3-2-1: உங்கள் செவிக்கும், ஓட்டு போடுதல், வனப்பூக்கள்

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(03 ஏப்ரல் 2021 - 2021/07)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

சிறிது உங்கள் செவிக்கும்

எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. கவித்தொகைக்கும் எனக்கும் இருபது வருடத் தொடர்பு இருந்தாலும் ஒரு வகையில் மார்ச் 28 பேசியதுதான் முதல்முறை நான் முழுக்க முழுக்கக் கவித்தொகை (Classic of Poetry / Book of Songs / Shijing / 詩經) பற்றி மட்டுமே உரையாற்றியது. (முன்பெல்லாம் சீன மொழிபெயர்ப்பு, சீன இலக்கியம் என்று பொதுவாகப் பேசும் வாய்ப்புகளின்போது கவித்தொகை பற்றிப் பேசியிருக்கிறேன்.) இன்னும் ஒருமுறை, அறிதல் கலைவெளி நண்பர்களுக்கு நன்றி.

பயணிக்குறிப்புகள் மின்னஞ்சல் மூலமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் பவானீஸ்வரி, காளிதாஸ் அசோக், நா.பாலசுப்பிரமணியன், தீபா ஸ்ரீதரன், கோபால் கருணாநிதி ஆகியோர் நேரடியாக உரையின் ஜூம் சந்திப்பு வழியாகவும், பிறகு மின்னஞ்சல் மூலமாகவும் உரை பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். சிறப்பு நன்றிகள்!

சுட்டி இதோ. உங்களுக்கு விருப்பப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாய்ப் போக வசதியாய் சில முக்கியப் பகுதிகளுக்கான சுட்டிகளாய் கொடுக்கிறேன். எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியத்துக்கும் கவித்தொகைக்கும் இடையே இருக்கும் ஒப்பீடு பற்றிய பகுதிக்கான சுட்டியை க்ளிக் செய்தால், நேரடியாக அந்த இடத்திலிருந்து காணொளி துவங்கும்.

ஏற்கனவே சில நூறு பேர் பார்த்திருக்கிறார்கள். இயன்றால் உங்கள் செவிக்கும் சிறிது கிடைக்கச் செய்யுங்கள்.

0:00 முதல் 0:08 நிமிடங்கள் - துவக்க உரையும் அறிமுகமும்: சுட்டி

0:08 முதல் 1:29 நிமிடங்கள் - எனது உரை, சங்க இலக்கியத்துக்கும் கவித்தொகைக்கும் உள்ள ஒப்புமைகள் பற்றித் துவங்குகிறது: சுட்டி

(நேரடியாக, கவித்தொகை ஒரு இலக்கியம் என்பது பற்றித் தெரிந்துகொள்ள: சுட்டி

1:29 முதல் 2:32 வரை பிரமாதமான கலந்துரையாடல்: சுட்டி




(ii)

கேரம் போர்டும் வனப் பூக்களும்

சமீபத்தில் சில நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். நாங்கள் தாய்வானிலிருந்து இந்தியா வரும்போது சுற்றப்பட்ட துணியிலிருந்து கேரம்போர்டை வெளியே எடுத்தோம். சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் காட்டுச் சுனையில் நீர் அருந்தும் ஜீவன்கள் போல கேரம்போர்டின் ஓரங்களில் உட்கார்ந்து காபி குடித்தபடி அரட்டை அடித்துப் பேசிச் சிரித்து கேரம் விளையாடினோம். வெற்றி தோல்வி என்பதெலாம் மறைய வனப் பூக்களின் வாசம் வீட்டை நிறைத்தது.



(iii)

தமிழைப் பருகுதல்

நம்மில் பலரையும் போல, எனக்கும் தமிழில் எழுத்துப்பிழை வரும். தவறில்லாத தமிழை எழுத வாணி பிழைதிருத்தி (http://vaani.neechalkaran.com/) போன்ற விஷயங்களைப் பயன்படுத்தினாலும், அதன் அடிப்படையில் உள்ள விதிமுறைகளைக் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிந்துகொள்ள ஆசை. நல்ல தமிழ் எழுதுவது பற்றித் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மகுடேஸ்வரனின் நூல்களில் ‘தமிழ் அறிவோம்’ நூல்வரிசையை (மொத்தம் 11 நூல்கள். தபாலுடன் ரூ 1400) வாங்கினேன். நல்ல தமிழை காபி பருகுவது போல் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும் எனும் ஆசை. தற்காலத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு மற்றும் தன்மை குறித்த இத்தனை நூல்களை எழுதி (நல்ல தமிழை எளிமையாக எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு), தரமாகத் தயாரித்து (அட்டைகளின் pastel வண்ணங்களில் சொக்க ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க வேண்டும்), எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வது (அவரது வங்கிக்குப் பணம் அனுப்பிய சில நாட்களில் நூல்கள் வந்து சேர்ந்தன) அரிய தொண்டு. பதினொன்று என்ன, பல நூறு ‘ஓ!’ போடலாம்.

மகுடேஸ்வரனின் பேஸ்புக் பதிவுக்கான சுட்டி


பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

ஓட்டு போடுதல் பற்றி சபாடோ

“எல்லா தேர்தலும் ஓட்டுப் போட வெளியே வருபவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.”

—லேரி சபாடோ



(ii)

உரை பற்றி உரைத்தவர்கள்

கனிவுடன் பலர் எனது கவித்தொகை பற்றிய உரைக்குப் பின்னூட்டங்கள் வழங்கினார்கள். ‘அருமையான உரை’ போன்ற பொதுவான பின்னூட்டங்களை விட்டுவிட்டு பளிச்சென வெளிப்பட்ட ஒரு சில வரிகள்:

“ஒரு புதிய சாளரத்தைத் திறந்து வைக்கின்றார்.”

“இரண்டரை மணி நேரம் என்பது ஏதோ திரைப்படம் பார்ப்பது போல சட்டென்று முடிந்துவிட்டது.”

“.....அவர்களின் கவித்தொகை, நமக்கு களித் தொகை.”

“இந்த உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின், மீண்டும் ஒரு முறை ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ படிக்கும்போது, அந்நூலை தாங்கள் எழுதிய பிண்ணணிகளோடு படித்து ரசிக்கமுடிகிறது.”

“அதிகாலை மூன்றரைக்கு ஆரம்பித்து ஒன்றரை மணி நேர பேச்சைக் கேட்டு முடித்தேன். வருடித் தலை கோதிச் செலலும் தென்றலாக குரல். . இரண்டு மணி நேரத்திற்கு முன் அறிமுகமான கவித் தொகை நூலின் மேல் இத்தனை பிரமிப்பை கொண்டு வர முடியும் என்றால் அதன் பின் இருக்கும் கற்பனை செய்து விட முடியாத அளவு உழைப்பு இன்னும் அதிக பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த உரையையும், உரையாடலையும் வெவ்வேறு காரணங்களுக்காக பலமுறை கேட்கலாம். வாழும் ஆவணம்.” (வெளிநாட்டில் வாழும் நண்பர்)

“மிக நீண்ட சீன இலக்கிய வரலாற்றையும் கவித்தொகையில் தாம் கண்டு வியந்த சில நுட்பமான கவித்துவத்தையும் அவர்களின் சிந்தனைகளையும் மிக எளிய தமிழில் அதே சமயம் அனைவருக்கும் புரியும்வகையில் நேர்த்தியான ஒரு உரை.”

“நேற்றைய உரை ஓர் அற்புதம். பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷனோடு ஒவ்வொரு ஸ்லைடாய் காட்டி தன் உரையை வகுத்துக்கொண்டு அவர் நிகழ்த்தியவிதம் மிகச் சிறப்பாய் இருந்தது. பார்வையாளர்களுக்கு எளிதில் புரிய இது உதவியாய் இருந்தது.”

“மிகுந்த ஆர்வமூட்டிய உரையாடல்... ஆர்.பாலகிருஷ்ணன், ஐஏஎஸ் அவர்கள் கூறியதுபோல் உங்களிடமிருந்து தமிழ்ச்சமூகம் இன்னும் எதிர்பார்க்கிறது....”


உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

நீங்கள் சிறுவயதில் ஆடிய ஆட்டங்களில் எந்த ஆட்டத்தை இப்போதும் தொடர்ந்து ஆடுகிறீர்கள்?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்த மின்னஞ்சலையே நண்பருக்கு Forward செய்யுங்கள்.

அல்லது,

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)