளவு அன்பா ஒத்துமையா வேறுபாடு பாராட்டாம இருந்தோம்”ன்னு ஒரு பொற்காலத்தை இழந்துட்ட மாதிரி ஃபீலிங்கோட அதைச் சொல்றாங்க. நிஜமா அப்படியா பொற்காலமாவா இருந்துது?

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

சொல்லப்போனா நிலைமை இதைவிட மோசமா இருந்துது. ஜாதியும்மதமும் ஒடுக்குமுறையும் இன்னும் அதிகமா அநியாயமா இருந்துது. நண்பர்கள் வீட்டுச் சமையல் அறையை ஜாதித் தீட்டுப் படாம பெரியவங்க பாதுகாத்தாங்க. யார் யார் கூடச் சேரணும், யார் எந்த விஷயத்துக்குக் கூடணும்னு கறாரா கணக்குப் பண்ணி செஞ்சாங்க. சின்னவங்களோ, பெரியவங்களோ, தங்களுக்கு விதிக்கப்பட்ட வரையறைகளுக்குள்ள நின்னாங்க. சிறுபான்மை மத ரீதியான புறக்கணிப்புகள், அவமானங்கள் சகஜமா இருந்துது. இதுக்கெல்லாம் அடிப்படையான அரசியல் அறிவு யாருக்கும் வந்திடாமே ‘தானுண்டு, தன் வேலையுண்டு’ன்னு இருக்கப் பழக்கினாங்க.

இப்போ, நிலைமை மாறுது. விதிக்கப்பட்ட வரையறைகளை ஜனங்க கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. “இது ஏன் இப்படி இருக்கு? இப்படித்தானே இருக்கணும்?”ன்னு முழிச்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க. “வாட்ஸாப்ல இந்த மெசேஜ் அனுப்பியிருக்கீங்களே, அது நெஜம்னு தோணலையே? ஏன் அனுப்பினீங்க?”ன்னு கேள்வி கேக்கறாங்க. “நிஜம்னு தெரியாமலே அதை அனுப்பணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு?”ன்னு அடிப்படை வாழ்வு அரசியலைப் பேசறாங்க. “இந்த அநியாயத்தைப் பார்த்தீங்களா?”ன்னு செய்திகளைப் பகிர்ந்துக்கறாங்க. அதுவும் அடிப்படை அரசியல் மூர்க்கத்தால் ஜாதி - மத அநியாயம் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலகட்டத்தில் இது போன்ற செய்திகள் நாள்தோறும் சவுக்கடியாய் வந்து இறங்குது.

அப்போ தான் சிலர் சொல்றாங்க, “இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கலாமே? முன்ன மாதிரி அமைதியாய் இருக்கலாமே?” சொல்றவங்க யாருன்னு பார்த்தா, சமூகத்தோட ஏற்றத்தாழ்வுல அனுகூலமான இடத்திலே இருக்கறவங்க. “அட, ஆமால்ல? முன்ன மோசமா இருந்துருக்கு. இப்போவாவது இந்த அநியாயமெல்லாம் தெரிய வருதே, கொஞ்சமாவது மாறுதே”ன்னு சொல்ல மாட்டேங்கறாங்க. அதுக்கு பதில், “முன்ன மாதிரியே வாய மூடிக்கிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட எடத்திலேயே சத்தம் போடாம இருந்துக்கங்க”ன்னு சொல்றாங்க. “சமூகம் எப்படி இருக்கு, அது எப்படி இருக்கணும், அந்த மாற்றம் எப்படி வரும், அதுக்கு எதிரா யார் இருக்காங்க, யாரெல்லாம் மாற்றத்துக்கு உதவறாங்க” மாதிரியான விஷயங்கள் ‘அமைதி’யைக் குலைக்குதுன்னு சொல்றாங்க. “முன்பு போலவே அன்பாய் இருப்போம், ஓம் ஷாந்தி!”ங்கறாங்க.

இந்த மாதிரி ஆட்களுக்காக, “உன்னோட சாந்தி, வேதா, கீதாவெல்லாம் நீயே வெச்சிக்கோ. முந்தைய அநியாயத்து மேல கட்டப்பட்ட ‘அமைதி,’ இந்தக் காலத்துலயும் எதிர்காலத்துலயும் அநியாயத்தை வளர்க்கத் தான் உதவுது. அநியாயத்துக்கு எதிரா சத்தம் போட்டால் தான் சமத்துவம் வரும். நாங்க பேச வேண்டிய காலம் இது”ன்னு சொல்றத்துக்காக //அநியாய 'அமைதி’//ங்கற இந்தக் கவிதையை எழுதினேன்:


அநியாய 'அமைதி' (Silence for Injustice)


எங்களது குரல்வளையை மிதித்தபடி

“ஏன் நாம் எல்லோரும்

எப்போதும்போல் சத்தமின்றி

அமைதியாய் இருக்கக்கூடாது?”

என்று கேட்காதே.


காலங்காலமாய்

நாறும் பிணங்களை

நகர்த்திடும் சத்தம்

நாராசமாய் இருக்கலாம் உனக்கு.


முனகவும் வழி இன்றி

முடிந்துபோன கோரம் போதும்.


எங்களது குரல்வளையின் வழிவரும்

கடைசி மூச்சு என்றாலும்

குரல் உயர்த்திச் சொல்லுவோம்,

“உனது கள்ள வன்மத்தின்

காலம் முடிந்தது,

காலை எடுடா!”

- பயணி தரன்

20210528



இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: