3-2-1 க்ரியா ராமகிருஷ்ணன், சைக்கிள் பயணம், மருந்தாய் முதல் நாவல்...

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(28 நவம்பர் 2020)

வணக்கம், சக பயணியே!

நலந்தானே? இதோ என்னிடமிருந்து 3 பயணிக்குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

என்னிடமிருந்து 3 பயணிக்குறிப்புகள்

(i) இதற்குள் 13 வாரங்கள் - 13 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் முடிந்துவிட்டன. தில்லி வந்ததிலிருந்து அயலுறவுத்துறை நண்பர்களுடன் வாரம் ஒருமுறை சைக்கிள் பயணம் செல்கிறேன். நண்பர் உமா மகேஸ்வரி எங்கள் குழுவுக்காக இந்த அழகான டீ-ஷர்டுகளை வடிவமைத்துத் தயாரித்து அன்பளிப்பாக அனுப்பினார்.

இந்த வாராந்திரப் பயணங்களை அவ்வப்போது எனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிகிறேன்.


(ii) க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு பேரிழப்பு. எனது ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ நூலில், சீன இலக்கியத்தைத் தமிழாக்கம் செய்தல் கட்டுரையின் இறுதிப் பத்தி இது:

“...கடைசியாக, தமிழாக்கத்தின் தமிழ் நடை பற்றியும் ஒரு குறிப்பு தருவது நல்லதென்று படுகிறது. பழமையான இலக்கியத்தை மொழியாக்கம் செய்யும்போது, அந்த பழமையின் வாசம் கொஞ்சமாவது தமிழாக்கப்பட்ட பாடல்களில் வீச வேண்டும் எனும் எண்ணம் முன்பு எனக்கிருந்தது. பாடல்களை மொழிபெயர்த்து முடித்தபிறகு, கவித்தொகையை அறிமுகப்படுத்தும் வகையில் கட்டுரைகள் எழுதத் துவங்கினேன். கவித்தொகை பற்றிய உரைநடைகளும் சற்றே கடினமான மொழிநடையைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, கவித்தொகையைப் பற்றிய அறிமுகக் கட்டுரையின் தலைப்பு ‘உடன்பிறவாத் தோழமையின் மேன்மையை மெச்சுவோம்’ என்று இருந்தது. வழக்கம்போல் பல நண்பர்களுக்கும் இதை மின்னஞ்சலில் அனுப்பிப் பின்னூட்டம் வேண்டியிருந்தேன். பல நண்பர்கள் பின்னூட்டம் அளித்திருந்தனர். சிலர் அனுப்பவில்லை. அனுப்பாதவர்களில் ஒருவர் க்ரியா ராமகிருஷ்ணன். மின்னஞ்சலில் முடியாது; நேரில் பேசினால்தான் விளக்க முடியும் என்றார். 2010இன் துவக்கத்தில் விடுமுறைக்காகச் சென்னை சென்றபோது நானும் அச்சமயம் சென்னையில் பணியாற்றத் துவங்கியிருந்த ராமநாதனும் க்ரியா அலுவலகம் சென்றோம். அங்கே க்ரியா ராமகிருஷ்ணனும் கவிஞர் ஆசையும் கட்டுரையையும் அதனிடையே தரப்பட்டிருந்த எடுத்துக்காட்டுப் பாடலையும் வரிவரியாக வாசித்துக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்கள். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருப்போம் என நினைக்கிறேன். முக்கியமான அறிவுரையாக தமிழ் நடையை எளிமையாக்குங்கள் என்றார் ராமகிருஷ்ணன். கவிதையுணர்வு என்பது எளிய சொற்களிலும் சொல்லப்படக்கூடியதே என்று விளக்கினார். இதற்குப் பிறகு அதுவரை மொழிபெயர்த்திருந்த அத்தனை பாடல்களையும் மீண்டும் படித்துத் திருத்தினேன். எழுதியிருந்த கட்டுரைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் எழுதினேன்.”


(iii) #படித்து_முடித்தேன்: ‘குறுங்கதை என்பது ஒரு வீரியமுள்ள விதை. ஒரு தோட்டாவைப் போல, ஒரு சவுக்கைப் போல, ஒரு மின்னலைப் போல, வேகமும் வெடித்தன்மையும் கொண்டு அந்தக் கதை செயல்பட வேண்டும்’ என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், ஒரு போன்சாய் மரத்தைப் போலப் பெருங்கதைகளுக்கான நிதானமும், கால நீட்டமும் முழுமையான உருவமும் கொண்ட குறுங்கதைகளையும் படைக்க முடியும் என்று செய்துகாட்டியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித். இவரது 64 குறுங்கதைகளின் தொகுப்பு ‘பின்னணிப் பாடகர்’ எனும் நூலாக வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக ‘தாம்பத்யம்’ என்னும் குறுங்கதையைச் சொல்லலாம். மொத்தம் 17 வரி. கோவிட் கால வறுமையில், சித்தாள்களாக வேலை செய்யும் தம்பதிகளின் வாழ்வின் ஒரு துண்டு - அன்பும் பரிவும் புரிதலும் இயல்பாய் மிளிர, எந்தவகை மிகையுமில்லாமல் தண்ணென்று சொல்லப்பட்டுவிட்டது.

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i) வளரும் எழுத்தாளர்களுக்கு முதல் நாவல் ஒரு மருந்து போல என்கிறார் இங்கிலாந்து எழுத்தாளர் அலெக்ஸ்சாண்டர் ஸ்மித்:

“வளரும் எழுத்தாளர்கள் அவர்களது முதல் நாவலில் ரொம்பவும் உழன்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று நான் எப்போதும் சொல்லுவேன். அதை எழுதிமுடித்த கணத்திலேயே அவர்கள் இரண்டாவதைத் துவங்க வேண்டும் - அது எப்போதும் முதலாவதை விட நன்றாக இருக்கும். முதல் நாவல் என்பது பல சமயங்களில் ஒரு மருந்து போல, தனிப்பட்ட பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும். அதைச் செய்து முடித்துவிட்டால், அடுத்த விஷயத்துக்கு நகர வேண்டியதுதான். உங்கள் முதல் நாவல் எந்தக்காலத்திலும் அச்சிடப்படாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஆனால் உங்கள் இரண்டாவது நாவல் அச்சிடப்படலாம்.”

(ii) உலக நூலைப் படிக்க, பயணிக்கவேண்டும் என்கிறார் 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித அகஸ்டின்:

"உலகம் ஒரு நூல். பயணிக்காதவர்கள் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் படிக்கிறார்கள்.”

- புனித அகஸ்டின் (4ஆம் நூற்றாண்டு)

உங்களுக்கு 1 கேள்வி

சில நேரங்களில் யாரென்றே தெரியாது நாம் கடக்கும் முகங்களின் ஒரு கணத்துப் புன்னகை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவதுண்டு. அப்படிப்பட்ட புன்னகையை நீங்கள் பிறருக்கு அளித்ததுண்டா? கடைசியாக எப்போது?

உங்களுக்குப் பிடித்திருந்தால், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:

https://www.payani.com/Newsletter

மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

பயணி தரன்