ஸ்பாரோ விருது

ஸ்பாரோ இலக்கிய விருது

SPARROW Literary Award

2016ஆம் ஆண்டின் ஸ்பாரோ* இலக்கிய விருதின் பாராட்டுப் பத்திரம். (*SPARROW - Sound & Picture Archives for Research on Women)


ஸ்ரீதரன் மதுசூதனன் என்ற பயணி, இதழாளர், நாடகச் செயல்பாட்டாளர், சிறுகதையாளர் என்று இயங்கியவர். எனினும் மொழிபெயர்ப்பாளராக வெளிப்பட்ட அவருடைய ஆளுமையே இலக்கிய முக்கியத்துவம் கொண்டது. தமிழில் எந்த மொழிபெயர்ப்பாளருக்கும் எட்டாத தளத்தில் அவரது செயல்பாடு அமைந்திருக்கிறது. சீன மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மேற்கொண்ட ஆக்கங்கள் பயணியை முதன்மையானவராகவும் ஒப்பீடற்றவராகவும் நிலைநிறுத்துகின்றன. பண்டைச் சீனத்தின் கவித்தொகையையும் புதிய சீனத்தின் நோபல் பரிசுப் படைப்பையும் நவீனத் தமிழுக்கு கொண்டு வந்த அவரது மகத்தான பங்களிப்புக்காக 2016ஆம் ஆண்டின் ஸ்பாரோ இலக்கிய விருதை அவருக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

ஏற்புரை

ஒரு சிறு குழந்தை குளத்துத் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி ஒரு குப்பியில் நிரப்புவது போல மொழிபெயர்ப்பாளர் செயல்படுகிறார். விரலிடுக்குகளில் வழிந்தோடிவிடும் நீர் பற்றிய கவலை சொல்லி மாளாதது.

10 December 2016

SPARROW அமைப்பினருக்கு எனது நன்றிகள்.

விருது ஏற்புரையாக இங்கு நான் சொல்பவை, ஏற்கனவே நான் எனது மொழிபெயர்ப்பு நூல்களின் முன்னுரைகளிலும் நூல் வெளியீட்டுவிழாக்களிலும் சொல்லிவரும் கருத்துகளே.

பொதுவாக மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், சிறப்பாக சீன மொழியிலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பரவலாகப் பேசக்கூடிய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. சீனத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதென்பது பலப்பல சிக்கல்களை உள்ளடக்கியது. என்னைப்போன்ற மொழித்தட்டுப்பாடு உடைய ஒருவர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது சூழலின் வறட்சியை எடுத்துக்காட்டுகிறது. இது மாறவேண்டும் என்கிற அவாவும் எனது மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று.

மொழிபெயர்ப்பின் நுண்ணிய சிக்கல்களைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அடிப்படையில் அவை மொழிகள் தோன்றியது பற்றிய புரிதலை வேண்டுகின்றன. அவை மூல மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களுக்கு ஈடான சரியான சொற்களைக் கண்டுபிடிப்பது பற்றிய சிக்கல்கள் அல்ல. ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள ஒரு மனித சமூகத்தின் கூறுகளை இன்னொரு சமூகத்துக்கு எடுத்துச் செல்லுவதில் உள்ள சிக்கல்கள் அவை. இதைச் செய்துவிட முடியாது என்பதும் ஆனாலும் செய்தாக வேண்டும் என்பதும் தான் மொழிபெயர்ப்பின் இரு முக்கிய நிஜங்கள். இதனால் தான் மொழிபெயர்ப்பின் வரிகள் பேரார்வத்திலும் நிராசையிலும் அவநம்பிக்கையிலும் மூர்க்கவெறியிலும் தோய்த்து எழுதப்படுகின்றன.

அதிலும் சீன இலக்கியம் பற்றி நமக்கு இவ்வளவு குறைவாகத் தெரிந்திருப்பது பலவகையிலும் நல்லதில்லை என்பது வெளிப்படை. சீன மொழியிலிருந்து தமிழுக்கு வரும்போது மொழியமைப்பு, பெயர்களின் உச்சரிப்பு, வரலாறு கருவுண்ட எழுத்துச் செறிவு என்று பல படிகளில் சவால்கள் உண்டு.

நான் எடுத்துக்கொண்ட நூல்களின் அழகும், இலக்கியச் செறிவும், வரலாற்று முக்கியத்துவமும், பண்பாட்டுப் பகிர்வின் சாத்தியங்களும் என்னை இச்செயலில் இறங்கத் தூண்டின. இந்த மொழிபெயர்ப்புகள் வெளிவந்த பிறகாவது, நல்ல மொழித்திறனும் கவித்திறனும் உடைய யாராவது இதை சிறப்பாக மொழிபெயர்ப்பார்கள் என்று நம்பியே இந்த வேலையில் நான் இறங்கினேன். இந்த இலக்கியப் பரிணாம வளர்ச்சியில் பின்னாளில் நலன்கூடும் எனும் நம்பிக்கையிலும் ஆசையிலும், இன்றைக்கு விலங்காகவோ, காட்டுமனிதனாகவோ இருக்க உடன்படுகிறேன்.

ஒரு சிறு குழந்தை குளத்துத் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி ஒரு குப்பியில் நிரப்புவது போல மொழிபெயர்ப்பாளர் செயல்படுகிறார். விரலிடுக்குகளில் வழிந்தோடிவிடும் நீர் பற்றிய கவலை சொல்லி மாளாதது.

இவற்றுக்கிடையில் இந்த விருது ஒரு ஆசுவாசம்.

என் பதிப்பாளருக்கும் வாசகர்களுக்கும் SPARROWவுக்கும் நன்றி.


அன்புடன்

பயணி