அனுபவம், உதவி, பரிமாற்றம்...20210828

நான் ஏன், எப்படி, இந்தப் பழக்கத்தை 20+ ஆண்டுகளாகத் தொடர்கிறேன்?

ஜிம்முக்குப் போவது அவசியம் இல்லை என்று வாதிட்டுக்கொண்டிருந்த நான், 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியைத் துவக்கக் காரணம், ஹாங்காங்கில் ஒரு டாக்டர். வேலைப்பளுவுக்கு நடுவே உடம்பு சொன்ன அபாய சிக்னல்களைப் பார்த்து பயந்து அவரிடம் போனேன். அவர், “உடற்பயிற்சி தான் மூளைக்குக் காலை உணவு” “Exercising is the breakfast for the brain” என்று எனக்குப் புரியவைத்தார்.

உடனே புரிந்துகொண்டாலும், இந்திய அயலுறவுப் பணியில் (Indian Foreign Service) இருப்பதால், தொடர்ந்து நாடு விட்டு நாடு மாறும் என்னுடைய உண்மையான நாடோடி வாழ்வில் இந்தப் பழக்கத்தைத் தொடர்வது எளிமையாக இல்லை. ஹாங்காங், பெய்சிங், தில்லி, ஃபிஜி, வாஷிங்டன், தாய்வான் என்று ஒவ்வொரு இடங்களிலும் பல வழிகளைக் கண்டுபிடித்து, எனது குடும்பப் பொறுப்புகள், அலுவலகப் பொறுப்புகள் கூடுவதற்கு இடையில், பல வகைகளில் என் தினசரி வாழ்க்கையை மாற்றி இதைத் தொடர்கிறேன்.

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

- மாலையில் ஜிம்

- மதியம் சாப்பிடவில்லை என்றாலும் ஜிம்முக்கு நேரம் கிடைத்தால் போதும்

- அதி காலையில் எழுந்து பெண்ணைப் பள்ளியில் விட்டுவிட்டு, மனைவியை பணியிடத்தில் விட்டுவிட்டு, ஜிம்முக்குப் போய் விட்டு, நேரத்துக்கு அலுவலகத்துக்குப் போவது - என்று ஊருக்கு ஊர் பல மாற்றங்கள். ஆயினும் தொடர்கிறது இந்த உடற்பயிற்சிப் பழக்கம்.

எனது வேலைக்கு, எனது மூளைக்கு இது முக்கியம் என்கிற புரிதல் உண்டு. கூடவே, உடற்பயிற்சி செய்தபிறகு நாளெல்லாம் மின்மினியாய் வரும் மகிழ்ச்சி குறித்து நிஜமான காதல்.

போனஸாக, இமயத்தில் கைலாச மலைப் பயணம், தாய்வான் ‘மாரியம்மா’வுடன் நடைப்பயணம், 1000 கி.மீ சைக்கிள் பயணம், தாய்வானின் மலை உச்சியில் ஏறுதல், என்று வாழ்வின் மறக்கவியலா நினைவுகள் கூட்டும் வாய்ப்புகள். இப்போது தில்லி வந்து (இதுவரை) 33 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நண்பர்களுடன் சைக்கிள் பயணமும் செய்ய முடிந்தது.

இப்படித் தொடர்கிறது இந்தப் பழக்கம். இந்தக் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.