3-2-1: இந்த நொடி தான் தண்ணி, எம்.ஜி.ஆர் திரைப்படங்கள், திறந்த கதவு.

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(26 டிசம்பர் 2020)

வணக்கம், சக பயணியே!

நலந்தானே? இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

இந்த நொடி தான் தண்ணி

இந்த விஷயம் தமிழில் வந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். சும்மா இல்லை, பிரமாதமாக வந்திருக்கிறது என்று நண்பர் விவேகானந்தன் சொன்னபோது ஆஹா என்றிருந்தது.

டேவிட் ஃபோஸ்டர் வாலஸ் (David Foster Wallace) என்னும் அமெரிக்க சம நீதி போராட்டக்காரரின் “இது தான் தண்ணீர்” என்னும் உரை மிகப் பிரசித்தம். பிறமொழி நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் வேலையே இப்போதுதான் ஓரளவு சூடுபிடித்திருக்கிறது. இதில் உரை போன்ற பல கலைச்செல்வங்களை யார் எப்போது மொழியாக்கம் செய்து தமிழுக்குக் கொண்டுவரப் போகிறார்களோ என்னும் ஆதங்கத்துடன் அவரது ஆங்கில உரையை எனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன். “இந்த உரையை அடிப்படையாக வைத்து தமிழில் ஒரு பாடலே வந்துள்ளது. ‘குரங்கன்’ என்னும் இந்த இசைக்குழுவின் பாட்டைக் கேளுங்கள்” என்று ஆற்றுப்படுத்தினார் விவேகானந்தன். கேட்டேன். ரசித்தேன்.

ரெண்டு குட்டி மீன்கள், மெல்ல நீந்தி போச்சாம் என்று துவங்கும் கதைப்பாடல், அழகாக வளர்ந்து,

“தண்ணி இதுதான், தண்ணி இதுதான், தண்ணி இதுதான், இந்த நொடி தான் தண்ணி” என்று வாலஸின் கருத்தைப் பளிச்செனச் சொல்கிறது.

பாடலை (வரிகளும் கார்ட்டூனும் சேர) இங்கே கேட்கலாம்: https://www.youtube.com/watch?v=0VUkHHMhgm0

‘குரங்கன்’ இசைக்குழு இப்போது இல்லை என்று அறிந்தேன். பாதகமில்லை. வேறொரு வடிவில் வேறொரு வகையில் வேறொரு வார்ப்பில் விஷயங்கள் தொடரும். இந்த நொடி தான் தண்ணீர்.



(ii)

எல்லோருக்கும் திறந்த கதவு

‘ஒளியும் ஒலியும்’ காலம் நினைவிருக்கிறதா? வெள்ளிக்கிழமை மாலைகளில் ஒரு மணி நேரத்துக்குக் கருப்புவெள்ளையில் ஒரு பத்துத் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். வாரம் முழுதும் அதற்குக் காத்திருந்து பார்த்தவர்கள் உண்டு. இப்போது எந்தப் பாடலும் விரல்நுனியின் கட்டளைக்குக் காத்திருக்கும் நிலை. இதன் தொடர்ச்சியாக ‘சாத்தூர் முறுக்கு,’ ‘திருநெல்வேலி அல்வா,’ ‘ஹைதராபாத் பிரியாணி’ என்று அனைத்தும் இணையத்தளத்தின் நீளும் கரங்களுக்குள் வந்துவிட்டன. இந்தியாவில் எங்கே இருந்தாலும் அனுப்பிவைக்கிறார்கள்.

‘என்ன இருந்தாலும் அந்த ஊர் போல வராது, அந்தக் கடை போல வராது’ என்று சிலர் இன்னும் திண்ணையில் நாக்கைச் சுழற்றிக்கொண்டிருந்தாலும், வேண்டியவர்களுக்கு எல்லாம் தேவைப்படும்போது கிடைக்க வழி பிறந்திருக்கிறது. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே (பாட்டு விஷயத்தில் LP Record Player நினைவிருக்கிறதா?) என்று இருந்த விஷயங்கள் தொழில்நுட்பத்தால் எல்லோருக்கும் என்று திறந்திருக்கின்றன. இன்னும் திறக்காதவை என்னென்ன என்று பார்த்து அவை எல்லோருக்கும் கிடைக்கும் வழி என்ன என்று பார்ப்பதே இப்போதைய தேவை.



(iii)

மேம்பட்டக் குரங்கு வகை

“நமக்கு பூமி மட்டும் பத்தாது. வேறு கிரகங்களை சீக்கிரம் கண்டுபிடித்துக் குடியேற வேண்டும்” என்றார் ஸ்டீபன். நிஜமாகவே ராக்கட்டில் வான்வெளிக்குச் செல்ல ரிசர்வ் செய்திருந்தார்.

இப்படி ஒரே நேரத்தில் பேரண்டத்தின் அசைவுகளையும், தனிமனித உணர்வுகளையும், அணுத்துகளின் சிதறல்களையும் அவர் அணுகினார். எல்லாவற்றிக்கும் முன்னே நாம் ஒன்றுமே இல்லையா என்ற கேள்விக்கும் பதில் வைத்திருந்தார்: “ஒரு சராசரி நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு சிறிய கோளத்தில் வாழும் கொஞ்சம் மேம்பட்டக் குரங்கு வகை தான் மனித இனம். ஆனால், நம்மால் பேரண்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். அது நம்மை சிறப்பானவர்களாக ஆக்குகிறது.”

அண்டத்தின் அணையா அறிவுச் சுடர்: ஸ்டீபன் ஹாவ்கிங் - பயணி தரன் கட்டுரையிலிருந்து.

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i) எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் பழமைவாதம் பற்றி எம். எஸ். எஸ். பாண்டியன்:

உரிமைக்குரல் (1976) திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் உற்சாகமாக இப்படிப் பாடுகிறார்:

“பொண்ணா பொறந்தாஆம்பள கிட்டே கழுத்தை நீட்டிக்கணும்அவன் ஒன்னு ரெண்டு மூன்று முடிச்சி போட்டா மாட்டிக்கணும்.”

ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் குடும்பத்தின் முக்கியக் கூறாக, பெண்களின் கற்புத்திறம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் கொண்டாடப்படுகிறது. கொடூரமாகத் தோற்றமளிக்கும் அரைகுறையாக ஆடையணிந்த ஆரணங்குகளால் நிரம்பியிருக்க, நாயகனைச் சுற்றி கற்புமிக்கப் பெண்கள் மட்டுமே இருப்பார்கள்... எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தியின் பழமைவாத பண்பையே போற்றுகின்றன.


பிம்பச் சிறை: எம்.ஜி.ராமச்சந்திரன் - திரையிலும் அரசியலிலும். மொழியாக்கம்: பூ. கொ. சரவணன்.


(ii) ஒரு நல்ல நாவலைப் படிக்கும்போது என்ன செய்வார் அ. முத்துலிங்கம்?

“ஒரு நல்ல நாவலைப் படிக்கும்போது அதிலே ஒரு நல்ல வசனம் வந்தால் அல்லதுஅபூர்வமான சொற்றொடர் ஒன்று காணப்பட்டால் புத்தகத்தை அப்படியே மூடி கீழே வைத்துவிட்டு கண்களை மூடி அந்த வசன அடுக்கை இன்னொருமுறை சொல்லிப் பார்ப்பேன். பிறகு என் தலையில் நானே அடித்துக்கொள்வேன். அட, என்ன அமைப்பு, என்ன நுட்பம், இது எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே என்று என்னை நொந்துகொள்வேன்.”

- பூமியின் பாதி வயது, உயிர்மை பதிப்பகம் (2007)

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

புத்தகம் இல்லாத ஏதேனும் ஒரு விஷயத்தைப் பிறமொழியில் கண்டு, இது தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததுண்டா? என்ன விஷயம் அது?

இது உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்: https://www.payani.com/Newsletter

உங்கள் நண்பர் உங்களுக்கு இதை அனுப்பியிருந்தால், தொடர்ந்து படிக்க இங்கே பதிவு செய்யுங்கள்: https://www.payani.com/contact

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் - வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை