அனுபவம், உதவி, பரிமாற்றம்...20210529

ஏமாற்றிய கர்ணனும் வாரி வழங்கும் பரியேறும் பெருமாளும்

மாரி செல்வராஜ் நல்ல படம் எடுத்திருக்கிறார். ஆனால், கர்ணன் நல்ல படம் அல்ல. இன்னும் நல்ல படங்கள் எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திலும் அதற்கான சத்தியங்கள் தலைகாட்டுகின்றன.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

நேற்று, மாரி செல்வராஜின் கர்ணன் பார்த்தோம்.

படம் பற்றிச் சொல்லும் முன்பு நான் இயக்குநர் மாரி செல்வராஜைப் பற்றி எனது கருத்தைச் சொல்லிவிடுகிறேன். வெற்றிமாறனுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகுக்கு நல்வரவு இவர். பரியேறும் பெருமாள் என்னுடைய ‘சமீபத்தில் வந்த மிகச் சிறந்த மூன்று தமிழ்த் திரைப்படங்கள்’ பட்டியலில் இருக்கிறது. (மீதி இரண்டும்: ஆடுகளம், சுப்ரமணியபுரம். வெற்றிமாறனின் அசுரன் வரையான எல்லாப் படங்களும் பார்த்துவிட்டேன். ஆடுகளம் தான் நிற்கிறது).

ஆகவே, இதை நான் அன்புடனும் அக்கறையுடனும் ஆதங்கத்துடனும் தான் எழுதுகிறேன்.

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

படம் துவங்கிய உடனே இடித்தது. பாறையில் ஏறும் காட்சியில் ஹீரோ தலையில் சூரியன் தெரியவேண்டும் என்று பட்டப்பகல் காட்சியில் ஃபில்டர் போட்டு இருட்டடித்து ஷாட் வைத்திருந்தார்கள். “அச்சச்சோ, இதப் பாருங்க மாரி” என்பதற்குள் இசையமைப்பாளர் கிராமத்து ட்ரோன் ஷாட்டுக்கு Celloவையும் Brass setடையும் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். “ஐயையோ, மாரி, இவரையும் கவனியுங்க” என்று சொல்லலாம் என்று பார்த்தால், காட்சி நகர்ந்த வகையால், முக்கிய வினையே இயக்குநர் தான் என்று புரிந்தது. ஐந்தே நிமிடத்தில்.

கதைக்கருவைப் பொறுத்தவரை பஸ் பிரச்சனை, அதிகார வர்க்கம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த கதை, ஒடுக்கப்பட்டவர்களின் குரல் எழும்புதல் எல்லாம் இன்னும் மிக அதிகம் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் தான். ஆனால் இதையெல்லாம் தனுஷை முன்வைத்து ஹீரோ கதை சொன்னால், எம்ஜிஆர் ரிக்.ஷாகாரன் படம் எடுத்தது போலத்தான் வரும். யாரோ ஒரு சகலகலா வல்லவன் வந்து காப்பாற்றுவான். காலாவும் இந்த கதியில் தான் போய் விழுந்தது. கர்ணன் பார்த்தபோது பல முறை, ‘பரியேறும் பெருமாள் எடுத்தவரா இதை எடுத்திருக்கிறார்?’ என்கிற கேள்வி எழுந்தது. கதைக்கருவின் அமைப்பிலேயே இந்த வேறுபாடு துலங்குகிறது.

படத்தின் சிறப்பு கதாபாத்திரங்கள். சின்ன சின்ன பாத்திரங்களையும் கொஞ்சிக்கொஞ்சி எழுதிப் படைத்திருக்கிறார்.

திரைக்கதை படு இழுவை. இதன் இழுப்புக்குக் கட்டுப்பட்டுக் கதாபாத்திரங்கள் மண் சாலை, தார்ச் சாலை, வயல்வெளி, குளம் என்று இங்கிட்டும் அங்கிட்டும் படம் முழுக்க அலைகிறார்கள். எல்லாம் வல்ல ஹீரோவைப் படைத்துவிட்டால் இந்தச் சாபத்திலிருந்து தப்ப முடியாது.

ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால் மதிய வெளிச்சம், காலை வெளிச்சம், மாலை வெளிச்சம் என்றெல்லாம் பார்க்காமல் அழகே முதன்மையாய் ஒட்ட வைத்த காட்சித் துண்டுகளால் பல இடங்களில் ஏதோ போட்டோ ஆல்பம் பார்க்கிறமாதிரி இருக்கிறது. அந்த ஸ்லோ மோஷன்கள்களும் கண்ணராவி (இயக்குநர் வேலை). எடிட்டரோ மெரினா பீச்சில் பட்டாணி சுண்டல் மாங்காய் விற்கிறவர் போலப் பூனை நாய் மண்புழு குளோஸ்அப் லாங்ஷாட் என்று எல்லாவற்றையும் கலந்துகொட்டிக் கொடுக்கிறார் (மறுபடியும் இயக்குநர் தான் குற்றவாளி).

வச-வச-வச-னம் எழுதியவர், ‘இந்தக் காட்சியை இந்தப் பார்வையாளர்களாகிய முண்டங்களுக்கு எப்படி விளக்கப் போகிறேனோ?’ என்கிற உயர்வுச் சலிப்புடன் எழுதித் தள்ளியிருக்கிறார். இயக்குநரும், ‘சுமாரான வசனம் தான், ஆனா, கத்திக் கத்திப் பேசினாங்கனா ஒப்பேத்திடலாம்’ என்று இருந்திருக்கிறார்.

பின்னணி இசையோ ஊருக்கு வந்த சர்க்கஸ் கொட்டாய் மாதிரி அதுபாட்டுக்கு சுத்திக் கொண்டிருக்கிறது. நடுவில் நாலு சீனில் பறை அடித்துவிட்டால் போதாது. அதிலும், ஊரே தீவெட்டி வெளிச்சத்தில் ஒரு சின்ன போருக்குத் தயாராகும் montageக்குப் பின்னணியாய் வரும் அந்த உட்றாதீங்க அம்மோவ் பாட்டின் மெட்டும் இசையும் வஞ்சிரம் மீன்குழம்புக்கு சாக்லேட் கேக் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போல இருக்கிறது. மறுபடியும் இயக்குநர் தான் பொறுப்பு. இவரும் கூட்டுச் சேர்ந்துகொண்டு இதற்கெல்லாம் இடையே காட்டுப்பேச்சிகளை மைக்கல் ஜாக்சன் நடன அசைவுகள் கொடுத்து ஆட வைத்திருக்கிறார்.

சொல்லப்போனால், நடிகர்களாலும் கலை இயக்கத்தாலும், ஒளிப்பதிவினாலும் தான் இந்தப்படம் ஓரளவு சுமாராக வந்திருக்கிறது. நடிகர் தேர்வு பிரமாதம். கலை இயக்கத்தில் (ஆடை அமைப்பு உட்பட) நல்ல அணுகுமுறை, நல்ல செயல்படுத்தல். இயக்குநருக்கு இதற்கெல்லாம் பாராட்டு உண்டு. ஆனால், மொத்தத்தில் படத்தைக் கெடுத்ததில் அவருக்கு இதைவிடப் பெரிய பங்கு இருக்கிறது.

ஒரு கலைஞன் கலையை விட தன்னை அதிமுக்கியமாக நினைத்துக்கொள்ளும் போது நடக்கும் பல கோராமைகள் கர்ணன் படத்தில் நடந்திருக்கின்றன. அதேபோல, மக்களை அசத்துகிறேன் பார் என்று மார்தட்டிக்கொண்டு வந்தாலும் சாயம் வெளுத்துவிடும். முன்பெல்லாம் நாங்கள் தியேட்டரில் மணிரத்னம் படம் பார்க்கும்போது அடக்கமுடியாமல் சிரித்துவிடுவோம். அக்கம் பக்கம் இருக்கிறவர்கள் எங்களை உச்சுக்கொட்டி அடக்குவார்கள். இந்தப் படம் பார்க்கும்போதும் பல இடங்களில் சிரிப்பு வந்துவிட்டது. பெரிய பட்ஜெட்டும் சூப்பர்ஸ்டார்களும் மாரியை மாற்றி விட்டார்கள்.

மாரி செல்வராஜ் நல்ல படம் எடுத்திருக்கிறார். ஆனால், கர்ணன் நல்ல படம் அல்ல. இன்னும் நல்ல படங்கள் எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திலும் அதற்கான சத்தியங்கள் தலைகாட்டுகின்றன. போலீஸ் ஸ்டேஷனில் கதவை மூடிவிட்டு ஊர்ப்பெரியவர்களை அடிக்கும் காட்சி, வெற்றிமாறனின் விசாரணை படத்தில் வரும் இதுபோன்ற காட்சிகளை விட நன்றாக, நிஜமாக, வந்திருக்கின்றது. ரஜிஷா-தனுஷ் உறவின் காலூன்றிய தன்மை புத்துணர்வு தருவது. படத்தின் செட்டும் ஊரும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதும், நடிகர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதும் சாமானிய வேலை அல்ல. இயக்குநரின் நெறிப்படுத்துதல் மட்டுமே இதைச் சாத்தியமாக்கும்.

சற்றே விலகி, திரையுலகின் இன்னொரு நோயையும் சுட்டிவிடுகிறேன். ஓரிரு வெற்றிப்படங்கள் எடுத்ததும், அந்த இயக்குநருக்கு மற்றவர்கள் நல்லது-கெட்டது சொல்லும் வழி அடைந்துபோகிறது. ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’களாகி, ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்ற சூழல் உருவாகிறது. ஒரு கலைஞன் பயப்படவேண்டிய வெளி இது. இது தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமல்ல. உலகத் திரைப்படங்களிலிருந்து இரண்டு உதாரணங்கள்:

1. Children of Heaven என்கிற அற்புதமான படத்தை எடுத்த இரானிய இயக்குநர் மஜித் மஜிதி, ஏறத்தாழ அதே நடிகர்களை வைத்து The Song of Sparrows என்ற மட்டமான படத்தை எடுத்தார்.

2. In Pursuit of Happyness என்கிற அற்புதமான படத்தை எடுத்த கேப்ரியேலி முஷீனோ, அதே வில் ஸ்மித்தை ஹீரோவாக வைத்து Seven Pounds என்கிற மட்டமான படத்தை எடுத்தார்.

இந்த இரண்டு உதாரணங்களிலும் உள்ள மட்டமான படங்களுக்கும் கர்ணனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எல்லா கதாபாத்திரங்களும் கதையின் தத்துவத்தை விளக்கி விளக்கி வசனமாகப் பேசுவதும் படத்தின் குறியீடுகள் படம் முழுக்கக் குறுக்கும் நெடுக்கும் போவதும் உடனே நினைவுக்கு வருகிறது.

தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்வதும், மற்றவர்களின் எதிர்க்கருத்துக்குச் செவிமடுப்பதும் கலைப் பயணத்தின் முக்கியக் கூறுகள். இல்லாவிட்டால், ‘படத்தில காட்டுப்பேச்சி கை தட்டுவது உங்களுக்குத்தான் அண்ணே’ என்கிற ஆட்கள் சூழ்ந்துகொள்வார்கள்.

இப்போது மீண்டும் நான் மாரி செல்வராஜ் பற்றி ஆரம்பத்தில் எழுதியிருப்பதைப் படியுங்கள்: "வெற்றிமாறனுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகுக்கு நல்வரவு இவர். பரியேறும் பெருமாள் என்னுடைய ‘சமீபத்தில் வந்த மிகச் சிறந்த மூன்று தமிழ்த் திரைப்படங்கள்’ பட்டியலில் இருக்கிறது. ஆகவே, இதை நான் அன்புடனும் அக்கறையுடனும் ஆதங்கத்துடனும் தான் எழுதுகிறேன்."

பிராயச்சித்தமாக, பரியேறும் பெருமாள் (நான்கு முறை பார்த்துவிட்டேன். இன்னும் பார்ப்பேன்.) ஏன் தமிழ்ப்படங்களில் முக்கியமான படமாக நிலைக்கும் என்று என் பார்வையில் சற்றே விரிவாக எழுத நினைத்ததையாவது சீக்கிரம் எழுதிவிட வேண்டும்.


ஏமாற்றிய கர்ணனும் வாரி வழங்கும் பரியேறும் பெருமாளும்

—பயணி தரன்

20210529



இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: